மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 76

ரெண்டாம் ஆட்டம்! - 76
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்! - 76

சிந்துபட்டியிலிருந்து பெருங்காமநல்லூர் செல்லும் சிறிய சாலையில், நெல் வயல்களுக்கு நடுவே இருந்தது கோயில்.

தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமென்கிற நெருக்கடி உருவாகும்போது, மனிதன் எத்தனை உக்கிரமான வன்முறையையும் கையிலெடுக்கத் தவறுவதில்லை. வேட்டையாடப்படுதலுக்கு முந்தைய கணத்தில் யுத்தம் செய்யக் களமிறங்கும் ஒருவன், வெற்றியை அடையும்வரை ஓய்வதில்லை. பிரச்னைகள் முடிந்துவிட்டதென காளி ஆறுதலடையவில்லை, இந்த அமைதிக்குப் பின் வரவிருக்கும் புயலை நினைத்து அச்சம்கொண்டான். வன்முறையின் உலகுக்குள் நுழைகிற ஒருவன், ஒவ்வொரு நாளையும் உறக்கமும் நிம்மதியுமின்றி கடக்கவேண்டியிருப்பதை இத்தனைகால அனுபவம் அவனுக்கு உணர்த்தியது. பேயைப்போலத் தன்னைத் துரத்திக்கொண்டிருக்கும் இந்தக் குரூரங்கள், தனக்குப் பின்னால் தனது மகனையும் துரத்தக்கூடுமோவென காளி கவலைப்படத் தொடங்கினான். தப்பித்துக்கொள்ள வேண்டியே சண்டைகளில் இறங்க நேர்ந்தாலும், சில சமயங்களில் தனது சுயநலத்துக்காகச் செய்த துரோகங்களையும் அவன் மறக்கவில்லை. தான் எதுவாகவெல்லாம் இருக்கக் கூடாதென நினைத்திருந்தானோ அதுவாகவெல்லாம் மாறும்படி காலமும் சூழலும் அவனை நிர்பந்தித்தன.

வீட்டிலிருக்கும் எல்லோரையும் ஊரிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றான். சிந்துபட்டியிலிருந்து பெருங்காமநல்லூர் செல்லும் சிறிய சாலையில், நெல் வயல்களுக்கு நடுவே இருந்தது கோயில். முதிர்ந்த ஆலமரங்கள் சூழ்ந்த சின்னஞ்சிறிய கோயில். எத்தனை கொடூரமான கோடையிலும் கருணையோடு காற்று வீசும். கோயிலுக்குப் பூசை கொடுப்பதற்காக வரும் ஆட்களைத் தவிர, தினமும் வருகிறவர்களென யாருமில்லை. காளியும் அவனுடன் வந்தவர்களும் மரத்தடியில் காத்திருக்க, செய்தியறிந்து பூசாரி பெருங்காமநல்லூரிலிருந்து சைக்கிளில் வந்து சேர்ந்தார். “என்னப்பே... வர்றதா ஒண்ணும் தகவல் இல்ல, திடுதிப்புனு வந்திருக்கீக... வீட்ல ஏதும் விசேஷம் வெய்க்கப் போறியளா?” காரை ஏறிய பற்கள் தெரிய பூசாரி சிரித்தார். வேட்டியில் ஒட்டியிருந்த மண்ணை உதறியபடி எழுந்துகொண்ட காளி, “அதெல்லாம் இல்லப்பா… ரொம்ப நாளாச்சே ஒரு பூசையப் போட்டுட்டு போலாம்னு வந்தோம்” என்றான். பூசாரி அவசர அவசரமாக சாமியிருந்த பீடத்தைச் சுத்தம் செய்து பூசைக்குத் தயார்ப்படுத்தினார்.

ரெண்டாம் ஆட்டம்! - 76

பூசாரி பயபக்தியோடு விளக்கேற்றிய பின், சாமிக்குச் சூடம் காட்டினார். கண்ணை மூடி சாமியைக் கும்பிட்டபடி நின்ற காளி, “எப்பே...” பூசாரியின் குரல் கேட்டு கண் திறந்தான். “மனசுல என்ன சங்கடம் இருந்தாலும் இந்தச் சந்நிதானத்துல விட்டுட்டுப் போயிருங்க. சாமி பாத்துக்கிரும்…” பூசாரி ஆரத்தியை நீட்ட, காளி திரும்பித் தன் மகனைக் கையசைத்து முன்னால் வரச் சொன்னான். “என்னப்பா?” அவன் குழப்பமாக வந்து நின்றான்.

“அருளு எனக்கொரு சத்தியம் பண்ணுவியா?”

“என்னப்பா திடீர்னு சத்தியம்லாம் பண்ணச் சொல்ற?”

“பண்ணுவியா மாட்டியா?”

“பண்றேம்ப்பா…”

“சரி… எனக்கு இந்தத் தொழில் எதுவும் வேணாம். ரௌடித்தனம் வேணாம், மதுரையும் வேணாம், மெட்ராஸ் போறேன்னு என் மேலயும் சாமி மேலயும் சத்தியம் பண்ணு.”

காளி மகனது கண்களை ஊடுருவிப் பார்க்க, அவனுக்கு அதிர்ச்சியில் உடல் நடுங்கியது. சுப்புவும் காளியோடு வந்திருந்த அவனுடைய ஆட்களுமேகூட நம்ப முடியாத ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்.

“நான் மெட்ராஸ்ல போயி என்னப்பா செய்வேன்...”

“பொழைக்க ஆயிரம் வழி இருக்கு அருளு, இந்த நிம்மதி இல்லாத வாழ்க்க என்னோட போகட்டும். சத்தியம் பண்ணு.”

ரெண்டாம் ஆட்டம்! - 76

அருள் தயங்கி நிற்க, “அப்பா சொல்றதுதான் சரி அருளு... சத்தியம் பண்ணு” என சுப்புவும் இப்போது வற்புறுத்தத் தொடங்கினாள். தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும், அருள் இனி தனக்கு மதுரையும் அப்பாவின் தொழில்களும் வேண்டாமெனச் சத்தியம் செய்தான். சத்தியம், வாக்குறுதிகளையெல்லாம் ஏதாவதொரு சூழல் மீறச் செய்துவிடுமென்கிற யதார்த்தம் காளிக்குத் தெரிந்திருந்தாலும், குறைந்தபட்சம் மதுரையிலிருந்து தொலைவிலிருந்தால் தன் மகன் எல்லாவற்றையும் மறந்து புதிய மனிதனாக மாறக்கூடுமென்கிற நம்பிக்கையிருந்தது.

போலீஸ் நெருக்கடி அதிகமானதால் பாண்டியன், மார்நாட்டை சிவகங்கை கோர்ட்டில் ஆஜராகச் சொல்லிவிட்டான். புயலில் சிக்கிய சுழலைப்போல் பாண்டியனின் ஆட்களெல்லாம் சிறைக்குச் சென்றுவிட, அவனும் அவன் தம்பியும் தனித்துவிடப்பட்டனர். கட்சி வேலைகளில் கவனமாயிருந்தபோதும், அறிவழகன் மார்க்கெட் விவகாரங்கள் அவ்வளவையும் ஒன்றுவிடாமல் கண்காணித்துக் கொண்டிருந்தான். பாண்டியனின் ஆட்கள் தர்ம அடி வாங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தபோது, அவனுக்குப் பெருத்த ஏமாற்றம். அதனாலேயே பாண்டியன் சந்திக்க வேண்டும் எனக் கேட்டபோது ஓரிரு முறை தவிர்த்தவன், மூர்த்தியின் நிர்பந்தத்துக்குப் பிறகு சந்திக்க ஒப்புக்கொண்டான்.

அறிவழகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது ஒரு ஆள் “அங்கன வராண்டாலயே நில்லுங்க, அண்ணன வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவனது பார்வையிலிருந்த உதாசீனத்தை கவனித்தபோது, அந்த வீட்டிலிருந்த மரியாதையும் வரவேற்பும் ஒரே நாளில் காணாமல்போயிருப்பதை பாண்டியனும் குமாரும் புரிந்துகொண்டார்கள். வெறும் அண்டர்வேரோடு வந்த அறிவழகன், வராண்டாவில் கிடந்த ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே “சொல்லு பாண்டியா... என்ன சமாசாரம்?” எனக் கேட்டான். கைகள் இல்லாத அறிவின் உடல் ஈஸி சேரில் எளிதாகப் பொருந்திக்கொண்டது. ஒரு காலை குத்தவைப்பது போன்ற நிலையில் வைத்து அமர்ந்தபோது, பாண்டியனுக்கும் குமாருக்கும் அவனைப் பார்க்க நாராசமாக இருந்தது. வெள்ளி டம்ளரோடு வந்த ஒருவன் “அண்ணே மோர் குடிக்க மறந்துட்டீங்க…’’ என அவன் குடிக்க நீட்டினான். அவன் டம்ளரைக் கையில் பிடித்துக்கொள்ள அறிவு வாய் வைத்து மோரைக் குடிக்கத் தொடங்கினான். பாதியில் நிறுத்தியவன் திரும்பி பாண்டியனிடம், “ஏப்பா டீ காபிலாம் சாப்ட்டு வந்துட்டீங்களா... இல்ல ஏதாச்சும் சொல்லணுமா?” எனக் கேட்க, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ணே... இப்பந்தான் சாப்ட்டோம்” என்றான் பாண்டியன். மோரைக் குடித்து முடித்த அறிவு, தொண்டையைச் செருமிக்கொண்டு “சொல்லு பாண்டியா” என அவர்களைப் பார்த்தான்.

“அண்ணே, மார்க்கெட் பஞ்சாயத்து நாம நெனச்ச மாதிரி அமையலண்ணே…”

பாண்டியனின் குரலில் அவமானமும் தயக்கமும் நிரம்பியிருந்தன.

“எல்லாம் தெரியும்யா… உங்கள நம்பி எந்த வேலையவும் குடுக்க முடியாதுபோலையே… உங்க ஊர்க்காரய்ங்க பேச்செல்லாம் பெரும்பேச்சா இருந்துச்சு… கடைசில எல்லாம் புஸ்ஸுதானா?”

“அப்பிடி இல்லண்ணே…”

பாண்டியன் தயக்கத்தோடு இழுக்க, அறிவழகன் முறைத்தான். குமார் அவசரமாக இடையில் புகுந்து, “கடைசி நேரத்துல அவய்ங்க ஊர்க்காரய்ங்கல்லாம் மொத்தமா உள்ள இறங்கிட்டாய்ங்கண்ணே, அவனுக்குப் பின்னால இப்பிடியொரு செட்டப் இருக்கும்னு எங்க யாருக்குமே தெரியாது...” என்றான்.

“சண்டியர்த்தனம் பண்றது... மெரட்டி உருட்டி அதிகாரம் பண்றது மட்டுமில்லைய்யா, நம்மளுக்காக உசுரையும் குடுக்கற மாதிரி நாலு பேர சம்பாதிச்சுவெக்கணும்…”

அறிவழகன் குத்தலாகச் சொல்ல, குமார் பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்துகொண்டான்.

“எண்ணே, எல்லாத்தையும் கையோட சரி பண்ணிடறோம், பயகள ரிலீஸ் பண்றதுக்கு மட்டும் ஏதாச்சும் வழி பண்ணிவிடுங்கண்ணே…” பாண்டியனுக்கு அவனிடம் கெஞ்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. “இம்புட்டுக்கானு மார்க்கெட் விவகாரத்தையே உங்களால சரி பண்ண முடியலையே... நீங்க எப்பிடிய்யா சாராயக் கடையவெல்லாம் சமாளிப்பீங்க? இதுல அரசியல் ஆச வேற…” குரலில் முன்னைவிடவும் ஆத்திரம் அதிகரிக்க, அதை வெளிப்படுத்த விரும்பாமல் கட்டுப்படுத்திக்கொண்டான். “சரி, நான் வக்கீல்கிட்ட சொல்லி சாமீன் போடச் சொல்றேன். நீங்க கெளம்புங்க...” பாண்டியனும் குமாரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

மார்நாட்டுக்கும் அவனோடு சிறைக்குச் சென்றவர்களுக்கும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்திருந்தது. பழைய இடத்திலேயே தங்கவைப்பது பாதுகாப்பில்லை என வக்கீல் சொல்லியிருந்ததால், அத்தனை பேரையும் மொத்தமாக வரிச்சியூருக்கு இடம் மாற்றியிருந்தார்கள். ஊருக்கு நடுவேயிருந்த, பள்ளிக்கூடத்தை ஒட்டியிருந்த வீடென்பதால் பாதுகாப்பாகப் பட்டது. இவ்வளவு தூரம் தள்ளிவந்ததை அவர்களுக்கு பயந்து ஓடிவந்துவிட்டதாக எல்லோரும் நினைக்கக்கூடுமென மார்நாட்டுக்கு அவமானமாக இருந்தது. இரண்டு மூன்று நாள்கள் அவர்களின் குடிவெறி அடங்கும்வரை காத்திருந்து, பாண்டியன் பார்க்கச் சென்றான். வாசல் வரை சாராய வாடை மணத்தது. மார்நாடு உட்பட அவன் ஆட்கள் அத்தனை பேருக்கும் கண்கள் சிவந்து சரியாக உறக்கமில்லாமல் வீங்கிப் போயிருந்தன. ‘வக்காலி பெருங்குடிகாரத் தாயோலிகளா இருப்பாய்ங்கப்போலயே...’ என நினைத்துக்கொண்டே பாண்டியன் வீட்டுக்குள் கொஞ்சம் சுத்தமாயிருந்த இடத்தில் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தான். இரண்டு நாள்களாகத் தங்களை வந்து பார்க்காத ஆத்திரத்திலிருந்த மார்நாடு, அதைக் காட்டிக்கொள்ளாமல் “அவய்ங்க குடும்பத்தையே கருவறுத்தாத்தான் என் மனசாறும்” என கொக்கரிக்க, “எலேய் அறுத்துத் தள்ளினதெல்லாம் போதும். கொஞ்ச நாளைக்கி அவய்ங்க பக்கம் போகாம செவனேன்னு இருங்க…” என பாண்டியன் முறைத்தான்.

“அப்டில்லாம் இருக்க முடியாது பாண்டியா, வக்காலி வாழ்ந்தா மானத்தோட வாழணும். அவனுக்கு பயந்துகிட்டு மானக்கேடா வாழ்றதுக்கு நாண்டுக்கிட்டுத் தொங்கிருவேன் நானு...”

போதையில் அவனது நாக்கும் உடலும் குழற, ஓரிடத்தில் நிற்க முடியாமல் தடுமாறி விழப்போனவன் சுவரைப் பிடித்துக் கொண்டான். இடுப்பில் நிற்காத வேட்டியை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டான். பாண்டியனுக்கு அவர்களைப் பார்க்க அருவருப்பும் ஆத்திரமுமே மிஞ்சின. “இந்தாரு மார்நாடு, நீங்க எல்லாரும் என் ஊர்காரய்ங்க. எனக்காக வந்து நின்னீங்கன்னுதான் பதிலுக்கு இதையெல்லாம் செஞ்சுட்டு இருக்கேன். நான் சொல்றதக் கேக்கறதா இருந்தா எங்கூட இருங்க... இல்லன்னா கெளம்பி ஊர்ப் பக்கமே போயிருங்க” பாண்டியன் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, “என்ன பாண்டியா... ஒரு சண்டைக்கே பயந்துட்டியா?” என்று ஒருவன் சத்தமாகச் சிரித்தான். சுர்ரென உச்சந்தலையில் ரெளத்திரமேற சடாரென எழுந்த பாண்டியன், நாற்காலியை எடுத்து சிரித்தவனை அடிக்க, எல்லோரும் வெலவெலத்துப் போயினர். “உங்க முன்னாடி மதிப்பா பேசிக்கிருந்தா தொக்காப் போச்சுல்ல… ஒரு மயிரானும் இங்க இருக்க வேணாம். கேஸ நான் முடிச்சுக்கறேன்… எல்லாம் பொச்சப் பொத்திக்கிட்டு ஊரப் பாத்துப் போங்கடா...” ஆத்திரத்தோடு கத்திய பாண்டியன், உடையைச் சரிசெய்தபடியே அங்கிருந்து வெளியேறினான்.

(ஆட்டம் தொடரும்)