Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 82

திருட்டு வழக்கில் சிறை சென்றபோது அறிமுகமான, சில்வர் செல்லையா மட்டும்தான் அவனுக்கு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதற்கான நண்பன்

பிரீமியம் ஸ்டோரி

தனக்கானதோர் இடத்தைத் தேடியலைந்து சலித்துப்போன முத்தையா, எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக்கொண்டு சராசரி மனிதனாக வாழ விரும்பினான். கஞ்சா விற்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்கள், போதைக் கிராக்கி, மாமாகாரர்கள், அரசியல்வாதிகள் என எல்லா வீதியிலும் அவனுக்குத் தெரிந்த யாரோ ஒரு ரெண்டாம் நம்பர் தொழில்காரன் உலவிக்கொண்டிருப்பான். எந்த உலகத்திலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டுமென விரும்பினானோ அந்த உலகம் அவனது தலைக்குமேல் சூரிய வெளிச்சம்போல் தொடர்ந்து வந்தது. இரவோடு இரவாக ஊரைவிட்டுக் கிளம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் என நான்கைந்து நாள்கள் பராரியாகச் சுற்றுவான். அதிகபட்சம் ஒரு வாரத்துக்கு மேல் அவனால் மதுரையையும், தன்னைத் தெரிந்தவர்களையும் விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ‘ஒக்காலி காலம் பூராம் எவனுக்காச்சும் புழுக்க வேல பாத்தேதான் என் வாழ்க்க முடியும்போல…’ என விரக்தியோடு நினைத்துக்கொண்டு மீண்டும் மனோகரனைத் தேடிச் செல்வான். மனோகரன் எந்தவிதத்திலும் முத்தையாவைக் கட்டுப்படுத்தி யிருக்கவில்லை. ‘நீ உன் போக்குல இருண்ணே…’ என்று முதல் நாள் சொன்னதையேதான் எப்போதும் சொல்லிச் சிரிப்பான்.

ரெண்டாம் ஆட்டம்! - 82

திருட்டு வழக்கில் சிறை சென்றபோது அறிமுகமான, சில்வர் செல்லையா மட்டும்தான் அவனுக்கு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதற்கான நண்பன். ஆனால் எப்போது வெளியிலிருக்கிறான், எப்போது சிறைக்குச் செல்கிறான் எனத் தெரியாதபடிக்குத் திருட்டுடனும் சிறையுடனும் பிணைந்தது அவனது வாழ்க்கை. சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டால் செல்லையாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. தங்கம் தியேட்டரில் வெள்ளிக்கிழமை மதியக் காட்சி சினிமா பார்க்க வருவான். என்ன படம் என்பதெல்லாம் கணக்கில்லை. மனோகரனிடம் சேர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு வெள்ளிக்கிழமை மதியக் காட்சியில் தியேட்டரில்வைத்து செல்லையாவைக் கண்டுகொண்டான் முத்தையா. உற்சாகமாகச் சிரித்தபடி கட்டிக்கொண்ட செல்லையா “போன வாரம்தான்யா ரிலீஸ் ஆனேன்...” என மற்றவர்களுக்குக் கேட்காதபடி சன்னமான குரலில் சொல்லிவிட்டு “வா சோடா குடிப்போம்” என அழைத்துச் சென்றான்.

வெக்கையில் உடல் புழுங்கியது. குடித்த சோடாவுக்கு இணையாக வியர்த்து சட்டை ஈரமாகிக் கசகசத்தது. மெலிந்து ஒடுங்கிப்போன முத்தையாவைப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது. சிறையிலிருந்த நாள்களில் முத்தையாவுக்கு நடந்ததையெல்லாம் விசாரித்து அறிந்துகொண்டிருந்த செல்லையா, “ஏப்பா, எம்புட்டு நாளைக்கி தனியாவே இருக்கப்போற? பேசாம ஒரு கல்யாணத்தக் கட்டிக்கயேன்...” என்று சொல்ல, சோடா குடித்ததைப் பாதியில் நிறுத்தித் திரும்பிப் பார்த்த முத்தையா “அங்குட்டு போய்யா நீ வேற…. நானே ஒரு அன்னக்காவடி, எனக்குக் கல்யாணம் ஒண்ணுதான் கேடா…” என்றான்.

“காசிருக்கவன் மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னா தொண்ணூறு சதம் ஆம்பளைகளுக்கு கல்யாணமே ஆகாதுய்யா… குடும்பம்னு ஒண்ணு வந்துட்டா உனக்கு எல்லாமே மாறும்.”

“இல்லப்பா சுத்தப்படாது… அதுமில்லாம எனக்கு எவன் பொண்ணு குடுப்பான்.”

செல்லையா சிரித்தான்.

“நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மட்டும் சொல்லு, மத்தத நான் பாத்துக்கறேன்...”

முத்தையா பதில் சொல்லாமல் தயங்கி நிற்க, “ரைட்டு... மாப்ளைக்கி ஆச இருக்கு, பொண்ணு யார் குடுப்பான்னுதான் யோசன… எதுக்கும் கவலப்படாத… எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்” என்றபடியே உற்சாகமாகச் சொன்ன செல்லையா, சோடாவுக்கான காசைக் கொடுத்துவிட்டுச் சிரித்தான்.

பாண்டியனும் குமாரும் சோர்ந்து போனார்கள். மதுரையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு கோடையின் நிழலைப்போல் வேகமாக மறைந்துகொண்டிருந்தது. ஏழுகடல் தெரு கடைகளுக்கான கான்ட்ராக்ட் தொடங்கி, நகரின் வெவ்வேறு பகுதிகளில் உருவாகவிருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வேலைகள், பிரைவேட் ஒயின் ஷாப் ஏலம் எதிலும் அறிவு, பாண்டியனுக்கான இடத்தைக் கொடுத்திருக்கவில்லை. ஓரிரு முறை அவனைச் சந்திப்பதற்காகச் சென்றபோதும் அவன் ஊரிலில்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. “நம்மகூட நல்லாப் பழகற மாதிரியே பழகிட்டு, இப்ப மொத்தமா சோலிய முடிச்சுவிட்டுட்டாய்ங்களேண்ணே…” குமார் ஆற்றமாட்டாமல் புலம்ப, “இம்புட்டு நாளும் அவய்ங்க நம்மள குண்டியத் தொடைக்கிற குச்சி மாதிரிதாண்டா நெனச்சிருக்காய்ங்க. நாமதான் வெனயமில்லாம பழகிட்டோம்…” என்று பாண்டியன் குமுறினான்.

“அவய்ங்கள ஏதாச்சும் செய்யணும்ணே… எத்தன கேஸு வந்தாலும் பரவால்ல.”

“இப்பிடி மட்டித்தனமா அவசரப்பட்டுத்தாண்டா இத்தன வருசத்துல நம்மளால எதையும் சாதிக்க முடியல. கொஞ்சம் பொறுமையா வேடிக்க பாப்போம். கீரியும் பாம்புமா இருந்தவய்ங்க கூடியிருக்காய்ங்க. அவய்ங்களால ரொம்ப காலத்துக்கெல்லாம் கொஞ்சிட்டு இருக்க முடியாது. என்னிக்கி அவெய்ங்களுக்குள்ள ஒரசல் வருதோ அன்னிக்கி எறங்குவோம்…”

“அது வரைக்கும் நம்ம பொழப்பு?”

“சமாளிப்பம்டா குமாரு… நம்மளுக்குக் குடச்சல் குடுக்கணும்னு நெனைக்கிறதவிட மத்த வேலையிலதான் அவய்ங்க கண்ணா இருப்பாய்ங்க. அதனால நாம பாக்கற வேலையப் பாத்துட்டு இருப்போம். நீ நாளைக்கிப் போயி மார்நாடையும் அவென் பயகளையும் கூட்டிட்டு வந்துரு…” என்று பாண்டியன் சொல்ல, குமார் எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.

“என்னடா யோசிக்கிற?”

“நீ அன்னிக்கி சத்தம் போட்டதும் அவெய்ங்க பூராம் கோவிச்சுக்கிட்டு ஊருக்கே போயிட்டாய்ங்க…” குமார் தயங்கிச் சொன்னான். பாண்டியன் எரிச்சலானான்.

ரெண்டாம் ஆட்டம்! - 82

“பெரிய ரோஷக்கார புழுத்திங்களாடா இவெய்ங்க… ஒரு வார்த்த கடுசா பேசினா பொறுத்துக்க மாட்டாய்ங்களா… சரி நீ ஊருல நம்ம வாத்தியார் வீட்டுக்கு போன் பண்ணி, அவய்ங்கள நான் கிளம்பி வரச் சொன்னேன்னு சொல்லச் சொல்லு…”

“சரிண்ணே…”

சொன்னபடியே ஓரிரு வாரங்களில், முத்தையாவின் திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டிருந்தான் செல்லையா. “நீ வெளையாட்டுக்குச் சொல்றேன்னு நெனச்சன்யா... பொசுக்குன்னு பொண்ணப் பாத்து கல்யாணத்துக்கும் நாள் குறிச்சுட்ட. வீடு வாச எதுவுமில்ல... கையில முக்காத்துட்டு காசில்ல... இப்ப நான் என்னய்யா செய்றது?” என முத்தையா கலக்கமாகக் கேட்க “நான் பாத்துக்கறன்யா அதையெல்லாம், நீ மனோகரன்கிட்டச் சொல்லி ஒரு வீடு மட்டும் புடிச்சுக் குடுக்கச் சொல்லு. கல்யாணச் செலவு என் பொறுப்பு...” என்று செல்லையா சிரித்தான். சரியெனச் சொன்ன முத்தையா, அடுத்த நாளே தனக்குப் பழக்கமானவர்களை நேரில் சந்தித்து வெற்றிலை பாக்கு வைத்து கல்யாணத்துக்கு அழைக்கத் தொடங்கினான்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒரு அதிகாலையில், விடிந்தும் விடியாமல் காளியின் வீட்டு வாசலில் வந்து நின்ற முத்தையாவை வேலையாட்கள் விநோதமாகப் பார்த்தனர். “உன்னயத்தான் இந்தப் பக்கம் வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கம்ல, எதுக்குடா வந்த வெண்ண...” என ஆட்கள் கசகசவெனக் கத்தும் சத்தம் கேட்டு சமயன் உறக்கம் களைந்து எழுந்து வந்தான். முத்தையாவைப் பார்த்ததும் ஒரு நொடி முகம் சுருங்கியது. “எலேய் எதுக்கு ஆளாளுக்குக் கத்திட்டு இருக்கீங்க… சும்மா இருங்கடா…” என அமைதிப்படுத்தினான். சத்தம் போட்டவர்கள் கடுகடுவென முத்தையாவை முறைத்துவிட்டு விலகிச் செல்ல, சமயன் வாசற்கதவை நெருங்கி “என்னய்யா, என்ன விஷயம்?’ என்று கேட்டான்.

“காளி அண்ணனைப் பாக்கணும்…”

“எதுக்கு?”

“கல்யாணம் வெச்சிருக்கேன். அதான் முறையா அவரக் கூப்டணும்னு...”

முத்தையா முழுதாகச் சொல்லி முடிக்காமல் இழுக்க, சமயன் சிரித்தான். ‘நீ பொழைக்கிற பொழப்புக்கு கல்யாணம் ஒரு கேடாடா?’ எனக் கேலி செய்வது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரிப்பை அடக்க முடியாதவனாக “சரி சரி, நான் காளியண்ணன்கிட்ட வெவரத்தச் சொல்றேன். நீ கெளம்பு...” என சமயன் அவனை அங்கிருந்து துரத்த, “இல்ல முகத்துக்கு நேரா ஒருவாட்டிச் சொல்லணும்...” என முத்தையா அப்படியே நிற்க, “வெளக்கெண்ண நான்தான் சொல்றன்ல... பொத்திட்டு கிளம்புடா” என ஆத்திரமாகக் கத்தியபடியே சமயன் இரும்புக் கதவை ஓங்கியடிக்க, சுப்பு சத்தம் கேட்டு வந்தாள். முத்தையா நின்றிருக்கும் கோலத்தையும், சமயன் கத்துவதையும் கவனித்தவள், “ஏன் முத்து அங்கியே நிக்கிற? உள்ள வா...” எனக் குரல் கொடுத்தாள். சமயன் எரிச்சலோடு வழிவிட, முத்தையா தயக்கத்தோடு வீட்டின் முன்வாசலுக்குச் சென்றான்.

“மதினி... அடுத்த வாரம் திருப்பரங்குன்றம் கோயில்ல எனக்குக் கல்யாணம். அண்ணனும் நீங்களுமா வரணும்.”

வெற்றிலை பாக்கோடு முத்தையா கையெடுத்துக் கும்பிட, சுப்பு மகிழ்ச்சியோடு அவனைப் பார்த்துச் சிரித்தாள். “நல்ல விஷயம்டா முத்து... செத்த உக்காரு. நான் அவரக் கூட்டியாரேன்…” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

ஓர் ஓரமாக இருந்த ஸ்டூலில் அமர்ந்தவனுக்கு, காளியின் மகள் தேநீர் கொடுத்துவிட்டுப் போனாள். முதுமை நெருங்கிய முகத்தில், நீண்ட உறக்கத்துக்குப் பிறகான மலர்ச்சியோடு வந்த காளி “வாடா…” எனும் ஒற்றை வார்த்தையில் கடந்த காலத்தைக் கடந்துவிடுகிறவனாயிருந்தான். எழுந்து நின்ற முத்தையாவுக்குப் பேச்செழவில்லை. “உக்காருடா... காப்பியக் குடி…” என காளி சொல்ல “பரவால்லண்ணே…” என்றபடியே வெற்றிலை, பாக்கு எல்லாவற்றையும் கைகளில் ஏந்தி “அண்ணே... பழசெல்லாம் மறந்துட்டு என் கல்யாணத்துக்கு வரணும்ணே…’’ எனக் குரல் தழுதழுக்கச் சொன்னான். அறிவழகனோடும் மூர்த்தியோடுமே சினேகமாகிவிட்ட தனக்கு இவனை மன்னித்துவிடுவது ஒன்றும் சிரமமில்லையென நினைத்துக்கொண்ட காளி “சந்தோஷம்டா… நான் கண்டிப்பா வரேன்…” எனச் சிரித்தபடியே அவனிடமிருந்து பாக்கு வெற்றிலையை வாங்கிக்கொண்டான். அதைத் தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு அவளை அர்த்தபூர்வமாகப் பார்க்க, அவள் வரும்போதே எடுத்து வந்திருந்த கொஞ்சம் ரூபாய்த் தாள்களை முத்தையாவிடம் நீட்டினாள். “எலேய் இத கல்யாணச் செலவுக்கு வெச்சிக்க…” அவள் கையிலிருந்த காசை வாங்க மறுத்த முத்தையா “இல்ல மதினி அதெல்லாம் வேணாம்” எனப் பிடிவாதமாக நிற்க, “எலேய் கிறுக்கா கல்யாணம்னா நாலு செலவு இருக்கும். மறுப்புச் சொல்லாம வாங்கிக்கடா…” என்றபடியே காளி, காசை வாங்கி அவன் கைகளில் திணிக்க, மறுக்க முடியாமல் முத்தையா வாங்கிக்கொண்டான்.

வீடு விஷயமாக மனோகரனிடம் கேட்டபோது, அவன் மறுக்காமல் ஏற்பாடு செய்து கொடுத்தான். “கல்யாணம் பண்ணா யோகம் தானா வரும்ணே…” எனச் சிரித்த மனோகரன் திடீரென ஞாபகம் வந்ததுபோல, “ஏண்ணே மேப்படியானுங்க ரெண்டு பேரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் எப்ப வெட்டிச் சாவாய்ங்கன்னு தெரியாது, அம்புட்டுப் பகைன்னு சொன்ன. இப்ப என்னடான்னா ரெண்டு பேரும் ஒண்ணா சேந்துட்டாய்ங்களாம். அறிவு தெனம் ஒருவாட்டியாச்சும் காளியப் பாத்துப் பேசிட்டுத்தான் வீட்டுக்குப் போறானாம்…” ஆச்சர்யமாகக் சொன்னபோது முத்தையா சிரித்தான். தனது ஆற்றாமை, கோபம் எல்லாவற்றையும் அந்தச் சிரிப்பில் கடக்க முயல்பவனைப்போல் இடைவிடாமல் சிரித்தான்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு