Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 77

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

புதுமண்டபத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ஏழுகடல் தெருவுக்கு நிறைய சிறப்புகளுண்டு. சாளுவ நாயக்கரால் 1516-ல் கட்டப்பட்ட மிகப்பெரியதொரு குளம் அங்கு உண்டு.

ரெண்டாம் ஆட்டம்! - 77

புதுமண்டபத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ஏழுகடல் தெருவுக்கு நிறைய சிறப்புகளுண்டு. சாளுவ நாயக்கரால் 1516-ல் கட்டப்பட்ட மிகப்பெரியதொரு குளம் அங்கு உண்டு.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

மதுரை 1990.

புதுமண்டபத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ஏழுகடல் தெருவுக்கு நிறைய சிறப்புகளுண்டு. சாளுவ நாயக்கரால் 1516-ல் கட்டப்பட்ட மிகப்பெரியதொரு குளம் அங்கு உண்டு. `ஏழுகடல்’ என அந்தக் குளத்துக்குப் பெயரிடப்பட்டதாலேயே அந்த வீதியும், `ஏழுகடல் தெரு’வென அழைக்கப்படுகிறது. மீனாட்சியம்மனின் தாயான காஞ்சனமாலைக்கு இந்த வீதியில் கோயிலுண்டு என்பதால், மதுரையின் மிகப்பழைய மனிதர்களும் கதைகளும் இந்த வீதியில் சுழன்றுவருவார்கள். சாளுவ நாயக்கர் கட்டிய குளம் காலப்போக்கில் நீரற்று புதர் மண்டிப்போனதால், அறிவழகன் அவ்விடத்தை மேடாக்கி வணிக வளாகமொன்றைக் கட்டத் திட்டமிட்டான்.

தான் மேயராக இருந்ததன் அடையாளமாக மதுரைக்குள் காலகாலத்துக்கும் இருக்கும்படி எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்பது அவனது விருப்பம். மதுரைவாசிகள் மேடாக்கப்படும் குளத்தை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே கட்டடம் கட்டுவதற்கான தொடக்க வேலைகள் ஆரம்பமாகியிருந்தன.

ரெண்டாம் ஆட்டம்! - 77

மூர்த்திக்கு மகனைப் பார்க்கப் பெருமிதமாக இருந்தது.

“இத்தன வருஷத்துல யாருக்கும் வராத யோசனப்பா இது… நீ சரியா புடிச்சிட்ட…”

“என் காலத்துல இந்த மதுரைய எவ்ளோ மாத்த முடியுமோ அவ்ளோ மாத்தப் போறேம்ப்பா…”

மூர்த்தி அவனை இறுக அணைத்துக்கொண்டார்.

“மனம்போல செய்யிப்பா. புதுசா கட்ற காம்ப்ளக்ஸ்ல புது மண்டபத்து யாவாரிங்க எல்லாருக்கும் கடையக் குடுத்து அங்க இருந்து நகர்த்தப் பாரு” என்று அவர் சொல்ல, அறிவு ஆமோதித்தான்.

புதுமண்டபத்துக்குள்ளிருக்கும் நூற்றுக்கணக்கான கடைகள் ஏராளமான வருடங்களாக அங்கு இருந்துவருகின்றன. விதவிதமான துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள், பூசை சாமான்கள், பித்தளைச் சாமான்கள், நாடகங்களுக்குத் தேவையான ஒப்பனைப் பொருள்களென புதுமண்டபத்துக் கடைகள் ஓர் ஆச்சர்யம். எதையும் வாங்காமல் வேடிக்கை பார்த்தாலே நாள் முழுக்க வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் மனிதர்கள், காவி உடையணிந்து சுற்றும் வெளிநாட்டுக்காரர்கள், வியர்வை வழியும் முகத்தில் எப்பொழுதும் நிரம்பிய சிரிப்போடிருக்கும் வியாபாரிகள் என அந்தக் கடைகளின் அழகே தனி. புது மண்டபம் மட்டுமே தங்களது அடையாளமென்பதால், அவர்கள் இன்னோர் இடத்துக்கு மாறமுடியாதெனப் பிடிவாதமாயிருந்தார்கள்.

அறிவழகனுக்கு இந்த விஷயத்தில் முதலில் ஏமாற்றமிருந்தாலும், நிதானமாக யோசித்தபோது புதிய வியாபாரிகளுக்கான கதவுகளைத் திறந்துவிட இதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாமென முடிவு செய்தான். மதுரையின் வெவ்வேறு பகுதிகளில், இதுபோல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் கட்டும் யோசனையும் அவனுக்குள் உதித்தது. புதுமண்டப வியாபாரிகளோடு பேச்சுவார்த்தை சுமுகமாகச் செல்லவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட மூர்த்தி “அறிவு, இந்த மாதிரிப் பேச்சுவார்த்தைக்கெல்லாம் நாம அரசியல்வாதியா பேசினா தோதுப்படாது. இவென் நம்மள்ல ஒருத்தன்டான்னு அவய்ங்க நெனைக்கிற மாதிரி இருக்கணும். நீ பாண்டியன வெச்சு வேணும்னா ஒருக்கா பேசிப்பாரேன்…” என ஆலோசனை கூறினார்.

“அவன் மட்டிப்பயப்பா... எந்த வேலையவும் உருப்படியா செய்ய மாட்டான். அதுமில்லாம இப்போதைக்கி புதுமண்டபத்துல இருந்து எதையும் நாம மாத்த வேணாம். அங்க இருக்கற கடையெல்லாம் அப்பிடியே இருக்கட்டும்.”

மூர்த்திக்கு அவன் சொன்னதைக் கேட்க ஏமாற்றமாக இருந்தது. முகக்குறிப்பை அறிந்துகொண்ட அறிவழகன், “எப்பா மதுரக்குள்ள இந்த மாதிரி இன்னும் நாலஞ்சு எடத்துல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டினம்னா கார்ப்பரேஷனுக்கு நல்ல வருமானம் வரும். சிறு வியாபாரிகள இப்போதைக்கு நாம இதுக்குள்ள இழுத்துவிட வேணாம். புது யாவாரிங்க உள்ள வரட்டும். அதான் நல்லது…” என்று சிரித்தான்.

“என்ன இருந்தாலும் நம்பிக்கையான ஆள் யாராச்சும் கூட இருக்கணுமேப்பா…” மூர்த்தி கவலையோடு பார்க்க, “நானும் அதப்பத்திதாம்ப்பா உங்கிட்ட பேசணும்னு இருந்தேன். பாண்டியனும் குமாரும் இதுக்கு சரிப்பட மாட்டாய்ங்க. சும்மா அடிதடி வெட்டுக் குத்தெல்லாம் வெச்சுக்கிட்டு இனிமே அரசியல் பண்ண முடியாதுப்பா. நாலு பேர் மதிக்கிற ஆளுகளத்தான் கூட வெச்சுக்கணும்” அறிவழகன் புதிராகச் சொன்னான்.

“நீ என்ன சொல்ல வர்றன்னு புரியல அறிவு?”

“காளிக்கும் நமக்குமான பக, மருது சாவோட முடிஞ்சுபோச்சு. எப்பிடியாச்சும் அந்தாளச் சரிக்கட்டி மறுபடியும் நம்மகூட சேத்துக்கணும்ப்பா...”

“இல்லய்யா அது சுத்தப்படாது. காளி லேசுல நம்ம பக்கம் வர மாட்டான்.”

“ஒரு முட்டு முட்டிப் பாப்போம், வந்தா மல போனா மசுரு… கேக்காமயே விடுறதுக்கு ஒரு தடவ கேட்டுறலாம்ல…”

அறிவழகனின் வார்த்தைகள் மூர்த்தியின் மூளைக்குள் சுழலத் தொடங்க, காளியைத் தங்களோடு வைத்துக்கொள்வதிலிருக்கும் அனுகூலங்களை யோசிக்கத் தொடங்கினார். காலம் எல்லா நினைவுகளையும் அடித்துச்செல்லும் வல்லமை கொண்டதென்பதை அறியாதவரல்ல அவர். வெறுப்பை, பகையை எல்லாம் மறக்கடிக்கும் சக்தி விசுவாசத்துக்கு உண்டு. காளி விசுவாசத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதோடு, குடும்பம் முக்கியமெனக் கருதுகிறவன். “அறிவு... காளிக்கு பலம் பலவீனம் எல்லாம் அவன் குடும்பந்தான். சுப்புத்தாயி ஏதோவொரு வகைல நம்மளுக்குக் கடன்பட்டிருக்கா… காளி நம்மகிட்ட வரணும்னா நாம சுப்புத்தாய்கிட்ட போகணும். அந்தப் பிள்ள சொன்னா, அவென் மறுபேச்சில்லாம சம்மதிப்பான்” அவர் சொன்ன யோசனையை அறிவும் ஆமோதித்தான்.

முத்தையா, சென்ட்ரல் தியேட்டர் எதிரில் திருட முயன்று மாட்டி ஜெயிலுக்குப் போனதிலிருந்து விடுதலைக்குப் பின் அரசரடி மனோகரனிடம் போய்ச் சேர்ந்துவிட்டதுவரை எல்லாக் கதைகளையும் கேள்விப்பட்ட காளி, “சனியன் எப்பிடியோ ஒழிஞ்சு போகட்டும், நம்ம கண்ல படாம இருந்தா சரி” என்று தன் ஆட்களிடம் சொன்னான். திடுதிப்பென மகனை மெட்ராஸுக்கு அனுப்பிவிட்டதால், அந்த வீட்டிலிருந்த சிரிப்பும் கொண்டாட்டமும் காணாமல்போயிருந்தன. மகன் வேறு ஊரில் பாதுகாப்பாக இருந்தால் போதும் என முதலில் சமாதானம்கொண்ட சுப்பு, அவன் ஊருக்குச் சென்ற ஓரிரு நாள்களிலேயே மகனைப் பிரிந்த சோகம் தாளாமல் அழத் தொடங்கிவிட்டாள். சரியான உணவும் உறக்கமுமில்லாமல் சோர்ந்துபோனவளிடம் “ஏய் எதுக்கு இப்பிடி இருக்க? அவென் வாழ்க்க நல்லாருக்கணும்னுதான நாம தொலவா அனுப்பி வெச்சிருக்கோம்” என காளி ஆறுதல் சொல்ல, “நீ சொல்றது புத்திக்கு ஏறுது, ஆனா மனசு கேக்க மாட்டேங்குது. இங்கனக்குள்ளயே என் காலச் சுத்திட்டு இருந்த பயல ஒரே நாள்ல பிரிஞ்சு இருன்னு சொல்லிட்ட. அவென் அங்க எப்பிடி இருக்கான், எங்க சாப்புடறான்னு தெரியாம மனசு கெடந்து அடிச்சுக்குது…” என முனகினாள்.

“பைத்தியக்காரி. அவென் என்ன சின்னப்பயலா, எல்லாம் நல்லாத்தான் இருப்பான். நீ கண்டதையும் யோசிக்காத. பாப்பாவ காலாகாலத்துல ஒரு நல்ல எடமாப் பாத்துக் கட்டிக் குடுக்கணும். அதுக்குண்டான வழியப் பாரு…”

காளி, மகனது பிரிவை இயல்பாக எடுத்துக்கொண்டதாகக் காட்டினாலும், அவன் மனதை அறிந்த சுப்பு அவனுக்காகவேணும் தன்னைத் தேற்றிக்கொள்ள வேண்டுமென முடிவுசெய்தாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 77

அன்று செவ்வாய்க்கிழமை, காளி ஒரு விவகாரமாக சிவகங்கை வரை சென்றிருக்க, அவனது ஆட்கள் மார்க்கெட்டுக்கும் மற்ற மற்ற வேலைகளுக்குமாகச் சென்றுவிட்டிருந்தார்கள். வீட்டு வாசலில் வந்து நின்ற காரின் சத்தம் கேட்டு, முதலில் எட்டிப்பார்த்தது காளியின் மகள்தான். மூர்த்தி, கார் கதவைத் திறந்து இறங்குவதை கவனித்தவளுக்கு உதறலெடுக்க, “அம்மா…” எனச் சத்தம் போட்டாள். அவள் சத்தம் கேட்டு விரைந்து வந்த சுப்புத்தாய், வாசலில் மூர்த்தியைப் பார்த்ததும் ஒருநொடி ஸ்தம்பித்துப்போனாள். மனதிலிருந்த பதற்றத்தை மறைத்துக்கொண்டவள், முகத்தை இறுக்கமாக்கியபடி “அவரு வீட்டுல இல்லீங்களே…” என்றாள். சிரித்தபடி வந்த மூர்த்தி, “ஏந்த்தா... நான் உன்னயவும் உன் பிள்ளையவும் பாக்க வரக் கூடாதா?” எனக் கேட்டார். படியேறி வரக் காத்திருந்தவரை உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என யோசித்த சுப்பு, அவரோடு வேறு யாருமில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு “உள்ள வாங்க” என அழைத்தாள்.

சுப்புவின் மகள் அவருக்குத் தண்ணீர் கொடுக்க, வாங்கிக் குடித்தவர் நிதானமாக சுப்புவையும் அவளது மகளையும் பார்த்தார். “என்னடா திடுதிப்புன்னு வந்து நிக்கிறானேன்னு ஒண்ணும் யோசிக்காதம்மா தங்கச்சி. நீயும் நானும் இன்னிக்கி நேத்துப் பழக்கமா? இதே ஊருல உன்னய கவுன்சிலராக்கி அழகு பாத்தவன் நான்… ம்ம்ம்... எல்லாம் ஒரு காலம். எனக்கு காளி மேலயோ உங்க மேலயோ என்னிக்குமே ஆத்திரம் இருந்ததில்ல. எல்லாம் அந்தப்பய மருது மேல இருந்த கோவந்தான்” ஒரு நொடி பேச்சை நிறுத்தியவருக்குக் கண்கள் கலங்கின. “பெத்த பிள்ளைய துள்ளத் துடிக்கக் கொன்னவன எப்பிடிம்மா மறந்து மன்னிக்க முடியும்…” துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டவரை சுப்புவும் புரியாமல் பார்த்தாள்.

“செரி விடு… போனதெல்லாம் பேசி இப்ப என்ன ஆகப் போகுது… தம்பிய காளி வெளியூருக்கு அனுப்பிருச்சுன்னு கேள்விப்பட்டதும் எனக்கு மனசே விட்டுப்போச்சு… பெத்த பிள்ளைய பிரிஞ்சு இருக்கறது எம்புட்டுக் கஷ்டம்னு எனக்குத் தெரியும். அதான் மனசு கேக்காம வந்தேன்.”

“எம்புள்ள தூரமா இருந்தாலும் பரவா இல்லண்ணே, பாதுகாப்பா இருந்தா போதும்.”

சுப்பு வெடுக்கெனச் சொல்ல, “அட என்னத்தா இப்பிடி பேசுற? நானா உன் குலத்த அழிக்கணும்னு நெனைப்பேன்..?” என மூர்த்தி பரபரப்பானார்.

“எண்ணே, சாராயக்கட பிரச்னைல என் பிள்ளைய ஜெயில்ல வெச்சதையும் மறக்கல, நேத்து இன்னியாரம் மார்க்கெட்டுக்காக என் குடும்பத்த அழிக்க நெனச்சதையும் மறக்கல. ஆகாவலித்தனமா பேசாம எந்திரிச்சுப் போயிருங்க. என் புருஷனுக்குத் தெரிஞ்சா வெட்டுக்குத்துன்னு இன்னும் நாலு பேரு உசுருதான் போகும்...”

சுப்பு எரிச்சலோடு சொல்ல, மூர்த்திக்குக் கண்கள் கலங்கின. “எல்லாத்தையும் மறந்துட்டு பழைய மாதிரி நாமல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கணும்னு ஆசையோட வந்தேன். மூஞ்சில அடிச்ச மாதிரி பேசறியேத்தா… சத்தியமா சொல்றேன்... சாராயக் கட வெவகாரம், மார்க்கெட் வெவகாரம் எல்லாமே எங்களுக்குத் தெரியாம அந்தப் பயக செஞ்சது. என் மகனே பாண்டியனக் கூப்ட்டு கண்டிச்சு இனிமே வரக் கூடாதுன்னு சொல்லிட்டான். காளி எங்களோட சினேகமா ஆகாட்டியும் பரவால்ல, இந்தப் பயக செஞ்சதுக்கு நான் மன்னிப்புக் கேட்டேன்னு மட்டும் சொல்லிரும்மா… எங்களுக்காகப் பிள்ளையப் பிரிஞ்சு இருக்காத... அந்தப் பாவம் என்னயச் சும்மா விடாது…” என்றபடியே எழுந்துகொண்ட மூர்த்தி, திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி நடந்தார்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism