மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 78

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குய்யா… எப்பிடியாப்பட்ட மனுஷன் அவரு? நீங்க நல்லா வர்றதப் பாத்துட்டுத்தான் சாகணும்னு தவிச்சாரு, இப்ப நல்லா வரணும்னு உசுர விட்ருக்காரு…”

எந்த மனிதனும் எளிதில் முடிவுரை எழுதிவிட முடியாத கதை, வாழ்க்கை. தன்னைப் புரிந்துகொண்டவனும் தன் வாழ்வுக்கான அர்த்தத்தை விளங்கிக்கொண்டவனும் மட்டும்தான் தனக்கான முடிவுரையை மகிழ்வோடு எழுதிக்கொள்ள முடியும். மகன்களின் வாழ்க்கைக்காக முத்தையா முடிவுரை எழுதிக்கொள்வதை மகிழ்வோடு செய்தார். அவருக்கு யுத்தங்களோ, எதிரிகளோ புதிதில்லை, எதிரிகளின் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு சண்டையிடுவதுதான் நல்ல வீரனுக்கு அழகு.

எந்த மனிதனும் சமநிலை தவறாத வரையில் வன்முறைக்குள் நுழைவதில்லை. கடந்தகாலத்தில் அவர் எதிர்கொண்ட அத்தனை எதிரிகளும் வெறுப்பின் உச்சத்தில் சமநிலை தவறக் கூடியவர்களாகத்தான் இருந்தார்கள். செல்வத்தின் மீதான வெறுப்புதான் தனக்கான ஆயுதமென்கிற அவரது கணிப்பு பொய்த்துப் போகவில்லை. கருப்புவை நோக்கி அவர் வீசியெறிந்த வார்த்தைகள் அவனுக்குள்ளிருந்த வெறுப்பை மட்டுமல்லாமல் வன்முறையையும் கிளறிவிட்டன. வெட்டப்பட்ட தலையிலிருந்த முத்தையாவின் கண்களில் ‘இப்போதும் வென்றது நான்தான்’ என்கிற பெருமிதமிருந்ததை கருப்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பேய் பிடித்ததுபோல் இரண்டு கொலைகளைச் செய்துவிட்டு கோயிலின் முன்னால் அமர்ந்திருந்தவனை அவனது வீட்டுப் பெண்கள் வம்படியாக அங்கிருந்து அடித்து இழுத்துச் சென்றனர். தன்னைப் பிடித்திருந்தவர்களை உதறித் தள்ளிவிட்டு, மணலில் கிடந்த முத்தையாவின் உடலை மனநலம் பிறழ்ந்தவனைப் போல் வெட்டினான். சுற்றியிருந்த ஆட்களின் அலறல் மீண்டும் அதிகரிக்க, முனுசும் மற்றவர்களும் துரத்திப்போய் கருப்புவைப் பிடித்து இழுத்தனர். கையில் அரிவாளோடு வெறிபிடித்த மிருகமென ஊரே பார்க்கும்படி ஆடினான். “ஒக்காலி, யாருன்னுடா நெனச்சுட்டு இருக்கீங்க? வாங்கடா… இன்னும் எத்தன பேரு வேணும்னாலும் வாங்கடா… ஒருத்தன் விடாம அம்புட்டுப் பய ரத்தத்தையும் குடிக்கிறேன்…” கையில் பற்றியிருந்த அரிவாளுக்கு ரத்ததாகம் அடங்காததைப்போல் விலகி ஓடிய எல்லோரையும் தேடித் தேடிச் சென்றது. முனுசும் சங்கரியும் அவன் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கப் போராடிப் பார்த்துத் தோற்றுப்போனார்கள். காரில் அவனைத் தள்ளி கதவுகளை அடைத்ததும், மின்னல் வேகத்தில் வண்டி அங்கிருந்து மறைந்துபோனது.

ரெண்டாம் ஆட்டம்! - 78

செல்வத்தை இத்தனை காலமாகப் பாதுகாத்த வெளிச்சம் அணைந்துபோனது. எந்த மனிதரை பதின் பருவத்தில் வெறுத்தானோ, எந்த மனிதனைப் புரிந்துகொண்டபோது முழுமையான ஆணாகத் தன்னை உணர்ந்தானோ அந்த மனிதர் இனியில்லை. முத்தையா அவனுக்காகச் செய்ததை எந்தத் தந்தையும் தன் மகனுக்காகச் செய்ததில்லை. வாழும் காலத்திலும் இறப்பின்போதும் உலகின் கண்களுக்குத் தன்னைக் கோழையாகவே காட்டிக் கொண்டபடியே மகனுக்கான பாதுகாப்பு வளையத்தை உறுதியாக்குவதில் கவனமாயிருந்தவர் அவர். இறுதி ஊர்வலம் தொடங்கியபோது, காலமும் பின்தொடர்ந்து வரத் தொடங்கியது. முத்தையாவைத் தெரிந்தவர்கள், அவரால் தங்களைக் காத்துக் கொண்டவர்கள், அவரது தியாகத்தால் தங்களது பாவங்களை கழுவிக்கொண்டவர்கள் என கண்ணீரைச் சுமந்துவந்த கூட்டத்தில், சிலர் நொறுங்கி அழுதனர். அந்த அழுகையில் அவருக்கான நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத குற்றவுணர்ச்சியும் அவரைக் கைவிட்டுவிட்ட ஆற்றாமையும் பெருகியோடின.

வெயில் மறைந்து வானம் விநோதமாக இருண்டிருக்க, கடுமையான வெக்கையில் எல்லோருக்கும் வியர்த்துக்கொட்டியது. மயானத்தை நோக்கிய பாதை முழுக்க சாமந்திப்பூவின் வாடை நிறையத் தொடங்க, வெடிச்சத்தமும் கொட்டுச் சத்தமும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தவர்களைப் பிடித்து வெளியே இழுத்தது. எந்த உலகம் அவரைப் பரிகசித்ததோ, எந்த உலகம் அவரைக் கீழ்மைப்படுத்தியதோ, எந்த உலகம் அவரைத் தனது தேவதைகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டதோ அந்த உலகம் அவருக்காகக் கண்ணீர் சிந்தியது.

“டேய் செல்வம், சுயநலமா நம்மளப் பத்தி மட்டும் யோசிச்சுட்டு அந்தாள சாகக் குடுத்துட்டமேடா… ஐயோ… எப்பா… என் சாமி… அனாமத்தா செத்துப்போனியே…”

சேகரின் அழுகுரல் ஓய்வதாக இல்லை. ஒற்றைக்காலோடு கெந்திக் கெந்தி நடந்தவனது உடல் அழுகையிலும் அதிர்ச்சியிலும் தடுமாறியபடியே இருந்தது. திடீர் திடீரென தலையிலடித்துக்கொண்டு அழுதவனை உடன் வந்தவர்கள் கட்டுப்படுத்த முயன்று தோற்றார்கள். எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் உறைந்துபோனவனாக செல்வம் எல்லோருக்கும் முன்னால் சட்டையில்லாத உடம்போடு நடந்துகொண்டிருந்தான். வெடிக்கக் காத்திருக்கும் குமுறல்களை உள்ளடக்கிய எரிமலையென அவன் கண்கள் மட்டும் சிவந்துபோயிருந்தன.

மயானக்கரையில் திரண்டிருந்த கூட்டத்தின் அழுகை ஏதோவொரு புள்ளியில் தொடங்கி உச்சத்தை நோக்கி நகர, ஆஸ்பத்திரி துணி சுற்றி, எரிக்கப்படுவதற்காக முடங்கிக்கிடந்த முத்தையாவின் உடல் அமைதியாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டது. சாவு காரியம் பார்த்துக்கொண்டிருந்த வேம்பு, ‘கடைசியா ஒருக்கா மூஞ்சியப் பாக்கறவங்க பாத்துக்கங்கப்பா…” எனச் சத்தம்போட, அருகில் நின்றிருந்த சேகர் மீண்டும் வெடித்து அழுத் தொடங்கினான். மூன்று நான்கு பேர் அவனைப் பிடித்து இழுத்துச்செல்ல, “என்னய விட்ருங்கய்யா, நானும் எங்கப்பன் கூடயே போயிடறேன்… இந்த அநாத நாயிக்கு இந்த உலகத்துல இனி எவன்யா இருக்கான்… என்னய விடுங்கய்யா…” பெருஞ்சத்தத்தோடு அழுத சேகருக்கு, தொண்டைத்தண்ணி வற்றிப்போனது. முத்தையாவின் உடலுக்கு நெருப்பு மூட்டிய செல்வம் அத்தனை நேரம் அடக்கிவைத்திருந்த வைராக்கியமெல்லாம் நொறுங்கி உடைந்து அழத் தொடங்கினான். சோணையும், அவனோடு இருந்தவர்களும் அமைதியாக அவன் அழுது முடிக்கக் காத்திருப்பவர்களைப்போல் மற்றவர்களையெல்லாம் அங்கிருந்து கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.

முத்தையாவின் வாழ்க்கை செல்வத்துக்கு விட்டுச் சென்ற செய்திகள் அசாத்தியமானவை. எந்த வெற்றியும், எந்தத் தோல்வியும் நிரந்தரமில்லை. வாழ்வை ஏதோவொரு காரணத்துக்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதைவிட, எங்கெல்லாம் நீ தோற்கிறாயோ அங்கெல்லாம் உன்னை நிரூபித்துக்கொண்டே இரு, அந்தத் தற்காலிக வெற்றிகள் மட்டும்தான் இவ்வுலகில் நீ வாழ்ந்ததற்கான அடையாளங்கள். ‘‘இத்தன காலம், இம்புட்டுத் துயரப்பட்டு உங்கள ஆளாக்கினதெல்லாம் ஒண்ணுமில்லாமப் போக விட்ருவனாடா செல்வம்...” என அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை அவர் இல்லாமல் போனபோதுதான் செல்வத்தால் புரிந்துகொள்ள முடிந்தது. தனக்கான அடையாளங்களையெல்லாம் ஸ்வீகரித்துக்கொண்ட இந்தச் சமூகத்திடமிருந்து தனக்கான அங்கீகாரங்களை தன் மகன் மீட்டுத் தருவானென்கிற நம்பிக்கை எப்படி அவருக்குள் முளைத்திருக்கும்? ‘இம்புட்டு வைராக்கியத்த உள்ளயே வெச்சுருந்திருக்கியேப்பா...’ என நினைத்து நினைத்து செல்வம் அழுதான். முத்தையாவின் உடல் எரிந்தடங்க நீண்ட அவகாசம் பிடித்ததாக மயானக்கரை ஊழியர்கள் அடுத்த நாள் சொன்னபோது, வாழ்க்கை முழுக்க அவரைச் சூழ்ந்திருந்த அவமான உணர்ச்சிகள் விலகிச் செல்ல அவகாசமெடுக்கத்தானே செய்யுமென செல்வம் நினைத்தான். யாருக்காக வாழ வேண்டும் என்பதைவிட எதற்காக வாழ வேண்டும் என்கிற தெளிவு இப்போது அவனிடமிருந்தது.

இறுதி ஊர்வலம் தொடங்கியபோது அழுது களைத்துப்போன உடலோடு வந்த சீனியம்மா, எந்த மூலையில் முடங்கிக்கிடந்ததோ அவ்விடத்தை விட்டு அசைந்திருக்கவில்லை. கால்மாட்டிலிருந்த சுவரின் ஓரத்திலிருந்து, நீண்ட வரிசையில் வந்த எறும்புகள் தன்னுடலில் ஊர்ந்து சென்றதைக்கூட பொருட்படுத்தாதவளாக முடங்கிக்கிடந்தாள்.

“எத்த, கொஞ்சம் டீயாச்சும் குடித்த…” ஜெகதி சோர்ந்துபோய் எழுப்பியபோது, கையை உயர்த்தி வேண்டாமென மட்டும்தான் சீனியம்மாவால் சொல்ல முடிந்தது. தம்பியின் காரியம்கூட முடிந்திருக்காத நிலையில், இன்னொரு பெரிய சாவை எதிர்கொண்டதில் ஜெகதி முற்றாக உடைந்துபோயிருந்தாள். செல்வம், சேகர், சோணை எல்லோருமே அடுத்து என்ன செய்வதென்கிற நிச்சயமின்றி ஆளுக்கொரு பக்கமாக முடங்கிப்போய் கிடக்க, ஜெகதி ஒருத்தி மட்டும்தான் அந்த வீட்டை இயக்குகிறவளாக இருந்தாள்.

“செல்வம், இப்பிடி எல்லாத்தையும் விட்டுட்டு மூலையில மொடங்கிக் கெடக்கவாடா அந்த மனுஷன் உசுர விட்டுட்டுப் போனாரு… எந்திரிடா… முடிக்க வேண்டியதயெல்லாம் கையோட முடிச்சுவிட்றணும்… இல்லன்னா அவய்ங்க தப்பிச்சிருவாய்ங்க…”

அவனை இயல்புக்குக் கொண்டுவர முயன்று தோற்றுப்போனாள்.

ரவி அண்ணன் துக்கம் விசாரிக்க வந்தபோது, முத்தையாவின் வீடு எல்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் இழந்து, இருண்டு போய்விட்டிருந்தது. ரவி அமர்வதற்கு நாற்காலி எடுத்துப் போட்டுவிட்டு ஜெகதி தேநீர் எடுத்துவரச் சென்றாள். சோபையற்றவனாக நின்ற செல்வத்தைப் பார்க்க அவருக்கு வருத்தமாக இருந்தது.

“மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குய்யா… எப்பிடியாப்பட்ட மனுஷன் அவரு? நீங்க நல்லா வர்றதப் பாத்துட்டுத்தான் சாகணும்னு தவிச்சாரு, இப்ப நல்லா வரணும்னு உசுர விட்ருக்காரு…”

செல்வத்தின் உடலில் தன்னை மீறிய அதிர்வும் துயரும் அதிகரித்தன.

ரெண்டாம் ஆட்டம்! - 78

“எந்த மனுஷனும் தன்னையச் சுருக்கிக்கிட்டு மத்தவனுக்காக வழிவிட மாட்டான்யா… நம்மளுக்குத் தேவையான காரியத்த சாதிச்சுக்கணும்னு நெனைப்பான். ஆனா, உங்கப்பா அவருக்குப் பின்னாடி வந்த எல்லாரும் வளர்றதுக்கு ஒரு காரணமா இருந்துருக்காரு. கேக்காமயே போயி உதவி செஞ்சுருக்காரு. வாழ்க்கைல பெரும்பகுதி காலத்த ஜெயில்ல கழிக்க எவனுக்குய்யா துணிச்சல் வரும்?” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே செல்வம் உடைந்து அழத் தொடங்க, ரவி எழுந்து அவனை ஆறுதலாக அணைத்துக்கொண்டார். தேநீர் எடுத்து வந்த ஜெகதி, எதுவும் பேசாமல் அப்படியே நின்றுவிட்டாள்.

குற்றத்துக்கும் சட்டத்துக்கும் இடையிலான விளையாட்டின் எல்லையை, கோயில் வாசலில் ஒரு போலீஸ்காரரைக் கொலை செய்ததன் வழியாகக் கருப்பு தாண்டியிருந்தான். அவன்மீதும், அவனது பங்காளிகளின் மீதுமிருந்த பழைய வழக்குகளையெல்லாம் தூசுதட்டி மதுரையின் அத்தனை ஸ்டேஷன்களிலும் புதிய வழக்குகள் பதியப்பட்டன. மனிதனும் மிருகமுமல்லாத நிலையில் கருப்பு அரற்றிக்கொண்டிருந்தான். தன்னைக் கையிலெடுக்கிறவனைச் சிந்திக்கவிடாமல் சுழற்றியடிக்கும் வல்லமை வன்முறைக்கு உண்டு. எத்தனை பேரின் ரத்தம் குடித்தாலும் அடங்காத தாகத்தையும் வெறியையும் பூரிப்போடு பரிசளிக்கும். உலகின் மீதான கவலை, சட்டத்தின் மீதான அச்சமென எதையும் அவன் யோசிக்கவில்லை. நீண்ட பனிக்காலத்துக்கு முந்தைய நாள்களில் வெறியேறி வேட்டையாடும் காட்டு மிருகத்தைப்போல், அடுத்த இரைக்கான வேட்டையைக் குறித்த சிந்தனையில் மனம் உழன்றது. மதுரைக்குள்ளும் கருப்புவுக்குச் சொந்தக்காரர்கள் எனச் சொல்லக்கூடியவர்கள் வசிக்கும் இடங்களிலும் போலீஸ்காரர்கள் விரட்டி விரட்டித் தேடிக்கொண்டிருக்க, கருப்புவும் முனுசும் எல்லை தாண்டி கேரளாவின் இடுக்கிக்குள் சென்றுவிட்டிருந்தனர்.

(ஆட்டம் தொடரும்)