Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 81

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

“ரெண்டு மூணு நாள் பொறுக்கச் சொல்லி இருக்கான்யா... ஒக்காலி, இவென் ஒரு ஆளுன்னு நாமளும் இவென வக்கீலா வெச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு வேலைக்கும் ஆக மாட்டாம்போல…”

ரெண்டாம் ஆட்டம்! - 81

“ரெண்டு மூணு நாள் பொறுக்கச் சொல்லி இருக்கான்யா... ஒக்காலி, இவென் ஒரு ஆளுன்னு நாமளும் இவென வக்கீலா வெச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு வேலைக்கும் ஆக மாட்டாம்போல…”

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

நினைவின் அடுக்குகளில் எத்தனை வடுக்கள் சேர்ந்தாலும், ஒவ்வொரு நாளையும் வாழ்வதற்கான ஊக்கம் முக்கியமென்பதை செல்வமும் ஜெகதியும் புரிந்துகொண்டார்கள். சுரேஷும் முத்தையாவும் அவர்களின் நினைவுகளிலிருந்து கொஞ்சமாக மறையத் தொடங்க, அடுத்து வரவிருக்கும் பிரச்னைகள் பூதாகரமாகத் தெரிந்தன. வீட்டைப் பிடித்து அழுத்திய சாவுக்களையை விரட்டவேண்டி செல்வம் பெயின்ட் அடிக்கச் சொல்லியிருந்தான். சோணையும் செல்வத்தின் மற்ற நண்பர்களுமாகச் சேர்ந்து இரண்டு நாள்களில் பெயின்ட் அடித்து முடித்த பிறகு, செல்வத்தின் வீட்டிலிருந்து எல்லோரும் ஜெகதியின் வீட்டுக்கு இடம் மாறினார்கள். அந்த வீட்டின் உள்ளறைகளையும், மேசை நாற்காலிகளையும் செல்வம் முற்றாக மாற்றியிருந்தான். வீட்டின் அமைப்பு ஜெகதிக்குப் பெரும் ஆறுதலைத் தர, அச்சமும் வருத்தமும் முற்றாக விலகி, தன்னைப் புதிய மனுஷியாக உணர்ந்தாள்.

செல்வம் நெருக்கமான ஆட்களை மட்டும் முத்தையாவின் பதினாறாவது நாள் காரியம் முடிந்த பிறகு, கறிக்கஞ்சிக்கு அழைத்திருந்தான். முப்பத்தைந்து வயதைத் தாண்டுவதற்குள் எத்தனை வன்முறைகள்... எத்தனை கொலைகள்? செல்வம் தன்னிடம் மட்டுமின்றி தன் நண்பர்களின் முகத்திலும் அதீதமான முதுமை வந்துவிட்டிருப்பதை கவனித்தான். செல்வத்தின் அம்மாவும் ஜெகதியும் வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். பெரிய பெரிய கவளமாக அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவில், சோணை மட்டும் கவலையோடு சோற்றை அளைந்து கொண்டிருந்தான். அவனை கவனித்த செல்வம், “என்னடா சோண, ஏன் சாப்பிடாம உருட்டிட்டு இருக்க?” என்று கேட்க, “இந்தக் கொஞ்ச வருஷத்துல வாழ்க்கைல என்னல்லாம் மாறிருச்சுன்னு பாரு செல்வம்... உலகம் தெரியாம கபடி விளையாடிக்கிட்டு இருந்தோம். திரும்பிப் பார்க்கறதுக்குள்ள அடிதடி, சரக்கு ஓட்றதுன்னு நாம யோசிக்கவே யோசிக்காத ரெண்டா நம்பர் வேலையா பாத்து, இன்னிக்கி வேற மாதிரி ஆகிப்போனமேய்யா…” எனக் கவலையோடு சொன்னான். வறுத்த கறியைப் பரிமாறிக் கொண்டிருந்த ஜெகதி, “அதுசரி, இப்ப இம்புட்டு உணர்ச்சிவசப்பட்டு என்ன சாமியாரா ஆகப்போறியா? பேசாம சாப்டுறா...” என்று சொல்ல, சாப்பிட்டுக்கொண்டிருந்த செல்வத்தின் நண்பர்கள் சிரித்தார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 81

விருந்து முடிந்து வந்திருந்தவர்களுடன் செல்வம் பேசிக்கொண்டிருக்க, வியர்வை அரும்பிய முகத்தோடு ஜெகதி வந்துசேர்ந்தாள். ஒருவன் அவள் அமர்வதற்கு இருக்கையை நகர்த்திக் கொடுத்தான். “நீ ஏதோ சொல்லணும்னு சொன்னயில்ல, இப்பவே சொல்லிடு...” என செல்வம் ஜெகதியிடம் சொன்னான். சேலையின் முந்தானைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்ட ஜெகதி, “நடந்ததையெல்லாம் மறந்துடுங்க. நல்லதோ கெட்டதோ நடந்ததைப் பத்தி இனி யோசிச்சு எதும் கெடைக்கப் போறதில்ல. நம்மள அழிக்கணும்னு நெனைக்கிற ஆளுங்ககிட்டருந்து நம்மளக் காப்பாத்திக்கிறது தான் இப்ப முக்கியம். மத்தவங்கள எதுத்து நிக்கிறதுக்கு முன்னாடி நம்மள நாமளே ஸ்ட்ராங்கா ஆக்கிக்கணும். காசு சேக்கறது மட்டுமில்ல, முன்ன மாதிரி நம்மளுக்கான ஆளுகள சேக்கறதும் முக்கியம்” என்று ஜெகதி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சோணை, “இப்பிடி மொட்டையா சொன்னா நாங்க என்னத்தக் கண்டோம், என்ன செய்யணும்னு தெளிவா சொல்லுத்தா…” என்று கேட்டான்.

“சோண, எல்லா மார்க்கெட்லயும் பவுசு வாங்கறதுல கொஞ்சநாள் விட்டுப்புடி… சின்னக் கடக்காரய்ங்கல்லாம் காசு குடுக்கலைன்னா அப்பிடியே விட்று… ஒண்ணு ரெண்டு மாசத்துக்கு நம்மள மத்தவங்க கவனிக்கட்டும். இப்ப அதான் தேவ… மதுரையக் கட்டி ஆண்ட அத்தன பேரும் மார்க்கெட்டத் தன்னோட கன்ட்ரோல்ல வெச்சிருந்ததாலதான் ரொம்ப நாள் செல்வாக்கா இருந்தாய்ங்க. நாமளும் அத விட்றக் கூடாது…” என செல்வம் அவனுக்குப் புரியும்படியாகச் சொல்ல, அவனும் அவனோடிருந்தவர்களும் ஆமோதித்து, தலையசைத்தார்கள்.

மதுரையின் முக்கியமான பகுதிகளிலிருந்த மார்க்கெட்டுகளை சோணையும் அவனோடிருந்தவர்களும் சத்தமில்லாமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினார்கள். செல்வம் சொன்னதற்காகவே மார்க்கெட்டிலிருந்த கடைக்காரர்களிடம் பவுசு வாங்குவதில் கடுமை காட்டாமல் நடந்துகொள்ளத் தொடங்கினார்கள். சிறு வியாபாரிகளுக்கு சோணையின் மீது நல்ல மரியாதை வரத் தொடங்கியது. சில நாள்கள் பவுசு கொடுக்காமலிருந்தவர்கள்கூட தங்களிடம் பணம் சேர்ந்தபோது மொத்தமாகத் தந்துவிட்டார்கள். சோணை எல்லாவற்றையும் ஆச்சர்யத்தோடு செல்வத்திடம் சொன்னான். “சோண, இது நம்மளுக்கான ஆரம்பம்தான், நாம இன்னும் நெறைய செய்வோம். நாலஞ்சு மாசத்துக்கு அப்பறம் ஒவ்வொரு மார்க்கெட்லயும் நாலஞ்சு கடைகள நீ ஏலத்துக்கு எடுத்து நம்ம பயகளுக்குப் பிரிச்சுக் குடு. அவய்ங்களும் தனித்தனியா செட்டில் ஆன மாதிரி இருக்கும்” என்று செல்வம் சொன்னதை சோணை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான். நீண்ட நாள்களுக்குப் பின், ஆந்திராவிலிருந்து வந்து இறங்கின சரக்குகளை செல்வம் சேகரின் உதவியோடு பாதியை மதுரையைச் சுற்றின ஊர்களிலும், மீதியை யாழ்ப்பாணத்துக்கும் பிரித்து அனுப்பினான்.

மரக்கடை, அரிசி மண்டி, ரைஸ் மில் என ஆண்டிச்சாமி குடும்பத்து ஆட்களின் தொழில்கள் மதுரைக்குள் பழையபடி செழிப்பாக நடக்கத் தொடங்கியிருந்தன. ஆண்டிச்சாமியால் சாதிக்க முடியாததையும் சேர்த்து சாதித்துவிடும் துடிப்போடு அவருடைய மகன் எல்லாத் தொழில்களையும் முனைப்போடு கவனித்துக்கொண்டிருந்தான். “எங்கப்பன் பேர இந்த ஊர் என்னிக்குமே மறக்கக் கூடாது. அந்த மாதிரி ஒரு ஆளா வளந்து நிக்கணும் மாமா…” என அம்சவல்லியின் கணவனிடம் அடிக்கடி சொல்லிக்கொள்வான். நீண்ட வருடங்களுக்குப் பின், தொழில் விருத்தியாகி அந்த வீட்டில் உறவினர்களின் போக்குவரத்தும் அதிகரிக்கத் தொடங்கியிருந்ததால் அந்த வீதியிலிருந்தவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்.

ரவி அண்ணனின் வழிகாட்டுதலோடு ஜெகதி, கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த முடிவுசெய்திருந்தாள். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் என போஸ்டர்கள் மதுரை நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தன. சுவர் விளம்பரங்கள், உள்ளூர் கேபிள் டி,வி விளம்பரங்கள் என ஒரு பொதுக்கூட்டத்துக்கு வேறு யாரும் செய்யாத அலப்பறைகளை யெல்லாம் அவள் செய்துகொண்டிருந்ததால், மதுரை நகரத்தின் சக அரசியல்வாதிகளின் மத்தியில் அவள் பேசுபொருளாகியிருந்தாள். “ஏம்மா... கேபிள் டி.வி விளம்பரம்லாம் எதுக்கு?” என ரவி அண்ணனே புரியாமல் கேட்டபோது, “அண்ணே... ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்லுவாய்ங்க. அரசியல்வாதிக்கி வேல பாதி, வெளம்பரம் பாதிதான். நாம இதெல்லாம் செஞ்சாதான் ஊரு நம்மளத் திரும்பிப் பாக்கும். இல்லயின்னா நம்ம கூட்டமும் பத்தோட பதினொண்ணா போயிரும்ல…’’ என ஜெகதி சிரித்தாள்.

மாலை நான்கு மணிக்கு பழங்காநத்தம் சிக்னலில் ஊர்வலமாகத் தொடங்கி, வெவ்வேறு ஏரியாக்கள் வழியாக ஜீவா நகரை அடைந்து ஏழு மணிக்குமேல் பொதுக் கூட்டத்தைத் தொடங்குவதாகத் திட்டம். சுட்டெரிக்கும் வெயிலில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களோடு திரண்டிருந்த தொண்டர் படை ஊர்வலத்தைத் தொடங்க, எல்லோருக்கும் முன்பாக ஜெகதி கோஷமிட்டுக்கொண்டிருந்தாள். சாலையில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டிருக்க, போலீஸ்காரர்கள் ஒழுங்குசெய்யத் திணறிக் கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தோடு வெயிலும் மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து செல்லத் தொடங்கியது. ஒவ்வொரு பகுதியையும் கடந்துசெல்லும்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த புதிய தொண்டர்களும் ஊர்வலத்தில் இணைந்துகொள்ள, ஊர்வலத்தில் வந்த தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. ஜெகதியின் ஏற்பாட்டில் சோணையும் அவனது ஆட்களும் வழிநெடுக, தொண்டர்களுக்கு குளிர்பானம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெயிலின் உக்கிரம் குறைந்து வானம் சிவக்கத் தொடங்கியபோது, ஜெகதி ஊர்வலத்திலிருந்து கிளம்பி பொதுக்கூட்டம் நடக்குமிடத்துக்குச் சென்றாள். நீண்ட தூரம் ஊர்வலம் வந்த கட்சித்தொண்டர்கள் களைப்பில் சலசலக்கத் தொடங்க, அந்தநேரம் பார்த்து சைக்கிளில் சென்ற ஒருவன் கல்லெறிந்துவிட்டு தப்பித்துவிட்டான். கூட்டத்தில் ஓர் ஆளுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொப்பளிக்க, ஆத்திரத்தில் அவனது ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டத் தொடங்கினர். அவர்களின் வெறி அதிகமாகி அருகிலிருந்த கடைகள், அரிசி மண்டி, எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினார்கள். ஒரு பெருங்கூட்டம் அந்த வீதியின் முனையிலிருந்த மரக்கடைக்குள் நுழைந்து பெட்ரோல் உருண்டைகளை வீசியது. அடுத்த சில நொடிகளிலேயே பெட்ரோல் உருண்டைகள் எல்லாம் பற்றி எரியத் தொடங்க, மரக்கடையை நெருப்பு சூழ்ந்தது. கலவரம் செய்த ஆட்கள் தப்பியோட, காவல்துறையும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்துவந்தனர்.

பாதிக்கும் மேல் எரிந்துபோன மரக்கடையின் வாசலில் வந்து நின்ற ஆண்டிச்சாமி, அச்சத்திலும் ஆத்திரத்திலும் உறைந்துபோனான். ஒரே நேரத்தில் அவனது அரிசி மண்டியும், கடைகளும், மரக்கடையும் சிதறடிக்கப்பட்டிருந்தன. போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் சிலரைக் கைதுசெய்திருப்பதாக அவனிடம் சொன்னபோது, பதில் சொல்லாமல் இறுக்கமாக நின்றான். சட்டைப் பையிலிருந்த செல்போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தவனுக்கு ரவி அண்ணனின் பெயரைப் பார்த்ததும் முகம் மாறியது. “சொல்லுங்க அண்ணே...” எனத் தடுமாற்றத்தோடு பேசினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 81

“ஏப்பா நான்தான் அன்னிக்கே சொன்னன்ல... அடிதடி பண்ணி, வெட்டுக்குத்து செஞ்சுதான் பகைய முடிச்சுக்கணும்னு இல்ல, செல நேரம் விட்டுக்குடுத்துப் போயும் பகைய முடிச்சுக்கலாம்னு… நீதான் கேக்க மாட்டேன்னுட்ட. இப்ப பாத்தியா? எங்க வந்து நிக்கிதுன்னு…” என எதிர்முனையில் அவர் போலியான வருத்தத்தில் சொல்ல, “அண்ணே...” என அதிர்ச்சியோடு திரும்பவும் அவன் இழுத்தான். “சொல்றதக் கேளுய்யா… பொதுக்கூட்டம் முடிஞ்சதும் வந்து பாரு… ராசியாப் போயிடறேன்னு ஜெகதிகிட்ட சொல்லிடு. சரியா...” என்றபடியே இணைப்பைத் துண்டித்தார். உடல் நடுங்கியபடி நின்றிருந்த அவனது தோள்களைப் பற்றிய மாமா, “டேய் மாப்ள... நாம அவய்ங்கள எதுத்து நின்னு ஒண்ணும் சாதிக்க முடியாதுடா… இப்பதைக்கி ராசியாப் போற மாதிரி போவோம்... நம்மளுக்கு ஒரு காலம் வராமயா போயிரும். அப்ப பாத்துக்கலாம்” என ஆறுதல்படுத்தும்விதமாகச் சொல்ல, கண்ணீரோடு அவன் சம்மதித்தான்.

அடுத்தநாள் அதிகாலை, கோட்டயம் எம்.ஜி.எம் ஹோட்டலுக்கு அருகிலிருந்த உணவகத்தில் கருப்புவும் முனுசும் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர். மெல்லிய குளிரில் சிலிர்த்திருந்த உடலுக்கு தேநீரீன் சூடு இதமளித்தது. “வக்கீல் என்னய்யா சொல்றான்... முன் ஜாமீன் கெடைக்குமா... இல்ல நாம கோர்ட்ல போயி சரண்டராகிடுவமா?” என முனுசு கேட்க, “ரெண்டு மூணு நாள் பொறுக்கச் சொல்லி இருக்கான்யா... ஒக்காலி, இவென் ஒரு ஆளுன்னு நாமளும் இவென வக்கீலா வெச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு வேலைக்கும் ஆக மாட்டாம்போல…” என கருப்பு ஆத்திரப்பட்டான். இருவரும் தேநீருக்கான காசைக் கொடுத்துவிட்டு வாசலுக்கு வர, வெவ்வேறு திசையிலிருந்து மூன்று பேர் அவர்களை நோக்கி வந்தார்கள். கருப்பு, மூன்று பேரில் ஒருவரை கவனித்து “ஏய் போலீஸ்யா…” எனச் சுதாரிப்பதற்குள் தபதபவென மஃப்டியிலிருந்த ஆறேழு போலீஸ்காரர்கள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். “ஒக்காலி எங்களுக்கே தண்ணி காட்னீங்கள்ல… இப்ப வாங்கடி மாப்ளைகளா…” என்றபடியே ஒரு போலீஸ்காரன் கருப்புவின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்க, அந்த வீதியிலிருந்தவர்கள் எல்லோரும் மிரண்டு பார்த்தார்கள்.

(ஆட்டம் தொடரும்)