மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 72

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

அம்மா, மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவள் மட்டுமல்ல, மொத்தக் குடும்பமும் அவளைச் சபித்துக் கொண்டிருந்தது,

சுரேஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, வீடு வருவதற்கு முன்பாகவே ஜெகதியின் முகத்திலும் சாவுக் களை படிந்துவிட்டது. அப்பா இறந்தபோதுகூட அவள் இத்தனை அச்சமும் கலக்கமும் கொண்டிருக்கவில்லை. சுரேஷின் இழப்பில் நொறுங்கிப்போயிருந்தாள். அவன் கொலைசெய்யப்பட்டு தொங்கவிடப்பட்டவிதம் அவளுக்கு ஏராளமான எச்சரிக்கைகளை உணர்த்தியிருந்ததால், இத்தனை நாள்கள் தன்னைச் சுற்றியிருந்த அதிகாரங்களும் ஒளிவட்டங்களும் சடாரென காணாமல்போனதுபோலிருந்தது.

“ஊரெல்லாம் நீ எழவக் கூட்டி வெச்சதனாலதாண்டி இன்னிக்கி எம்புள்ள அல்பாயுசுல போயிருச்சு… தட்டுவாணி முண்ட… ஊர் குடும்பத்தையெல்லாம் கெடுத்து சீரழிச்ச… இப்ப எம்புள்ள வாழ்க்கையவும் தரிசாக்கிட்ட… நீயெல்லாம் வெளங்குவியா…”

அம்மா, மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவள் மட்டுமல்ல, மொத்தக் குடும்பமும் அவளைச் சபித்துக் கொண்டிருந்தது, எந்தக் குடும்பத்துக்காக மான அவமானங்களைப் பொருட்படுத்தாமல், பகையைக் கண்டுகொள்ளாமல் இவ்வளவையும் செய்தாளோ அந்தக் குடும்பமும் இப்போது அவளுக்கு அவுசாரிப் பட்டம் கட்டியிருந்தது.

‘‘அடியேய்... ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்க, இம்புட்டு பேர நாசம் பண்ணி காரியம் சாதிக்கணும்னு நெனைக்கிறல்ல… நல்லா வாழ்ந்துருவோம்னு மட்டும் நெனைக்காத. புழுபுழுத்துதான் சாகப்போற… வயிறு எரிஞ்சு சொல்றண்டி…’’ என ஜெகதியின் அம்மா வாய் ஓயாமல் சாபமிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க மாட்டாமல் ஜெகதியின் சித்தப்பா “அத்தாச்சி, பெத்த பிள்ளைக்கு நீயே சாபம் குடுத்துட்டு இருக்க… அவ யாருக்கும் எந்தக் கெடுதலும் நெனைக்கல. தன்னச் சுத்தி இருக்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைச்சதாலதான் இன்னிக்கி ஊரையே பகைச்சுக்கிட்டு உக்காந்திருக்கா… எதையும் தெரியாம வார்த்தைய விடாதீங்க…” என அமட்டி, அமைதிப்படுத்தினார்.

ரெண்டாம் ஆட்டம்! - 72

சுரேஷின் உடல், வீடு வந்து சேர்ந்தபோது செல்வம் தன் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்குள்ளும் வாசலிலும் திரண்டிருந்த ஜெகதியின் உறவினர்கள் கதறியழுத ஓலம் அந்த வீதியை நிறைத்தது. பெண்கள் மாரிலடித்து ஒப்பாரி வைத்தனர். செல்வம் வாசலை அடைத்திருந்த பெண்களை விலக்கிச் செல்கையில், ஜெகதி உறைந்துபோய் அவனைப் பார்த்தாள். அவளைப் பொருட்படுத்தாமல் அவளுடைய அம்மாவிடம் சென்றவன் ‘‘எத்த... இப்ப காரியத்தயெல்லாம் இங்கியே வெச்சுக்கறதா இல்ல நாம பாண்டியூருக்குப் போயிரலாமா?’’ என்று கேட்டான். பெருங்குரலில் அழுதுகொண்டிருந்த ஜெகதியின் அம்மா செல்வத்தை அணைத்துக்கொண்டு, ‘‘இங்க வேணாம், இந்தத் தட்டுவாணி சிறுக்கி வீட்டுல எம் பயலுக்குக் காரியம் பண்ணக் கூடாது. பாண்டியூருக்குப் போயிருவோம் செல்வம்...’’ எனக் கதறினாள். ஜெகதியால் அந்தச் சாபங்களையும் வசைகளையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தம்பியின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைப் பற்றிக்கொண்டு ஓவென அழத் தொடங்கினாள். மற்றவர்களின் அழுகையிலிருந்து வேறாயிருந்தது ஜெகதியின் கதறல். தான் அனாதையாக்கப்பட்டுவிட்டதை உணர்ந்த கதறல்.

“சோண, உடனே ரெண்டு டெம்போவ வரச் சொல்லு, நம்ம வண்டியவும் தயார் பண்ணிக்க… பாண்டியூர் போறோம்னு எல்லார்கிட்டயும் தாக்கல் சொல்லு… போஸ்டர் அடிக்கச் சொல்லியிருந்தேனே என்னாச்சு?’’

‘‘பிரின்ட் முடிஞ்சு நம்ம பயக ஒட்டிட்டு இருக்காய்ங்க செல்வம்...”

“சரி... இங்க ஆக வேண்டியத அவய்ங்க பார்த்துக்கட்டும். நீ இவங்க எல்லாரையும் சீக்கிரம் கெளப்பி விடு…”

செல்வத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு சோணையும் அவன் நண்பர்களும் பரபரப்பாக இயங்கினார்கள். கதறியழுததில் தொண்டை இறுகிப்போன ஜெகதியின் குரல் மாறிப்போயிருக்க, அழுகையை நிறுத்தாதவளாக தேம்பிக்கொண்டிருந்தாள். சுரேஷின் சவப்பெட்டியில் சாய்ந்துகிடந்தவளை வாரி அணைத்துக்கொண்ட செல்வம் “இப்ப அழுது எதுவும் ஆகப்போறதில்ல, வா…” என இறுக்கமாகச் சொல்ல, சாய்ந்துகொள்ளத் தோள் கிடைத்துவிட்ட மெல்லிய ஆறுதலில் ஜெகதி அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

பழைய தினமணி டாக்கீஸை ஒட்டிய அந்தச் சாலையில், பரபரப்பான காலை நேரம். அந்தச் சாலையின் முனையிலிருக்கும் சின்ன உணவகத்தின் இட்லி சாம்பாரும், மதிய உணவும் மதுரை முழுக்க பிரபலம். நான்கு பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய சிறிய கடைதான். விடிந்தும் விடியாமல் ஆட்கள் பார்சல் வாங்க வரிசையில் நிற்பார்கள். அந்தக் கடைக்கு வரும் அநேக வாடிக்கையாளர்களில் கருணாகரனும் ஒருவர். வழக்கு விவகாரம் எதுவானாலும் அலுவலகத்தில் வைத்துத் தீர்ப்பதுதான் வழக்கம், ஆனால் நெருக்கமானவர்களை மட்டும் இந்தக் கடையில் வைத்து சந்திப்பதுண்டு. இன்றைக்கு அவர் செல்வத்துக்காகக் காத்திருந்தார்.

பொதுமக்களுக்கு இடையிலான கட்டப்பஞ்சாயத்துகளைத் தீர்க்க கோஷ்டிகள் என்றால், கோஷ்டிகளுக்கு இடையில் நடக்கும் பஞ்சாயத்துகளைத் தீர்த்துவைப்பது கருணாகரன் மாதிரியானவர்களின் வேலை. வில்லாபுரம் மாரியக்காவுக்கு நெருங்கின உறவென்பதால் அந்த அக்காவுக்குக் கொடுத்த மரியாதையை இவருக்கும் கொடுத்தார்கள். யாரையும் முறைத்துப் பேசுவதோ, ஏமாற்றுவதோ இல்லாமல் எல்லோரிடமும் தன்மையாகப் பழகக்கூடியவர். செல்வத்தின்மீது அவருக்குத் தனித்த அன்பும் அபிமானமும் இருந்ததால், செல்வம் அவரின் உதவியை நாடினான்.

“அண்ணே, என்னயச் சுத்தி எனக்கே தெரியாம ஒவ்வொரு நாளும் பகை வளந்துட்டு இருக்கு. காலம் முழுக்க வெட்டிக்கிட்டு கோர்ட்டு கேஸுன்னு போறதுல எனக்கு விருப்பம் இல்ல. கருப்புக்கிட்டயும் அவன் பங்காளிககிட்டயும் ராசியா போயிரலாமான்னு பேசிப் பாக்கறீங்களா?”

ஒரு வாரத்துக்கு முன் இதே ஹோட்டலில் வைத்துத்தான் தயக்கத்தோடு கேட்டான். கருணாகரன் யோசித்தார். ஐந்தாறு வருடப் பழக்கத்தில் அவன் எந்த உதவியும் கேட்டதில்லை. அவனுக்காக இல்லாவிட்டாலும் முத்தையாவுக்காகச் செய்யத்தான் வேண்டுமென மனதில் நினைத்துக்கொண்டார்.

“அவிய்ங்க இறங்கி வர மாட்டாய்ங்கடா செல்வம்… கோட்டச்சாமி எப்பிடி வாழ்ந்த ஆளு... அவர பலி குடுத்ததுமில்லாம பங்காளிக மூணு பேர வேற இப்ப பலி குடுத்துட்டாய்ங்க. இம்புட்டையும் மறந்து எப்பிடி ராசியாப் போவாய்ங்க? அதுமில்லாம நீதான் ராசியாப் போயிரலாம்னு சொல்ற, ஆனா அந்தப் புள்ள வெஷம் புடிச்சவளா இருக்காளே…”

“அவ பிரச்னைய நான் பாத்துக்கறண்ணே… நீங்க இவய்ங்ககிட்ட பேச முடியுமா?”

சில நொடிகள் அமைதியாக யோசித்துவிட்டு கருணாகரன் சம்மதித்தார்.

சுரேஷின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஊர் திரும்பியிருந்த செல்வத்துக்கு, கருணாகரன் நல்ல பதிலோடு வந்திருப்பார் என்கிற நம்பிக்கையிருந்தது. சோணையை அழைத்துக்கொண்டு அவசரமாக தினமணி டாக்கீஸ் தெருவுக்கு வந்துகொண்டிருந்தான். சாலையின் இன்னொரு எல்லையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவந்தவர்கள், கடை வாசலில் கருணாகரனின் இருசக்கர வாகனம் நின்றிருப்பதைப் பார்த்தார்கள். “வெரசா வாடா சோண, அவரு வந்துட்டாருபோல…’ என்றபடியே செல்வம் நடையில் வேகத்தைக் கூட்டினான்.

காலை உணவை முடித்துக்கொண்டு இவர்களுக்காகக் காத்திருந்த கருணாகரன், செல்வத்தைக் கண்டதும் மென்மையாகச் சிரித்தார். “என்னண்ணே லேட்டாயிருச்சா..?’’ என செல்வம் கேட்க, “இல்லய்யா, செத்த முன்னதான் வந்தேன்… நீங்க என்ன காலைலதான் ஊர்ல இருந்து வந்தியளா?” என்று கேட்டார்.

“ஆமாண்ணே…”

“பாவம் சின்னப்பய, அனாமத்தாப் போயிட்டான்…” அவர் முகத்தில் கவலை கூடியது. அமைதியானவரிடம் “ஆமாண்ணே… எங்களயெல்லாம் விட்டுட்டு அந்தப் பயல தூக்குவாய்ங்கன்னு நெனைக்கவே இல்ல…” என்றபடியே செல்வம் தயக்கத்தோடு “அவய்ங்ககிட்ட பேசினீங்களாண்ணே… என்ன சொல்றாய்ங்க?” என்று கேட்டான்.

“நான் எம்புட்டோ எடுத்துச் சொல்லிட்டன்யா…. தெகைஞ்சு வரல… உன்னய மொத்தமா கருவறுத்துட்டுத்தான் மறுவேலன்னு புடிச்ச புடியா இருக்காய்ங்க…” கவலையோடு சொன்னார். செல்வம் ஏமாற்றத்தோடு அவரைப் பார்க்க, “மருதக்குள்ள நெலவரம் சரியில்ல செல்வம்… எச்சரிக்கையா இரு...” அவரின் குரலில் தொனி மாறியிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 72

“என்னண்ணே சொல்றீங்க?”

“இந்த ரெண்டு மூணு மாசத்துல மட்டும் சிட்டிக்குள்ள பத்துப் பன்னிரண்டு பெரிய மர்டர்… புதுசா வந்த கமிஷனர் யாரெல்லாம் வெவகாரமான ஆள்னு லிஸ்ட் கேட்டு வாங்கி வெச்சுருக்கான். அதுல உன் பேரும் இருக்கு. போலீஸ் ஒரு தடவ கர வெச்சுட்டா சோலிய முடிக்கிற வரைக்கும் விட மாட்டாய்ங்க… அவய்ங்கதான் மாட்டு மூளைக்காரய்ங்க, எதையும் யோசிக்காம ஆடிட்டு இருக்காய்ங்க. நீ கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடு…”

கருணாகரன் அவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். செல்வத்துக்கு வெவ்வேறு கணக்குகள் ஓடத் தொடங்கின. இந்த யுத்தத்திலிருந்து தப்பித்து ஓடவும் முடியாது, அதற்காகச் சண்டையிட்டுச் சாகவும் முடியாது. தந்திரமாகத்தான் விளையாடித் தப்பிக்க வேண்டும். செல்வம் என்ன முடிவெடுக்கப்போகிறான் என்பதைத் தெரிந்துகொள்ள சோணை பரபரப்போடு காத்திருந்தான். “சோண... ஜெகதிய பாண்டியூர்லருந்து கெளம்பி வரச் சொல்லு...” என செல்வம் சொல்ல, சோணை ஏமாற்றமாக “எதுக்குய்யா திரும்ப அந்தப் புள்ள?” எனக் கேட்டான். “கத்தி அருவான்னு எடுத்து சண்ட போடுறதுக்கு நாமளே போதும். ஆனா தந்திரமா இருந்து ஜெயிக்கணும்னா அவதான் வேணும். தைரியமா கூப்புடு, பழைய மாதிரி எதும் ஆகாது…” செல்வம் அவன் தோளில் தட்டிச் சிரித்தான்.

(ஆட்டம் தொடரும்)