Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 71

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

அதிகாரத்தின் துணையோடு, இன்னொருவரின் தொழிலையும் ஏரியாவையும் ஆக்கிரமிக்கும் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதால் வன்முறையும் பெருகியது.

ரெண்டாம் ஆட்டம்! - 71

அதிகாரத்தின் துணையோடு, இன்னொருவரின் தொழிலையும் ஏரியாவையும் ஆக்கிரமிக்கும் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதால் வன்முறையும் பெருகியது.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

மதுரைக்குள் வெவ்வேறு தொழில்களைக் கட்டுப்படுத்தி வந்தவர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளுக்காக வேலை செய்யத் தொடங்கியதால், இதுவரையிலும் கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒழுங்குகள் குலையத் தொடங்கின. “எத்தன நாளைக்கித்தாண்டா கத்தியையும் அருவாளையும் தூக்கிட்டுத் திரியிவீங்க. கர வேட்டி கட்டினமா, பதவிக்குப் போயி சொகுசா செட்டில் ஆனமான்னு இருக்கப் பாருங்கடா...” என ரவியண்ணன் அத்தனை பேரையும் தன் பக்கமாக இழுத்துவிட்டிருந்தார். அவரின் மீது நம்பிக்கை இல்லாமலிருந்தவர்கள்கூட ஜெகதியின் வளர்ச்சியைக் கண்டு நம்பத் தொடங்கினார்கள்.

அதிகாரத்தின் துணையோடு, இன்னொருவரின் தொழிலையும் ஏரியாவையும் ஆக்கிரமிக்கும் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கியதால் வன்முறையும் பெருகியது. முன்பெல்லாம் போதையடித்துவிட்டு குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. எப்போது மதுரைக்குள் மாத்திரையை இறக்கினார்களோ அப்போதிருந்து மீசை முளைக்காதவர்களெல்லாம் கத்தியைத் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

போலீஸ் ஸ்டேஷன்களில் தீர்க்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கை ஒருபுறம் பெருகிக்கொண்டிருக்க, தீர்க்கப்பட வேண்டிய ஆட்களின் வரிசைகளையும் மேலிடத்தில் தயார் செய்துகொண்டிருந்தார்கள். கோட்டைச்சாமி குடும்பத்துக்கும் செல்வத்துக்கும் இடையிலாக வளர்ந்துகொண்டிருந்த பகையைப்போலவே வெவ்வேறு ஏரியாக்களில் கோஷ்டி மோதல்கள் நடந்துகொண்டிருந்தன. தங்கராஜ் – மோகன் கோஷ்டி, ஆறுமுகம் – கணேசன் கோஷ்டி, புல்லட் மணி – ரவி கோஷ்டி என ஒவ்வோர் ஏரியாவிலும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு ரத்தம் குடிக்கக் காத்துக்கொண்டிருந்தவர்கள் ஏராளம். ஆயிரத்திலும், லட்சங்களிலும் வந்த வருமானமெல்லாம் இப்போது சின்னதாகி கிரானைட் குவாரிகள், பெரிய கம்பெனிகள், நகைக்கடைகள் என மதுரையைச் சுற்றி வருமானம் வரக்கூடிய சாத்தியமுள்ள தொழில்கள் பெருக, அவற்றைக் கட்டுப்படுத்தும் வெறியும் பெருகியது.

செல்வம் விட்டேத்தியாக எதையும் கண்டுகொள்ளாமலிருந்ததால், அவனை நம்பி சரக்கு ஓட்டிய எல்லோரும் கவலைப்படத் தொடங்கினார்கள். சேகரும் முத்தையாவும் அவர்களில் சிலரை அழைத்து “நாங்க சொன்னா கேக்க மாட்டான்யா… நீங்களே நேர்ல வந்து பாருங்க. உங்க பேச்சுக்குக் கட்டுப்படுவான்” என யோசனை சொன்னார்கள். வியாபாரிகளும் மறுக்காமல் வீட்டில் முடங்கிக்கிடந்த செல்வத்தைப் பார்க்க வந்தார்கள். செல்வம் சங்கடத்தோடு அவர்களை எதிர்கொண்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 71

“இங்கேரு செல்வம், நீ சரக்கு ஓட்டப் போறேங்கற தைரியத்துலதான் கோட்டச்சாமி தம்பிங்களயெல்லாம் பகைச்சுக்கிட்டு நாங்க ஒனக்குப் பின்னாடி நிக்க சம்மதிச்சோம். ஆனா இப்ப நீ எதையும் கண்டுக்காம இருக்க. நேத்து இன்னியாரம் மதுரைக்கிப் பொழைக்க வந்த அந்தப் புள்ள என்னவோ நான் வெச்சதுதான் சட்டம்னு ஆடிக்கிருக்கு,. நல்லதுக்கில்ல பாத்துக்க…”

நீண்டகாலப் பழக்கம்கொண்ட ஒருவர் சடவாய்ச் சொன்னார். “எதுக்குய்யா இப்பிடி பொறுமிக்கிட்டு தனியா கெடக்க. நாங்க இத்தன பேரும் உனக்காக இருக்கோம். உன் பயக இருக்காய்ங்க. வேற என்ன யோசன உனக்கு?” இன்னொருவர் அவனது அமைதியைச் சலனப்படுத்த, ஆமோதிப்பதுபோல் தலையசைத்த செல்வம், “யாரும் இந்த வாரம் கலெக்‌ஷன் காசக் குடுக்காதீங்க. நம்ம ஆளுங்களயெல்லாம் விரகனூர் தோப்புக்கு வரச் சொல்லுங்க. பேசிக்கலாம்” என்று சொல்லி அனுப்பினான்.

அடுத்த நாள் விரகனூர் தோப்பில், செல்வத்தின் வாக்குக்குக் கட்டுப்பட்டு மதுரைக்குள் சரக்கு ஓட்டும் அத்தனை வியாபாரிகளும் கூடியிருந்தனர். தென்னங்கீற்றுகளுக்கு நடுவே கசிந்த சூரிய வெளிச்சம் பொன்னொளியாய் ஜொலித்தது. சேகரும் முத்தையாவும் எல்லோருக்கும் இளநீர் வெட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கருப்புவுக்கு பயந்து வெவ்வேறு ஊர்களுக்கு ஓடிக்கொண்டிருந்த சேகர், தங்களுக்குப் பின்னால் இத்தனை பேர் ஆதரவிருக்கிறதெனச் சந்தோஷப்பட்டான். செல்வத்தோடு அவனது நண்பர்களும் அங்கு வந்துசேர, கூடியிருந்தவர்களிடம் உற்சாகம் பற்றிக்கொண்டது. செல்வத்தின் முகத்தில் தெரிந்த புதிய மலர்ச்சியில் நம்பிக்கை ஒளிர்ந்தது. எல்லோரையும் பொதுவாகப் பார்த்துக் கும்பிட்டான்.

“என் பேச்ச மதிச்சு வந்திருக்கீங்க. சந்தோசம். நடுவுல கொஞ்ச நாளா எல்லாரும் சங்கடப்படற மாதிரி ஏதேதோ நடந்துபோச்சு. அதுக்காக மன்னிச்சுக்கங்க. இனி எல்லாம் சரியா நடக்கும். நான் இருக்கேன், சோண இருக்கான். எங்கப்பா இருக்காரு. எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசிக்கலாம்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பாகவே ஒருவர்,

“சரிப்பா செல்வம், சரக்கு எப்பவும்போல வருமா?” எனச் சந்தேகத்தோடு கேட்டார்

“ஏண்ணே, இன்னிக்கி நேத்தா நாம தொழில் பண்ணிட்டு இருக்கோம்?”

“இல்லப்பா... இப்பல்லாம் அந்தப் புள்ளையே நேரடியா சரக்க எறக்குதாம், அதனாலதான் கேட்டேன்”

“அவ ஆத்தக் கண்டாளா அழகரக் கண்டாளா… என் மூலமா பழக்கமான எல்லாத்தையும்வெச்சு மஞ்சக் குளிச்சுக்கிட்டு இருக்கா. மொத்தமா ஓச்சு விட்டுடறேன்...” என அதுவரையில்லாத கடுமையோடு செல்வம் சொல்ல, எல்லோரும் அதோடு அமைதியானார்கள்.

ஒரு வாரத்துக்கும் மேலாக, சரக்குக்கான பணம் வந்து சேராததால், ஜெகதி தன் தம்பியை விசாரித்து வரச்சொல்லி அனுப்பினாள். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை யாவாரிகளிடமிருந்து பணம் வர வேண்டும் என்பது ஒப்பந்தம். ஒரு வாரமாகியும் பணத்தைக் கொடுக்காமலிருந்ததால் பிசிறடித்தது. தனக்கு எதிராகச் சதிவேலைகள் நடக்கலாம் என அச்சமுற்றாள். அதை உறுதிசெய்யும்விதமாக சுரேஷும் காணாமல்போனான். சோணை, விஜி, ஆறுமுகம் என செல்வத்துக்கு நெருக்கமானவர்கள் எல்லோருமே வீட்டுப் பக்கம் வருவதை நிறுத்திவிட்டிருக்க, தன்னை பலமிழந்தவளாக உணர்ந்தாள். சுரேஷை மீட்க வேண்டுமென்கிற பதற்றம் அதிகரித்தபோது, “செகதி, எல்லா பக்கமும் பகையாக்கிவெச்சுருக்க. ஆனா மத்தவங்கள நம்பறதவிட நீ செல்வத்த நம்பலாம். கஷ்ட நஷ்டத்துல அவன்தான் ஒதவியா இருந்திருக்கான்” என அவளது சித்தப்பா சொல்ல, “அவனுமே இப்ப என்மேல கோவமாத்தான சித்தப்பா இருப்பான்” எனத் தடுமாறினாள்.

“அப்ப அவனவிடு, சேகரு... இல்ல அவங்கப்பா முத்தையா ரெண்டு பேத்துல யாரையாச்சும் புடிச்சுப் பேசு. பேசினாத்தான் பிரச்னை தீரும்” என அவர் சொன்னதை கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 71

முத்தையாவையும் சேகரையும் சந்திக்க முயன்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச, மார்க்கெட்டுக்கு பவுசு வாங்க சோணையைச் சிரமப்பட்டு தேடிப்பிடித்தாள். அவன் கண்களிலோ உடலிலோ இவளைப் பொருட்படுத்தும் எந்த அக்கறையுமில்லை. சாதாரணமாகக் கடந்துபோனவனை அவசரமாக மறித்து நிறுத்தியவள், “ஏய் என்னா சோண, உன் பாட்டுக்கு பாத்தும் பாக்காத மாதிரி போற?” என சத்தமாகக் கேட்டாள். சோணை திரும்பிப் பார்த்து கேலியாகச் சிரித்தான். “அதுசரி நான் நின்னு பேச நீ என்ன எனக்கு மாமன் மகளா... மச்சான் மகளா?” என்றதும், அவனோடு இருந்தவர்களும் சத்தமாகச் சிரித்தார்கள். அவளுக்கு சுள்ளென உடல் எரியத் தொடங்கினாலும் ஆத்திரத்தைக் காட்டிக்கொள்ளாமல் “அடப்பாவி நான் உங்களுக்கு என்னடா கெடுதல் செஞ்சேன்... ஏன் என்னய எதிரியா நெனைக்கிறீங்க?” எனக் குரல் கம்மக் கேட்டாள். “நீ என்ன கெடுதல் செய்யல? இந்த மார்க்கெட்டுக்காகத்தான் செல்வம் கோட்டச்சாமியவே பகைச்சான். ரத்தத்த சிந்தி நாங்க சம்பாதிச்ச மார்க்கெட்ட நீ நோகாம உன் வீட்டு ஆளுகளுக்கு எடுத்துக் குடுக்க திட்டம் போடுவ... நாங்க குடுத்துட்டு கையக்கட்டிக்கிட்டு நிக்கணும். நீ எல்லாம் லேசுப்பட்ட ஆள் இல்லத்தா… உன் மூஞ்சில முழிச்சாலும் பொடி மட்ட கிடைக்காதுன்னு கடுப்பாகித்தான் செல்வமும் நாங்களும் ஒதுங்கியிருக்கோம். தயவுசெஞ்சு போயிரு…” என எரிச்சலோடு சொல்லிவிட்டு நடந்தான். “ஏய் நம்ம பிரச்னைய அப்பறம் பேசிக்கலாம்டா... என் தம்பிய எங்கன்னு சொல்லுங்கடா…” என அழுகையை அடக்க முடியாமல் கதற, திரும்பிப் பார்த்த சோணை குழப்பத்தோடு “உன் தம்பியா? எங்களுக்கு எதுவும் தெரியாதே...” என்றான். அவன் வார்த்தைகளை நம்ப முடியாமல் அவள் ஓடிப்போய் சோணையின் சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

“இந்தாரு… எனக்கு ஒன்னயும் தெரியும், செல்வத்தையும் தெரியும். ஒழுங்கு மரியாதையா என் தம்பி எங்கன்னு சொல்லிரு…” எனக் கத்தியவளின் கைகளை விலக்கிய சோணை “பைத்தியக்காரியாட்டம் பேசாம, உன் தம்பிய வேற எங்கியாச்சும் தேடு. இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடு. நீதான் அரசியல்வாதியாச்சே… பெரிய புடுங்கியாட்டம் எல்லாருக்கும் அல்வா குடுத்துரலாம்னு நெனச்சேல்ல... அதான் எவனோ பெருசா தூக்கிவெச்சிருக்கான். போ…” சோணை அவளை விலக்கிவிட்டு அங்கிருந்து நகர, குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஜெகதிக்குத் தலைசுற்றியது.

செல்வம், சுரேஷைக் கடத்தியிருந்தாலோ, எதாவது செய்ய வேண்டுமென நினைத்திருந்தாலோ இந்த நேரத்துக்கு அவளுக்குத் தெரிந்திருக்கும். ரவியண்ணனுக்குக் கட்டுப்படக்கூடியவன் என்பதால், சுரேஷின்மீது எளிதில் கைவைக்க மாட்டான் என அறிவுக்கு எட்டியது. சுரேஷ் யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பாதவன். அவனுக்கு யார் கெடுதல் செய்யப்போகிறார்கள்? மூன்றாவது நாளும் கடந்த பிறகு, பொறுமை காக்க முடியாமல் கமிஷனர் அலுவலகத்துக்குக் கிளம்பியவளுக்கு சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அவசரமாக வரச் சொல்லி அழைப்பு வந்தது. அடித்துப் பிடித்து தன் சித்தப்பாவோடு சென்றவள், திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையோடு சேராமல் பழைய பாலத்தினருகில் காரைச் செலுத்தினாள். சற்று தூரத்திலேயே ஊர்க்காரர்களும் போலீஸ்காரர்களும் திரண்டிருப்பதைப் பார்த்து உடலதிர வாகனத்தை நிறுத்தியவள், அவசரமாக இறங்கிச் சென்றாள். முதிர்ந்த புளிய மரத்தின் கிளையொன்றில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில், உடல் சிதைக்கப்பட்ட சுரேஷ் தொங்கிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியோடு திரண்டு வேடிக்கை பார்த்த ஊர் மக்களை போலீஸ்காரர்கள் விரட்டிக்கொண்டிருக்க, ஜெகதி ஸ்தம்பித்துப்போய் நின்றாள். சிதைக்கப்பட்ட உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை அவனது வாயில் திணித்திருந்ததை கவனித்த ஜெகதிக்கு உறுதியாக ஒன்று மட்டும் தெரிந்தது, அவள் மனதுக்குள் இப்படி ஒலித்தது, ‘இத சத்தியமா செல்வம் செஞ்சிருக்க மாட்டான்!’

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism