மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 80

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

விடிவிளக்கின் வெளிச்சத்தில் ஆழ்ந்த அமைதியில் கிடந்த படுக்கையறையில் ஜெகதி அலறியபடி எழ, வீட்டிலிருந்த எல்லோரும் அடித்துப் பிடித்து எழுந்தனர்

நெருப்பு ஜுவாலைகள் அடர்ந்து எரியும் பெரும் உலைக்களத்தில், ஆட்டைக் கட்டி இழுப்பதுபோல் இழுத்துவந்து மனிதர்களைத் தள்ளிவிடுகிறார்கள். நெருப்பின் பசிக்கு இரையாகும் மனிதர்களின் அலறல்களைப் பொருட்படுத்தாத வண்ணம் சித்ரவதை செய்பவர்கள் அடுத்தடுத்து நிறைய பேரை உலைக்களம் நோக்கி இழுத்துவருகிறார்கள். செவ்வானத்தில் நெருப்பின் புகையும் சேர்ந்து அடர் சிவப்பாய் தகித்துக்கொண்டிருக்க, உலைக்களத்தில் தள்ளப்படுகிறவர்களின் வரிசையில் சுரேஷ், முத்தையாவைத் தொடர்ந்து சேகரும், அவனைத் தொடர்ந்து செல்வமும் அவன் கைகளை இறுகப் பற்றியபடி ஜெகதியும் நின்றுகொண்டிருந்தார்கள். இதுதான் நரகத்தின் வாசலா... பாவக் கணக்குகளின் அடிப்படையில் எந்தப் பிரிவினையுமில்லாமல் எல்லோரையும் ஏன் இப்படி நெருப்பில் எரிக்கிறார்கள்? அச்சத்தில் அலற முயன்றவளின் குரல் நசுங்கி நாவைத் தாண்டி வெளியேறாமல் முடங்கிப்போனது. சேகரைத் தொடர்ந்து செல்வம் உலைக்களத்தில் தள்ளப்பட்டபோது, நொடியில் அவனுடல் பஸ்பமாகி மறைந்துபோக, கண்களில் அந்த நெருப்பு ஜுவாலை பற்றிக்கொண்ட அதிர்ச்சியில் ஜெகதி அலறினாள்.

விடிவிளக்கின் வெளிச்சத்தில் ஆழ்ந்த அமைதியில் கிடந்த படுக்கையறையில் ஜெகதி அலறியபடி எழ, வீட்டிலிருந்த எல்லோரும் அடித்துப் பிடித்து எழுந்தனர். கனவா, நிஜமா என்று பிரித்தறிய முடியாதபடி ஒவ்வொரு காட்சியும் அவள் நினைவிலிருந்து அகலாமல் தெளிவானவையாக இருந்தன. வியர்த்துப்போன முகத்தோடு பேயறைந்ததுபோல் அமர்ந்திருந்தவளின் தலையை செல்வம் வருடிக் கொடுத்தான். “எதும் கெட்ட கெனா கண்டியா?”

ஜெகதியின் மருண்ட கண்களில் இதுவரையில்லாத அச்சம் நிரம்பியிருந்தது. பதில் பேச முடியாதவளாக உறைந்தநிலையில் ஆமெனத் தலையாட்டினாள். செல்வத்தின் அம்மா கதவு திறந்து எட்டிப் பார்த்துவிட்டு, சாமித்தட்டிலிருந்து விபூதி எடுத்துவந்து பூசிவிட்டது.

“கண்டதையும் நெனைச்சுட்டு இருக்காதத்தா...” என்று சொல்லிவிட்டு, வந்த வேகத்திலேயே திரும்பி கதவைத் தாழிட்டுச் சென்றது. உறங்க விரும்பாதவளாக ஜெகதி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். அறையில் குளிரைக் கூட்டும்விதமாக செல்வம் ஏசியை பதினெட்டில் வைத்தான். உறைந்தநிலையிலிருந்த ஜெகதிக்கு அப்போதும் வியர்வை நின்றிருக்கவில்லை. நெற்றியிலிருந்து கன்னத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துவிட்ட செல்வம், “யாரையும் அழிக்கணுங்கறதுக்காக இந்தச் சண்டைய ஆரம்பிக்கல ஜெகதி, நம்மளக் காப்பாத்திக்கிறதுக்காகப் போராடிக்கிட்டு இருக்கோம்.”

ரெண்டாம் ஆட்டம்! - 80

“ஆனா இவ்ளோ போராடி ஜெயிக்கிறதெல்லாம் யாருக்கு செல்வம்... நம்ம சந்தோஷத்த பகிர்ந்துக்கறதுக்கு யார் இருக்கா? உங்கப்பா இல்ல, என் தம்பி இல்ல. இதுவரைக்கும் என் கைல பட்டிருக்க ரத்தத்த கழுவறதுக்கே இன்னும் எத்தன வருஷம் ஆகும்னு தெரியல. இன்னும் எத்தன பேரோட ரத்தத்தப் பாத்ததுக்கு அப்பறம் நாம ஆசப்பட்ட இடம் நம்மளுக்குக் கிடைக்கும்?”

ஜெகதி ஏக்கத்தோடு கேட்டாள்.

“சந்தோஷத்த பகிர்ந்துக்க யாரும் இல்லங்கறதுக்காக மனுஷன் காலம் முழுக்க துக்கத்தோடயே வாழ்ந்துட முடியாது. சரியோ தப்போ இந்த ஊர ஆளணுங்கறது எங்கப்பாவோட ஆச. அவரு இல்லாமப்போனாலும் அவரோட கனவு இருக்கணும். நீதானடி சொன்ன? முடங்கிக் கிடக்காத, எதுத்து நில்லுன்னு... இப்ப என்ன?”

“ஆமா செல்வம், ஆனா என் உடம்பெல்லாம் ரத்த வாட… நான் எத்தன தடவ குளிச்சாலும், எவ்ளோ சென்ட் அடிச்சாலும் அந்த ரத்த வாட போக மாட்டேங்குது. கோட்டச்சாமி, அம்சவல்லி, என் தம்பி, உன் அப்பா இன்னும் பல பேரோட ரத்த வாட என்னயத் தொரத்திக்கிட்டே இருக்கு… என்னால தூங்க முடியல… அந்த ரத்த வாடைக்கிப் பழகி இன்னும் நிறைய ரத்தம் குடிக்கிற வெறி வந்துடுமோன்னு பயமா இருக்கு…”

செல்வம் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான். படுக்கையிலிருந்து எழுந்துகொண்டவன் ‘எங்கூட வா...” எனக் கதவைத் திறந்து வெளியே செல்ல, ஜெகதியும் தொடர்ந்து சென்றாள். இருவரும் வாசல் கதவைத் தாண்டி தெருவில் வந்து நின்றபோது வாசலில் உறங்கிக்கொண்டிருந்த நாய் மிரண்டு எழுந்து ஓடியது. சற்று தூரத்தில் நின்று திரும்பிப் பார்த்து குரைத்துவிட்டு இன்னொரு வீட்டின் திண்ணையில் படுத்துக்கொண்டது.

செல்வமும் ஜெகதியும் தெருவின் எல்லைவரை நடந்து சென்றனர். மர்மங்கள் உறைந்த இரவு அச்சுறுத்துவதாக இருந்தது ஜெகதிக்கு. செல்வத்தின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். தெருமுனையிலிருந்த சின்னஞ்சிறிய கோயிலில் அரிவாளோடு நின்றிருந்த காவல் தெய்வத்தை செல்வம் சலனமின்றி பார்க்க, “எதுக்குடா இங்க கூட்டியாந்த?” குழப்பத்தோடு ஜெகதி கேட்டாள்.

“அருவா யார் கையில இருக்குங்கறதப் பொறுத்துதான் அது ஆயுதமா மாறுது ஜெகதி. நாம எடுத்தது நம்மளப் பாதுகாத்துக்க. அவய்ங்க எடுத்தது மத்தவங்கள அழிக்கிறதுக்கு…”

ஜெகதி புரியாமல் அவனைப் பார்க்க, “யோசிச்சுப் பாரு. உதவின்னு கேட்டுப்போயி நின்ன உன்னய, `எங்கூடப் படு’ன்னு கேக்கறதுக்கு அவனுக்கு எங்க இருந்து துணிச்சல் வந்துச்சு? தன்னயப் பாத்து இந்த ஊரு பயப்படுதுங்கற தைரியம். நாம அழிச்சது கோட்டச்சாமிய இல்ல, அவன் திமிர… காலம் முழுக்க அவனுக்கு வெப்பாட்டியா இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பியா? இல்லயில்ல…”

ஜெகதி அமைதியாகத் தலையைக் குனிந்துகொண்டாள். “எல்லாச் சண்டைக்கும் ஆரம்பம் மட்டும்தான். முடிவு இல்ல... நாளைக்கே கருப்ப நாம ஓச்சுவிட்டாக்கூட அவனுக்கு அப்பறம் அவன் குடும்பத்துலருந்து இன்னொருத்தன் வந்து எதுக்கலாம். அதுக்காக நம்ம உயிர் போனாலும் பரவால்லன்னு அடங்கிப் போயிரக் கூடாது. இருக்கற வரைக்கும் மதிப்போட இருந்துட்டு செத்துரணும். இதுவும் நீ எனக்கு சொல்லிக் குடுத்ததுதான். அதனால இந்த ரத்த வாடைக்கிப் பழகிக்க.”

தெளிவான செல்வத்தின் வார்த்தைகள் அவளுக்கிருந்த குழப்பத்தையெல்லாம் தீர்த்திருக்க, அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். வானத்து நட்சத்திரங்கள் வேறு யாருமற்ற அந்த வீதியில், விடியலை நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் காத்திருக்கும் இருவரையும் ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன.

“என்னம்மா விடிஞ்சும் விடியாம வந்து நிக்கிற... எதும் பிரச்னையா?” உறக்கச் சடவோடு வந்த ரவி அண்ணன் ஜெகதியிடம் கேட்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே. ஒரு சின்ன விஷயம். நீங்க எங்கியாச்சும் கிளம்பறதுக்கு முன்ன வந்து பாத்துடலாம்னுதான் சீக்கிரமே வந்தேன்” என்றாள். அவர் புரியாமல் பார்க்க, பணிப்பெண் வந்து தேநீர் வைத்துவிட்டுப் போனாள். “சொல்லும்மா என்ன விஷயம்?” தேநீரைக் கையிலெடுக்காமலேயே ரவி அண்ணன் கேட்டார். “அண்ணே எதிரிங்கள வளத்துக்கறதுக்கு இனிமே எனக்கும் செல்வத்துக்கும் தெம்பில்ல. கருப்பு, முனுசு ரெண்டு பேரையும் போலீஸ் எப்பிடியும் சும்மா விடப்போறதில்ல. என் பயம்லாம் ஆண்டிச்சாமி குடும்பம்தான். அம்சவல்லி சாவுக்கு நான்தான் காரணம்னு நெனைக்கிறாய்ங்க. அது இல்லைன்னு நீங்கதான் புரியவைக்கணும்” ஜெகதி நம்பிக்கையோடு அவரைப் பார்க்க, ரவி பதில் சொல்ல முடியாமல் தயங்கினார். “என்மேல தப்பே இல்லன்னு சொல்ல வரலண்ணே. அதுக்கு ஈடா என்ன செய்யணுமோ நாம செஞ்சுருவோம். ஆனா இந்தப் பகைய முடிச்சுக்கணும். அதுக்கு என்ன வெல குடுக்கவும் ரெடியா இருக்கேன்” ஜெகதி கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள். அவளை அப்படிப் பார்க்க பாவமாக இருந்தது அவருக்கு. “செரிம்மா… நீ கவலைய விடு, நான் பேசறேன். நீ கவலைப்படாத…” என வாக்களித்தார்.

தமிழ்நாட்டிலுள்ள அத்தனை காவல் நிலையங்களுக்கும் கருப்பு, முனுசு இருவரின் புகைப்படங்களும் அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்டுக்கொண்டிருந்தனர். ஒரு வாரத்துக்கு மேலாகியும் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான எந்தத் துப்பும் கிடைத்திருக்கவில்லை. கமுதிக்கு அருகில் அவர்களின் பூர்வீக கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தச் சென்ற போலீஸ்காரர்களை உள்ளூர் மக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் மிரட்டி அனுப்பினார்கள். கோட்டைச்சாமியின் வீட்டைச் சுற்றியும், அவனது உறவினர்களின் வீடுகளைச் சுற்றியும் மதுரையில் இருபத்தி நான்கு மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு இருந்தது. சந்தேகத்துக்கு இடமான ஒவ்வொரு ஆளையும் நிறுத்தி விசாரித்தார்கள். “நம்ம டிப்பார்ட்மென்ட்ல ஒரு கான்ஸ்டபிளக் கொன்னுட்டு எங்கியோ ஒளிஞ்சுக்கிட்டு, நல்லா தின்னுட்டு, தூங்கிட்டு இருக்காய்ங்க. நாம அவய்ங்களோட ஒளிஞ்சு புடிச்சு வெளையாடிட்டு இருக்கோம். எப்பத்தான்யா புடிக்கப் போறீங்க…” என போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் கமிஷனர் காட்டமாகக் கேட்க, ஏற்கெனவே ஆத்திரத்தோடு சுற்றிக்கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு இப்போது வெறிபிடிக்கத் தொடங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 80

கோட்டைச்சாமி வீட்டு ஆட்கள், அத்தனை பேரின் செல்போன்களையும் காவல்துறையினர் ஒட்டுக் கேட்கத் தொடங்கினார்கள். கருப்புவிடமிருந்தோ முனுசிடமிருந்தோ எப்படியும் அவர்களுக்குத் தகவல் வரும் எனும் காவல்துறையினரின் நம்பிக்கை தொடர்ந்து பொய்யாகிக்கொண்டிருக்க, மாற்றுவழியை யோசித்தார்கள். அவர்களைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப் படையில், ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட மொத்தம் ஏழு போலீஸ்காரர்கள். ஏழு பேருக்கும் ஏழுவிதமான சிந்தனை. சரியான உறக்க மில்லாமல் அலைந்து திரிந்ததில் எதையும் சிந்திக்க முடியாத நிலையிலிருந்தார்கள்.

“அவய்ங்க இந்த மாதிரி காரியத்துலல்லாம் கர கண்டவய்ங்க. நாம எப்பிடியும் போனை டேப் பண்ணுவோம்னு தெரியும். அதனால கண்டிப்பா வீட்டு ஆளுகளுக்குப் பேச மாட்டாய்ங்க. வேற வழிலதான் யோசிக்கணும்” என ஒரு இன்ஸ்பெக்டர் சொல்ல, அவரோடிருந்த ஓர் இளம் காவலர், “சார் எனக்கு ஒண்ணு தோணுது...” எனத் தயங்கியபடி ஆரம்பித்தார்.

“சொல்லுங்க முரளி” என இன்ஸ்பெக்டர் அவரைப் பார்க்க, “அவய்ங்களுக்கு இந்த மாதிரி நேரத்துல பணம்தான் முக்கியமான தேவை… கண்டிப்பா அவய்ங்களோட ஏடிஎம் கார்டையோ இல்ல கிரெடிட் கார்டையோ எங்கியாச்சும் யூஸ் பண்ணுவாய்ங்க. நாம அத ட்ராக் பண்ணா கண்டிப்பா லீட் கெடைக்கும் சார்…” என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் உட்பட உடனிருந்த அத்தனை காவலர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

(ஆட்டம் தொடரும்)