மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 73

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஏத்தா அன்னிக்கே வர நெனச்சேன். உடம்புல காயம் தேவலையாகல. அதான் வர முடியல… எந்தச் சண்ட சத்தமும் இல்லாம எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனச்சுதான் பஞ்சாயத்து வெச்சோம். இப்பிடி ஆகும்னு நெனைக்கலத்தா… மன்னிச்சிரு...

மார்க்கெட்டில் சிந்திய ரத்தத்தின் கவுச்சி இன்னும் மறைந்திருக்கவில்லை. பழைய காளியைக் கண்டுவிட்டதில் வியாபாரிகள் சிலருக்கு ஆறுதலும், வேறு சிலருக்கு அச்சமும் வந்திருந்தது. சிந்துபட்டிக்காரர்கள் காளியின் நிழலைப்போலவே மார்க்கெட்டுக்குள் அலைந்திருந்ததை ஒருவர்கூட கண்டுபிடித்திருக்கவில்லை. சண்டை முடிந்த தினத்தின் மாலையில் காவல்துறை, வன்முறையோடு சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் தேடித்தேடி கைதுசெய்துகொண்டிருந்தது. சண்டையைத் தொடங்கியது மார்நாடுதான் என எல்லோரும் கைகாட்டிவிட்டதால், காளியைக் கைதுசெய்வதற்கான பிடி கிடைத்திருக்கவில்லை. இறந்தவனின் மனைவி ஆதரிக்க யாருமின்றி நடு மார்க்கெட் வீதியில் நின்று மாரிலடித்துக் கதறிக்கொண்டிருந்தாள்.

“என் புருஷனக் கொன்னவன் கையி புழுத்துப்போகணும். எவென் இந்தச் சண்டைய ஆரம்பிக்கத் தூண்டிவிட்டானோ அவென் குடும்பம் நாசமாப் போகணும்… இனி சீரழிஞ்சு செங்க சொமந்து என்னண்டு என் புள்ளையள கரையேத்தப் போறனோ? இத்தன சாமிய கும்பிட்டனே, என் புருஷன் சாகறப்போ ஒண்ணுக்குக்கூடவா கண்ணு தெரியல… ஏ மாரியாத்தா…”

அந்தப் பெண்ணின் குரலுக்கு ஆறுதல் சொல்லும் துணிவற்றவர்களாக வியாபாரிகள் அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்.

கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்யச் சொல்லி மேல்மட்டத்திலிருந்து தொடர்ந்து நெருக்குதல் அதிகரித்ததால், காவல்துறையினர் மார்நாட்டையும் அவனோடு இன்னும் சிலரையும் கைதுசெய்யத் தேடினார்கள். தன்னோடிருந்தவர்களை விட்டுவிட்டு மார்நாடு மட்டும் கமுதிக்குக் கம்பிநீட்டியிருந்தான். அவனுக்கு உதவியாக இருந்தவர்களென ஆறு பேரை போலீஸார் கைதுசெய்து காவல்நிலையத்துக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டபோது, பாண்டியனுக்கு ஆத்திரம் வந்தது. தன் ஆட்களை அழைத்துக்கொண்டு சிம்மக்கல் காவல்நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது, ஸ்டேஷன் பரபரப்பானது. எப்போதும் மரியாதை நிமித்தமாகச் சிரிக்கும் காவலர்கள்கூட வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். எல்லாவற்றையும் கவனித்த பாண்டியன், இன்ஸ்பெக்டரிடம் சென்றான்.

ரெண்டாம் ஆட்டம்! - 73

“ஏன் சார் பேண்டவன விட்டுட்டு பீயப் போட்டு அடிச்சிக்கிருக்கீங்க… செத்தவனுக்கு ஆதரவாதான் சார் இந்தப் பயக பஞ்சாயத்துக்கு போனாய்ங்க. அது தெரியாம அரெஸ்ட் பண்றீங்க?” என எகிறியவனை மட்டுப்படுத்தும் விதமாக, “பாண்டியா நீதான் சொல்ற, இவய்ங்க சப்போர்ட்டா போனாய்ங்கன்னு. மொத்த மார்க்கெட்டும் சாவுக்குக் காரணம்னு இவய்ங்களத்தான் கைகாட்டுது. சட்டத்துக்குச் சாட்சிதான் முக்கியம். எங்கள என்னய்யா செய்யச் சொல்ற?” என்றார்.

காவல்துறையினர் சமாதானப்படுத்தினார்கள். பாண்டியனுக்குச் சரியோ தவறோ ஊர்க்காரர்களை போலீஸிடம் விடுவது சரியாகப்படவில்லை.

“அறிவு அண்ணன்கிட்ட சொல்லி கமிஷனர்கிட்ட பேசச் சொல்றேன். யாரையும் அரெஸ்ட் பண்ணாதீங்க.”

“ஆத்தி... வேற வெனையே வேணாம். உங்ககிட்ட `எல்லாம் பாத்துக்கலாம்’னு சிரிச்ச மானிக்கி சொல்லிருவாய்ங்க. இந்தப் பக்கம் வந்து எங்களத்தான் நோண்டி நொங்க எடுப்பாய்ங்க. கேஸ முடிக்கணும்யா… ஓடிப்போனவன வந்து சரண்டராகச் சொல்லு. உனக்கு இல்லாத பவரா? வக்கீலவெச்சு நீ கேஸப் பாத்துக்க…”

இன்ஸ்பெக்டர் கைவிரிக்க, பாண்டியன் எதுவும் செய்ய முடியாத ஏமாற்றத்தோடு சென்றான்.

காளிக்கு உடலில் சில இடங்களில் காயம்பட்டிருந்தாலும், மனதளவில் எப்போதையும்விட நிறைவானவனாகவும் துணிச்சல்மிக்கவனாகவும் உணர்ந்தான். நரையும் முதுமையும் இன்னும் மனதை அண்டியிருக்கவில்லை என்கிற பூரிப்பில் உடல் தினவெடுத்தது. முழு ஆட்டை உரித்து சமைத்துத் தின்னும் வல்லமையும் ஆற்றலும் வந்துவிட்டதுபோல் விநோதமான பசி வயிற்றில் சுழன்றது. காயம்பட்ட இடங்களில் மருந்து கட்டியிருந்ததால், சட்டையில்லாமல் படுக்கையில் கிடந்தவன் ஆட்டுக்குடல், தலைக்கறி, கால் சூப், நெஞ்செலும்பு எனத் தனித்தனியாகச் சமைக்கச் சொல்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அருளுக்கு அப்பாவின் செய்கைகள் புதிரானவையாக இருக்க, “எப்பா என்னாச்சுப்பா உனக்கு, வெறிகொண்டு தின்னுட்டு இருக்க…” என்று கேட்டான்.

“அருளு… உடம்புக்கு ஏதாச்சும் நோவுன்னா இந்த மாதிரி தின்னச் சொல்லிக் கேக்கும். ஆனா, இந்தப் பசிக்குக் காரணம் நோவு மட்டுமில்லடா… இது ஏதோ வேற மாதிரி ஒண்ணு...” காளி சிரித்துக்கொண்டான்.

சிந்துபட்டிக்காரர்கள் ஒரு பகல் பொழுதில் மார்க்கெட்டை பழைய மாதிரி மாற்றிவிட்டிருந்தார்கள். யாருக்கு என்ன குறை என்பதைக் கேட்டு அவற்றையெல்லாம் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கையோடு பேசிவிட்டு வந்தார்கள். வீடு திரும்பியபோது, காளி வாசலில் சாய்வுநாற்காலியில் சரிந்து அமர்ந்திருந்தான். பாம்பு உடல், கூடுதலாக வயிற்றிலோ முதுகிலோ சதைகள் இல்லாத அதே இறுகிய உடம்பு. வெக்கையில் முத்து முத்தாய் வியர்த்திருந்தது, மருந்து கட்டின இடத்தையும் நனைத்திருந்தது.

“அண்ணே எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சுண்ணே…” என சிந்துபட்டிக்காரர்கள் வந்து நின்றபோது, காளி சிரித்தபடியே சேரிலிருந்து எழுந்துகொள்ள முயன்றான்.

“பரவால்லண்ணே… உக்காந்துக்கங்க…” அவர்கள் அவனை நாற்காலியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் தரையில் அமர்ந்தார்கள்.

“எப்பா யாருக்காச்சும் ஏதாச்சும் ஆகியிருந்தா என்ன செய்றது... எனக்காக எதுக்குப்பா உசுரப் பணயம்வெச்சு இந்த வேலையச் செஞ்சீங்க?” காளி அக்கறையோடு கேட்க, “என்னண்ணே பேசற... நீ நம்மூருக்குக் கொஞ்சநஞ்சமா செஞ்சிருக்க? ஊரவிட்டுப் பொழைக்கப் போனவய்ங்க ஊருக்கு எந்த நல்லதும் பண்ண மாட்டாய்ங்க. நீ எங்க எல்லாருக்கும் நல்லது கெட்டது பாத்திருக்க. உனக்கு ஒண்ணுன்னா நிக்காமப் போயிருவமா?” ஒருவன் சிரித்தான். தனக்காக ரத்தம் சிந்த தன் பங்காளிகள் இருக்கிறார்கள் என்பது கண்கூடான சாட்சியான பின், காளியிடம் நூறு யானைகளின் பலம் சேர்ந்திருந்தது. மருதுவின் இழப்பையும், முத்தையாவின் துரோகத்தையும் தன்னால் இனி கடந்து வந்துவிட முடியும் என நம்பினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 73

“சரிய்யா… உங்க எல்லாருக்கும் சம்மதம்னா இங்கயே இருந்து மார்க்கெட்டப் பாத்துக்கங்க. சாராயக்கடையும் இருக்கு” என்றபடியே வீட்டுக்குள் திரும்பி “அருளு…” என மகனை அழைத்தான். சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டே அருள் அவசரமாக வெளியே வந்தான். அருளின் கரத்தைப் பற்றிக்கொண்ட காளி “என் புள்ளைய இந்த ஊர்ல தனியா விட்டுட்டுப் போயிருவனோன்னு இம்புட்டுக் காலமா பயந்துட்டு இருந்தேன். இப்ப உங்க பொறுப்புலவிடறேன்… அவனுக்கு நல்லது கெட்டது சொல்லிக் குடுத்து கடைசிவரைக்கும் பாத்துக்கணும்யா…” கண்ணீரோடு ஊர்க்காரர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவசரமாக ஒருவன் எழுந்து “என்னாண்ணே இதுக்குப்போயி அழுதுக்கிருக்க… தம்பிய நாங்க பாத்துக்கறம்ணே...” என்று காளியின் கைகளைப் பற்றிக்கொண்டான்.

மார்நாட்டின் ஆசைகளைத் தின்று செரித்த சென்ட்ரல் மார்க்கெட், தன் பழைய கம்பீரத்தை மீட்டுக்கொண்டது. அவனிடம் பணம் வாங்கிய சிறு வியாபாரிகளுக்கு அவன் தங்களை எதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற உண்மை தெரிந்துவிட்ட பிறகு குற்றவுணர்வு கொண்டனர். செத்துப்போனவனின் மனைவி மார்க்கெட்டில் தன் சூழலை நினைத்து அலறிய செய்தி காளிக்கு வந்து சேர, ஏதாவதொரு வகையில் உதவ நினைத்தான். ஏதோவொரு வகையில் அவனது சாவுக்குத் தானுமொரு காரணம் என்கிற குற்றவுணர்ச்சியும் இருந்தது. இரண்டு மூன்று நாள்களுக்குப் பின் அந்தக் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என காளி மார்க்கெட் வியாபாரிகள் எல்லோரிடமும் வரி போட்டு பணம் திரட்டினான். பெரிய வியாபாரிகள் நபர் ஒருவருக்கு ஐம்பது ரூபாயும், சிறு வியாபாரிகள் நபர் ஒருவருக்கு இருபத்தைந்து ரூபாயுமாகத் தந்ததில் எட்டாயிரம் ரூபாய்க்குப் பக்கமாய்ச் சேர்ந்திருந்தது. காளி கூடுதலாக இரண்டாயிரம் ரூபாயை வைத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் வீட்டுக்குச் சென்றான். முனிச்சாலையில் ஒரு சின்னஞ்சிறிய சந்துக்குள் இருந்தது வீடு. சாவுக்களை மாறியிருக்காத வீட்டில், இறந்தவனின் மனைவியும் மகளும் மட்டுமிருந்தனர். எதிர்பாராத நேரத்தில் காளியை அங்கு கண்டதில் முதலில் பயந்துபோன அந்தப் பெண் பேந்தப் பேந்த விழிக்க “ஏத்தா அன்னிக்கே வர நெனச்சேன். உடம்புல காயம் தேவலையாகல. அதான் வர முடியல… எந்தச் சண்ட சத்தமும் இல்லாம எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனச்சுதான் பஞ்சாயத்து வெச்சோம். இப்பிடி ஆகும்னு நெனைக்கலத்தா… மன்னிச்சிரு...” காளி கைகள் நடுங்க அவளைக் கும்பிட்டான்.

“எண்ணே... வெளங்காத பயக பேச்சக் கேட்டு என் புருஷன் உசுர விட்டுட்டாண்ணே…” எனக் கதறியழுதாள். அவள் கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்ட காளி, மஞ்சள்பையில் சுற்றி வைத்திருந்த பணத்தை அவளிடம் கொடுத்தான்.

“நீ எழந்தது பெருசு… எதாலயும் ஈடுசெய்ய முடியாது. ஒரு அண்ணனா உனக்கு என்னால என்ன செய்ய முடியுமோ செய்றேன்… இப்பதைக்கி இத வெச்சுக்க…”

காளியின் செயலால் நெகிழ்ந்துபோன அந்தப் பெண், அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அழுதாள்.

(ஆட்டம் தொடரும்)