Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 75

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

வியாபாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்பாயிருந்த செல்வத்தைப் பார்க்க, முத்தையாவுக்குப் பாவமாயிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 75

வியாபாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்பாயிருந்த செல்வத்தைப் பார்க்க, முத்தையாவுக்குப் பாவமாயிருந்தது.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

கோட்டைச்சாமியின் வீட்டில் ஆளும்பேருமாகத் திரளத் தொடங்கியிருந்தார்கள். அம்சவல்லியின் கொலை வழக்கில் கருப்புவுக்கும் அவன் பங்காளிகளுக்கும் முன்ஜாமீன் கிடைத்துவிட, மாயாவிகளைப்போல் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் துணிச்சலாகத் தெருவில் நடந்தார்கள். இத்தனை காலமும் மதினியிடம் முகம் கொடுத்துப் பேசியிருக்காத முனுசு, தயக்கமேயில்லாமல் சங்கரியைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான். மகனும் மகளும் வளர்ந்த நிலையிலும்கூட திடீரெனத் தொற்றிக்கொண்ட வெட்கத்தை நினைக்கையில் சங்கரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சங்கரியின் பிள்ளைகளும், வீட்டிலிருந்த மற்ற குழந்தைகளும் அடுத்தநாள் நடக்கவிருக்கும் புட்டுத் திருவிழாவுக்குப் போக வேண்டுமென அடம்பிடித்தனர். `‘ஏய் கழுதைகளா... அடுத்தடுத்து வீட்டுல நாலு எழவு விழுந்திருக்கு. உங்களுக்குத் திருவிழா கேக்குதா?’’ என சங்கரி சத்தம்போட, அவளுடைய மகன் “ஆமா நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கலாம், நாங்க திருவிழாவுக்குப் போகக் கூடாதா?’’ என வெடுக்கெனக் கேட்டான். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த முனுசு, சங்கரியையும் குழந்தைகளையும் சமாதானப்படுத்திவைத்தான்.

வியாபாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்பாயிருந்த செல்வத்தைப் பார்க்க, முத்தையாவுக்குப் பாவமாயிருந்தது. “இப்ப யாவாரத்துக்கான நேரமில்ல செல்வம், மொதல்ல நம்மள சேஃப்டி பண்ணிக்கணும்.”

“இனி என்ன வந்தாலும் ஒத்தைக்கு ஒத்த நின்னு பாத்துர வேண்டியதுதான்.”

“ரௌடிப்பய மாதிரி பேசாதடா…”

“புரியலப்பா…”

“ஜெகதிய உடனே கெளம்பி வரச் சொல்லு...”

“அவ தம்பி செத்து இன்னும் நாலு நாள்கூட ஆகல, அதுக்குள்ள..?”

“உன்னயச் சுத்தி இருக்க எல்லாப் பிரச்னையையும் முடிச்சுவிடணும்னா, அவ தொண முக்கியம். கோட்டச்சாமிய நீயும் நானுமா கொன்னோம்? அவளோட புத்திதான் கொன்னுச்சு. நாம வெறும் ஆயுதம் மட்டும்தான்.”

ஜெகதி சாவுக்கு அஞ்சவில்லை, தோல்வியை வெறுத்தாள். இதுவரையிலுமான போராட்டத்தில் எவ்வளவோ இழந்தபோதும், போராட்டத்தைக் கைவிட்டதில்லை. யாருக்கு யார் எதிரி என்கிற கேள்வியெல்லாம் போய், தான் எல்லோருக்குமே எதிரியாகிவிட்டிருப்பது அவளை அச்சுறுத்தியது. செல்வத்தின் பாதுகாப்பு இருக்கிறவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற நம்பிக்கைதான் திரும்பவும் அவளை மதுரைக்கு வரவைத்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 75

சாவுக்களை மாறாத வீட்டின் தனிமையும் இருளும் அச்சுறுத்த, வாசலோடு திரும்பி செல்வத்தின் வீட்டுக்குச் சென்றாள். செல்வத்துக்கும் முத்தையாவுக்கும் அவளைப் பார்த்து ஆச்சர்யம். அவர்களின் முகக்குறிப்பைப் புரிந்துகொண்டு, “ஒரு நாளைக்கி இங்க இருக்கறனே…” என்றாள். முத்தையா அவள் உட்கார பழைய மர நாற்காலியை இழுத்துப்போட்டார். உறக்கமும் உணவுமின்றி வாடிப்போன முகம், கண்களைச் சுற்றித் தற்காலிகமாக விழுந்திருந்த கருவளையம்.

“எம்மா டீ குடும்மா, ஜெகதி வந்திருக்கா…” அவன் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த அம்மா, “ஒரேதா சாப்ட்டு டீ குடிக்கட்டும்டா… இட்லி ரெடியாகிருச்சு...” என்றாள். சோம்பல் முறித்துக்கொண்ட ஜெகதி “எத்த நீ டீயக் குடு… நான் மெதுவா சாப்ட்டுக்கறேன்...” என்றபடியே நாற்காலியில் ஒருசாய்த்து அமர்ந்து உடலைக் குறுக்கிக்கொண்டாள்.

செல்வம் அவளது தலையைக் கோதிவிட, வியர்வையில் உப்பேறியிருந்த அவனது சட்டையின் கீழ்முனைகளை விரல்களில் சுருட்டியபடி யோசித்துக்கொண்டிருந்தாள். “இந்தாத்தா டீயக் குடி...” செல்வத்தின் அம்மா தேநீரைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். இரண்டு மிடறு தேநீரைக் குடித்துவிட்டு வைத்தவள், “என்ன செய்யப்போறோம் செல்வம்?’’ தயக்கத்தோடு கேட்க, “யோசிப்போம்...” என ஒரு வார்த்தையில் சொன்னான்.

“யோசிக்கல்லாம் இப்ப நேரம் இல்ல… நாம முந்திக்கணும், இல்லன்னா செதச்சிருவானுங்க…” என்றபடியே சுற்றிலும் பார்க்க, ஒருவருமில்லாமலிருந்தது உறுத்தியது. “எங்க ஒருத்தரையும் காணோம்...” எனப் புரியாமல் கேட்க, செல்வம் அவளது இடையை இறுகப் பற்றி அணைத்தான். இப்போதைக்கு இந்த அணைப்பும் நீண்ட முத்தங்களும் உடலுக்குத் தேவைதான். ஆனால், மனதின் வேட்கை யுத்தத்தை வேண்டியது. அவனை விலக்க முயன்று தோற்றவள், அவனது கழுத்தில் அழுத்தமாகக் கடித்தாள். வலி பொறுக்க முடியாமல் `ஆ...’வெனக் கத்தியபடி அவன் விலக்கவும், சத்தம் கேட்டு முத்தையாவும் சேகரும் திரும்பி வரவும் சரியாக இருந்தது. ஜெகதி முத்தையாவை முறைத்தாள். “ரெண்டு வார்த்த தனியா பேசட்டுமேன்னு நெனச்சோம்...” முத்தையா சொல்ல, “அதுசரி, தலைக்குமேல கத்தி தொங்கிட்டு இருக்கறப்போ அது ஒண்ணுதான் கேடு…”

சேகருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு கையால் வாயை மூடிக்கொள்வதைப் பார்த்து ஜெகதி “கொஞ்சமாச்சும் பயமிருக்கா உனக்கு? எவென் எந்த நேரத்துல கத்தியோட எறங்குவானோன்னு உசுரக் கைல புடிச்சுட்டு இருக்கோம். நீ சிரிக்கிற...” என்றதும் சேகர் சிரமப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

“எதுக்கு இப்ப லூஸு மாதிரி அனத்திட்டு இருக்க? எடுத்தோம் கவுத்தோம்னு எவனும் இனி கொல பண்ணிட முடியாது…” செல்வம் அவளை அமைதிப்படுத்த முயல, “அப்பிடி அசால்ட்டா இருந்ததாலதாண்டா என் தம்பிய பறிகுடுத்துட்டேன்...” சடாரென கண்கலங்கினாள்.

‘இங்கேரு… கமிஷ்னர் சிட்டில இருக்க சேட்டக்காரய்ங்கள முடிச்சுவிட்ற முடிவுல இருக்கான்… கருப்பு, ஆண்டிச்சாமி குடும்பத்துக்குச் செஞ்சது, அவய்ங்க பதிலுக்குச் செஞ்சதுன்னு அவய்ங்க மேலதான் போலீஸ் பார்வ இருக்கு… நாம நம்மளக் காப்பாத்திக்கிட்டா மட்டும் போதும்.”

“நம்மளக் காப்பாத்திக்கிறது முக்கியமில்ல, அவய்ங்களுக்குள்ள அடிச்சுக்க வெய்க்கணும்” ஜெகதி அவன் கண்ணைப் பார்த்துச் சொல்ல, செல்வம் பதிலின்றி நின்றான்.

“ஏன் யோசிக்கிற?”

“ரவி அண்ணன்கிட்ட ஒரு வார்த்த...”

“நான் பாத்துக்கறேன்” என்றபடியே ஜெகதி அலைபேசியோடு வீட்டுக்கு வெளியில் சென்றாள். “ஜெகதி, எதுவா இருந்தாலும் இன்னிக்குப் பொதுக்கூட்டத்த முடிச்சதுக்கு அப்பறம் பேசிக்கலாம்... அதுவரைக்கும் பொறுமையா இருங்க” என முடித்துக்கொண்டார்.

அம்சவல்லியின் குடும்பத்தினர் பொதுக்கூட்டத்துக்கு வந்தால், விவகாரத்தைப் பேசி முடிப்பது ரவியின் யோசனையாக இருந்தது. அம்சவல்லியின் வீட்டிலிருந்து ஒருவரும் வராமல் போக ஏமாற்றமடைந்தார். விசாரித்தவரை, எல்லோருமே மதுரைக்குள்தான் இருக்கிறார்கள் என்பதும் உறுதியானதால் சமாதானமடைய அவர்கள் விரும்பவில்லை என்பது புரிந்தது. “செல்வம், உன்னய மாதிரி வெடிப்பான பயகளைப் பாக்கறது அபூர்வம். கொஞ்ச நாளைக்கி எங்கியாச்சும் எஸ் ஆகிரு. அவய்ங்க அடிச்சுக்கட்டும். இங்கியே இருந்தா ரெண்டு கேங்கும் உன்னயவும் இந்தப் பிள்ளையவும் முடிச்சுவுடத்தான் நெனப்பாய்ங்க” ரவி அண்ணன் வருத்தத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார்.

மின்சாரமில்லாத வெக்கையில் செல்வத்தின் வீடு புழுங்கியது. காமாட்சி விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் மரண பயம். “ரவி சொல்றது சரிதான் செல்வம். பத்துப் பதினஞ்சு நாளைக்கி கண்காணாத எடத்துக்குப் போயிட்டீங்கன்னா, பொறுக்க மாட்டாம அவய்ங்களுக்குள்ள அடிச்சுக்குவாய்ங்க...” முத்தையா பொதுவாகச் சொன்னார்.

“எங்களப் போகச் சொல்லிட்டு நீ என்னப்பா செய்யப்போற?”

முத்தையா சிரித்தார். “என்னய என்னடா செய்யப் போறாய்ங்க? உங்களக் காப்பாத்தறது தாண்டா இப்ப முக்கியம். கேவலப்பட்டு, அவமானப்பட்டு உங்கள இம்புட்டுத் தூரம் கொண்டுவந்துருக்கேன். நான் எதுக்கு ஆசப்பட்டனோ அதெல்லாம் நடக்கணும். அப்பத்தான் நான் வாழ்ந்ததுக்கு மதிப்பு” என்று கண்கலங்கினார்.

செல்வம் மனசே இல்லாமல் சரியென்றான்.

“இப்போதைக்கி எங்க ஊருதான் பாதுகாப்பு. நம்மள மீறி வெளியாளுங்க ஊருக்குள்ள வர முடியாது...” என ஜெகதி சொல்ல, முத்தையாவும் அவள் யோசனையை ஆமோதித்தார். மின்சாரம் திரும்புவதற்கு முன்பாகவே ஜெகதி, செல்வம், சேகர் மூவரும் வீட்டிலிருந்து கிளம்பினர். அவ்வளவு அவசரத்திலும் செல்வம் தன் நண்பர்களைத் தலைமறைவாகச் சொல்ல மறக்கவில்லை.

புட்டுத் திருவிழாவுக்காக சொக்கநாதர் ஆலயத்தின் முன்பாகத் திரண்டிருந்த பெருங்கூட்டத்தின்மீது இரக்கமற்று வெயிலடித்தது. சொக்கநாதர் ஊர்வலம் முடிந்து, பந்தலுக்குள் வந்து சேர்ந்தது. பாண்டிய மன்னன் வேடமிட்டவர் “இந்நகரத்திலுள்ள மக்கள் பெருந்திரளாய் எம்மை நாடி, கரை புரண்டோடும் வெள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டுவருமாறு கேட்க, யாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி மந்திரிகளுக்கு ஆணையிட்டோம்” என்று சொல்லி முடிக்க, மேள தாளங்களுடன் பூசாரிகள் பந்தலின் நடுவே இருந்த தண்ணீர்த் தொட்டியை நோக்கி நடந்தார்கள். கருப்பு தன் குடும்பத்தோடு புட்டுத் திருவிழாவுக்கு வந்திருந்தான். மக்கள் பக்திப் பெருக்கில் ஆரவாரம் எழுப்ப, தங்கமுலாம் பூசிய மண்வெட்டியால் மண் அள்ளி, தங்கக் கூடையில் சேர்த்தனர். பூசாரி, தலையில் தங்கக் கூடையைச் சுமந்து நடக்க, பக்தர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

திருவிழா முடிந்து, வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடத்துக்கு கருப்பு குடும்பத்தோடு வந்துகொண்டிருந்தான். ஐஸ் வண்டிக்காரனின் வண்டியில் சாய்ந்து குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்தையா அவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். கருப்புவுக்கும் முனுசுக்கும் சுருக்கென்றது. “எலேய் சுத்துப் போட்ருக்காய்ங்கன்னு நெனைக்கிறேன்… வண்டில பொருள் இருக்கா?” முனுசு அலற, கருப்பு வேகமாக வண்டியை நோக்கி ஓடப் பார்த்தான். அவனை மறித்த முத்தையா, “ஏப்பு இப்ப எதுக்கு உசுர வெறுத்து ஓட்ற..?” என்று சிரிக்க, “ஊளத்தனமா, குடும்பத்தோட இருக்கற நேரமாப் பாத்து நீயும் மகனுமா சுத்துப்போட்ருக்கீங்களே…” கருப்புவுக்கு ஆத்திரத்தில் நரம்புகள் முறுக்கேறின.

“செல்வம் உங்களக் கொல்ற அளவுக்கு நீங்கள்லாம் சண்டியர் இல்ல” முத்தையா ஐஸைத் தின்று முடித்து குச்சியைத் தூர எறிந்தார். கருப்பு பளாரென அறைய, முத்தையா சத்தமாகச் சிரித்தார். “இப்பிடி அவசரப்பட்டுத்தான் உங்கண்ணனும் செத்தான்…” என்றபடியே இடுப்புக்குள் கைவிட்டு எதையோ எடுத்து எறிவதுபோல் சைகை செய்தார். “ஐயய்யோ உருண்டைய எறியப் போறாண்டா…” என அலறியபடியே கருப்பு ஓடினான். உருவின கையில் ஒன்றுமில்லையென விரித்துக் காட்டிய முத்தையா மீண்டும் சிரித்தார். கருப்புவுக்கு மானக்கேடாய்ப்போனது. வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமாக, “ஏய் ஊள… பேசாம ஓடிரு… கெழட்டுத் தாயலிய எதும் செய்யக் கூடாதுன்னு பாக்கறேன்...” கருப்பு வேஷ்டியை மடித்துக் கட்டித் தயாராக, முத்தையா, “செல்வம் இப்ப வாடா...” என்றதும் கருப்போடு வந்திருந்த பெண்கள் அலறினார்கள். முத்தையா சத்தமாகச் சிரித்தார். “அட நாரப் பயகளா... செல்வம் பேரக் கேட்டாலே மோன்றுவீங்க போலயே…” என்ற பிறகுதான், இயல்புக்குத் திரும்பினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 75

முத்தையா, முனுசின் பட்டுச்சட்டையைப் பிடித்துப் பார்த்து “கெட்டிக்காரண்டா நீயி… அண்ணன் எப்ப போவான், திண்ண எப்பக் காலியாகும்னு காத்திருந்து தூக்கிருக்க…” என்று கேலியாகச் சிரிக்க, ஆத்திரத்தில் முனுசு அவரை அலேக்காகத் தூக்கி எறிந்தான். திருவிழா பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் அவசரமாய் ஓடிவந்து தடுத்தனர். “ஏய் கோயில் திருவிழாப்பா... ஒழுக்கமா போயிருங்க” ஒரு போலீஸ்காரர் பதற்றத்தோடு கத்த, கேட்கப் பொறுமையில்லாத வெறியில் கருப்பும் முனுசும் முத்தையாவை உதைக்கத் தொடங்கினார்கள். போலீஸ்காரர்கள் இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து விலக்கிவிடப் போராடினர். வயதில் மூத்த கான்ஸ்டபிள், கருப்புவை ஓங்கி அறைய அவன் தடுமாறி விழுந்தான். அவரை முறைத்தவன் உருவிய வேஷ்டியை ஒரு கையால் பற்றிக்கொண்டு, காரை நோக்கி ஓடினான். பட்டாக்கத்தியோடு ஓடிவந்தவனைப் பார்த்து மக்கள் அலறியோட, போலீஸ்காரர் “தம்பி வேணாம்ப்பா… அவசரப்படாத…” எனக் குறுக்கே வர, கட்டுப்படுத்த முடியாத வெறியில் அவரது தலையைத் துண்டாக வெட்டினான். மொத்தக் கூட்டமும் உறைந்து நிற்க, அதே வெறியோடு கருப்பு, முத்தையாவின் தலையையும் வெட்டி எடுத்தான். முத்தையாவின் சிரிப்பு ஒரேயடியாகக் காணாமல்போக, வெட்டப்பட்டத் தலையைக் கத்தியின் முனையில் சொருகியவன் சொக்கநாதர் ஆலயத்தின் முன்னால், கத்தியை ஊன்றிவைத்துவிட்டு அப்படியே மணலில் உட்கார்ந்துவிட்டான்.

(ஆட்டம் தொடரும்)