Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 83

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

இந்த நகருக்குள் குடிவந்தபோது ஆதரவாக நின்ற ஒருவரின் நிழலையும் வீட்டு வாசலில் பார்க்க முடியவில்லை

ரெண்டாம் ஆட்டம்! - 83

இந்த நகருக்குள் குடிவந்தபோது ஆதரவாக நின்ற ஒருவரின் நிழலையும் வீட்டு வாசலில் பார்க்க முடியவில்லை

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!
காலம் வரும் காத்திரு பகையே… “பகையே உருவான ஆட்கள் இயேசுவின் சீஷராகிய ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றபோது, அவர் உதிர்த்த கடைசி வார்த்தைகள் இவையே: [யெகோவாவே], இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்” தன்னைப் பகைத்தவர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என நினைத்தார் ஸ்தேவான். - அப்போஸ்தலர் 6:8-14; 7:54-60.

அன்பு, நட்பு, பகை, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும் ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் விதைப்பதில்லை. வளரும்போது இந்த உணர்வுகளும் நம்மோடு சேர்ந்து வளரத் தொடங்கிவிடுகின்றன. எப்போது ஒரு மனிதன் பயப்படத் தொடங்குகிறானோ, அப்போது வெறுக்கத் தொடங்குகிறான். எதைக் கண்டு பயப்படுகிறானோ அதையெல்லாம் வெறுக்கிறான். நீண்டகால வெறுப்பு பகையை வளர்க்கிறது. பகையின் பாதையில் பயணிப்பவன், அதன் தொடக்கத்தை மட்டுமே பார்க்கிறான், முடிவை அவனுக்குப் பிறகு வருகிறவர்கள்கூட காண்பதில்லை.

கருப்பு, முனுசு இருவரையும் கைதுசெய்துவிட்டு மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்த போலீஸ்காரர்களின் வாகனத்தை, சமயநல்லூர் எல்லையில் அடையாளம் தெரியாத நபர்கள் மறித்துத் தாக்கினார்கள். வாகனத்தின் நான்கு புறங்களிலிருந்தும் கற்கள் எறியப்பட்டதால் நிலைகுலைந்துபோன போலீஸின் வாகனம் சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதி நின்றது. மின்னல் வேகத்தில் போலீஸ்காரர்களின் பிடியிலிருந்து அவர்கள் இருவரையும் மர்மநபர்கள் மீட்டுச் சென்றனர். யுத்தம் நடந்து முடிந்ததைப்போல் அந்த இடமே கலவரமாகக் காட்சியளிக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் ஆட்கள் காயம்பட்ட காவலர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஆண்டிச்சாமியின் மகனும் மருமகனும் மிரட்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. இந்த நகருக்குள் குடிவந்தபோது ஆதரவாக நின்ற ஒருவரின் நிழலையும் வீட்டு வாசலில் பார்க்க முடியவில்லை. தெருமுனை வரை வந்த காகங்கள் இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் துர்ச்சகுனத்தைக் கண்டுகொண்டு திரும்பிப் பறந்தன. அச்ச உணர்வு இரவுகளில் விநோத சத்தங்களை உணரச் செய்ததால், தூக்கத்தைத் தொலைத்துவிட்டிருந்தனர். புதிதாகக் கூடிவந்திருந்த மகிழ்வும் பூரிப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடுமோவென்கிற அச்சம் அந்தக் குடும்பத்திலிருந்தவர்களிடம் விழுந்துவிட்டது. பாதி எரிந்துபோன மரக்கடை, உயிர்ப்பலி கேட்டு காத்துக்கொண்டிருப்பதைப் போல் காட்சியளித்தது. தனது அறையிலேயே முடங்கிக்கிடந்த மகனைப் பார்த்து மனமுடைந்துபோன ஆண்டிச்சாமியின் மனைவி “தம்பி, மாமாவக் கூட்டிட்டு வா... ஒரு சின்ன வேலையா வெளில போயிட்டு வருவோம்…” என்றாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 83

“இந்த நெலமையில எங்கம்மா போகப் போற? எல்லாம் அடங்கட்டும். ரெண்டு மூணு நாள் பொறு...” எனச் சோர்வாகச் சொன்னான்.

“ஏய் எந்திரிச்சு வாடா… அகராதி மயிரா பேசாத…” ஆத்திரமாகச் சொன்ன அம்மாவைப் பார்த்தபடியே எழுந்து தயாரானான்.

செப்டம்பர் மாதத்தின் காற்றும் வெயிலும் கூடி, மதுரையின் வீதிகளை ஆக்கிரமித்திருக்க, அவர்களின் கார் மதுரைக் கல்லூரிப் பாலத்திலிருந்து இடதுபுறமாகத் திரும்பியது. “எங்க போறம்னு சொல்லும்மா…” என மகன் ஓரிரு முறை கேட்ட பிறகு “ஜீவா நகருக்குப் போ…” என அம்மா சுருக்கமாகச் சொன்னாள். அவன் திரும்பி அம்மாவைக் கலவரத்தோடு பார்த்துவிட்டு வாகனத்தைச் செலுத்தினான்.

ஜெகதியின் வீட்டுக்கு அவர்கள் வந்துசேர்ந்தபோது, கட்சி ஆட்கள் சிலர் அங்கு காத்திருந்தார்கள். ஆட்கள் அமர்வதற்கென்றே புதிதாகத் தகரக்கூரை அமைக்கப்பட்டு வாசலில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வந்திருந்தவர்களுக்கு மோர் கொடுத்துக் கொண்டிருந்த இளைஞன், ஆண்டிச்சாமி வீட்டு ஆட்களைப் பார்த்து ஒரு நொடி முகம் சுளித்தான்.

“தம்பி... ஜெகதியப் பாக்கணும். கொஞ்சம் அவசரம். நாங்க வந்திருக்கம்னு தகவல் சொல்றியாப்பா…” என ஆண்டிச்சாமியின் மனைவி அந்த இளைஞனிடம் சொல்ல, அவன் ஒரு நொடி தயக்கத்துக்குப் பின் “சரி, செத்த நேரம் பொறுங்க. சொல்லிட்டு வரேன்…” என்றபடியே படியேறிச் சென்றான்.

“அக்கா கூப்டறாங்க… உள்ள வாங்க…” சில நிமிடங்களுக்குப் பின் பரபரப்போடு அந்த இளைஞன் வந்து சொல்ல, ஆண்டிச்சாமியின் மனைவி, மகன், மருமகன் மூவரும் வீட்டுக்குள் சென்றனர். வீட்டின் முன்னறையில் மையமாக வீற்றிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஜெகதி, இவர்களைப் பார்த்ததும் சிரித்த முகத்தோடு “வாங்க… வாங்க… வாங்க… என்ன இம்புட்டு தூரம்..?” என்று கேட்டாள்.

“சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தம்மா...” ஆண்டிச்சாமியின் மனைவி சுரத்தில்லாமல் சொன்னாள்.

“ஓ… சரி… உக்காருங்க…” என ஜெகதி சிரித்த முகத்தோடு சொல்ல, மூவரும் தங்களுக்கான இருக்கையைத் தேடி பார்வையைச் சுழலவிட்டனர். ஊஞ்சலைத் தவிர்த்து எந்த இருக்கையும் அங்கில்லை என்பது தெரிந்ததும், அவர்கள் தயக்கத்தோடு பார்க்க, “அட எம்புட்டு நேரம் நின்னுக்கிருப்பீங்க… உக்காருங்க…” என இந்தமுறை ஜெகதி சற்றே கடுமையான குரலில் சொல்ல, மூவரும் அவளுக்கு எதிரில் தரையில் அமர்ந்தனர். ஆண்டிச்சாமியின் மகனுக்கு உடல் கொதித்தது, நரம்பில் ஊறிப்போன வெறுப்பு பெரும் பகையாகப் பெருக்கெடுக்கத் தொடங்கியது. நறநறவெனப் பற்களைக் கடித்தவனின் கையைப் பற்றி, அவனது தாய் கண்களால் அவனை அமைதிப்படுத்த, தலையைக் குனிந்துகொண்டான். ஜெகதி பாதத்தைத் தரையில் ஊன்றி ஊஞ்சலை மெதுவாக அசைக்க, ஊஞ்சல் தரையில் அமர்ந்திருந்த மூவருக்கும் நெருக்கமாக வந்துபோனது, ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு அருகில் வந்தபோது அவளது கால்கள் அவர்களது முகங்களுக்கு நேராக இருந்தன. பொறுமையிழந்த ஆண்டிச்சாமியின் மனைவி பொங்கியெழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டவளாக “பல வருஷம் வனவாசம் போயி இப்பத்தான் என் குடும்பம் இந்த ஊருக்குள்ள திரும்பி வந்திருக்கு. நிறைய இழந்துட்டோம். இனி எழக்கிறதுக்கு எதுவுமில்ல. எங்கமேல ஏதாச்சும் கோவமிருந்தா தயவுபண்ணி மறந்துடும்மா… ஆயுசுக்கும் உன் வழிக்கு வர மாட்டோம்” என்றபடியே கையெடுத்துக் கும்பிட்டாள். ஜெகதி ஊஞ்சல் ஆட்டும் வேகத்தைக் குறைத்து, பாதத்தால் தரையில் ஊன்றி நிறுத்தினாள். மெல்லிய புன்னகையோடு மூவரையும் பார்த்தவள், “அன்பா, மரியாதையா சாதிக்க நெனச்ச விஷயத்த, வேற மாதிரி செய்ய வெச்சுட்டீங்க… ம்ம்ம்ம்… சரி… உங்களப் பாத்து மத்தவனுக்கும் இப்ப புத்தி வந்துருக்கும். இனிமே உங்க பொழப்பப் பாருங்க. நான் என் ஆளுங்ககிட்ட சொல்லிவைக்கிறேன்” என்றாள். தரையில் அமர்ந்திருந்த மூவரும் கும்பிட்டபடியே எழுந்துகொண்டு திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 83

நீர் வரத்தின்றிப்போன வைகை ஆற்றை வெயில் மட்டுமே ஆக்கிரமித்திருக்க, பாண்டியூருக்கு வெளியே கரையோரமாக ஒரு குட்டியானை வண்டி வந்து நின்றது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த கருப்புவை, வண்டியிலிருந்து உருட்டிவிட்ட செல்வமும், அவனது நண்பர்களும் ஆற்றுக்குள் தரதரவென இழுத்துச் சென்றனர். ஒருவன் உயரமான மூங்கில் மரத்துண்டைத் தூக்கிக்கொண்டு அவர்களுக்குப் பின்னால் நடந்தான். அவ்வளவு நேரமும் காயம்பட்ட களைப்பில் மயங்கிக்கிடந்த கருப்பு, சுடுமணலில் உடல்பட்டு உருவான காயத்திலும் எரிச்சலிலும் அலறத் தொடங்கினான். அவன் வாயை அடைத்திருந்த பழைய துணி, அவனது அலறலை வெளியேறவிடாமல் பாதுகாத்தது. ஆற்றின் மையமாக இழுத்துவரப்பட்ட கருப்புவின் உடலிலிருந்து சட்டையைக் கத்தியால் கிழித்து எடுத்தான் சோணை. உடலின் காயங்களில் மணலும் வெயிலும்பட்டு எரிச்சலில் கருப்பு உருள, சோணை அவனது வேஷ்டியையும் கத்தியால் அறுத்து உருவினான். இரண்டு பேர் ஆழமாகக் குழிதோண்டிக்கொண்டிருந்தனர். ஒருவன் மூங்கில் மரத்துண்டுகளை இணைத்து வலுவான கழுமரம்போல் கட்டி முடித்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் மனித நடமாட்டமே இல்லாததை உறுதிசெய்துகொண்ட செல்வம், “சோண அவன மரத்துல உருட்டிவிடுடா...” என உத்தரவிட, சோணையும் இன்னொருவனும் கருப்புவை உருட்டி மூங்கில் மரத்தில் கட்டத் தொடங்கினார்கள். கை, கால், இடை என அவனை மூங்கிலில் இறுகக் கட்டிய பின் எல்லோருமாகச் சேர்ந்து மெதுவாக அருகிலிருந்த குழியில் இறக்கினார்கள். கருப்புவின் உடல் கட்டப்பட்ட அந்த மூங்கில் மரத்தை அவனது பாதம் தொடும் எல்லைவரை மணலால் மூடினார்கள்.

காகிதத்தில் மடித்து எடுத்துவரப்பட்ட விரலளவு ஆணிகளையும் சுத்தியலையும் சோணை செல்வத்திடம் கொடுக்க, செல்வம் முதல் ஆணியை கருப்புவின் மாரில் அடித்து இறக்கத் தொடங்கினான். அவன் அலறுவதைக் கேட்டு சகிக்காமல், செல்வத்தின் நண்பர்கள் விலகிச் செல்ல, சோணையும் செல்வமும் அடுத்தடுத்த ஆணிகளை வரிசையாக அடித்தார்கள். ஆறேழு ஆணிகளை அடித்து இறக்குவதற்குள் கருப்புவின் உடலில் குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. ரத்தம் அப்பிய கைகளோடு ஆணியடிப்பதை நிறுத்திய செல்வம், உணர்ச்சியே இல்லாமல் கருப்புவைப் பார்த்தான். “இதெல்லாம் நடக்கவே கூடாதுன்னு நெனச்சுட்டு இருந்தண்டா… நீயும் உன் பங்காளிகளும் செய்ய வெச்சுட்டீங்க…” கையிலிருந்த ரத்தத்தை கருப்புவின் முகத்துக்கு நேராகக் காட்டியவன் “ஒரு நாள் உங்கண்ணனக் காப்பாத்தணும்னுதான் மொத மொதல்ல இந்தக் கையால ரத்தம் பாத்தேன்… என்ன சொல்றேன்னு புரியலல்ல உனக்கு... ஆண்டிச்சாமியக் கொன்னது நான்தான். நான் மட்டுந்தான்… அன்னிக்கி நான் இல்லாமப் போயிருந்தா, உங்கண்ணன் அப்பவே செத்துப்போயிருப்பான். ஆண்டிச்சாமி கழுத்த நெரிச்சதுல உங்கண்ணன் டவுசர்லயே மோண்டுட்டாண்டா... அம்புட்டு பெரிய பயந்தாங்குளி. விட்டா செத்துருவானேன்னு நான் உசுர துச்சமா நெனச்சு ஆண்டிச்சாமிய அடிச்சுவுட்டேன். பெரிய தலைய அடிச்சுவுட்டா மரியாத கிடைக்கும்னு அந்தப் பாவக் கணக்க உங்கண்ணன் வாங்கிக்கிட்டான். ஈ எறும்பக்கூட கொல்லத் திராணியில்லாம பத்துப் பதினஞ்சு வருஷமா பெரிய ரௌடியா பேர் எடுத்தது உலகத்துலயே உங்க அண்ணன் ஒருத்தனாத்தான் இருப்பான். ஊளப்பய…” சத்தமாகச் சிரித்த செல்வம், ஆற்றின் இன்னொரு பக்கமாகக் கையை நீட்டி “இங்கதான் எங்கியோ அவனோட தலைய பொதச்சுவெச்சேன். அண்ணன் மேல பிரியமா இருப்பியேன்னுதான் உன்னயவும் இங்கியே கொண்டுவந்தேன்... சந்தோசமாப் போ… உங்கண்ணனக் கேட்டேன்னு சொல்லு...” என்றபடியே மிச்சமிருந்த ஆணிகளை அடிக்கத் தொடங்க, கருப்பு வலியைப் பொருட்படுத்தாமல் அரற்றுவதை நிறுத்திக்கொண்டான். அவன் கண்களில் முடிவுறாப் பகையின் நெருப்பு ஜுவாலைகள் பற்றி எரிந்தன. செல்வத்தின் நண்பன் ஒருவன் துணிப்பையில் போட்டு எடுத்துவந்த கோழியை எடுத்து நீட்ட அதைக் கையில் வாங்கிய செல்வம், கோழியின் கழுத்தைத் திருகி அதன் குருதியையும் கருப்புவின் மீது ஊற்றினான். கோழியின் உடலைப் பிய்த்து அவன் உடலோடு சிதறவிட்டவன் “சனிப்பொணம் தனியாப் போகக் கூடாதுல்ல...” என்றபடியே கருப்புவின் கண்களைப் பார்த்தான். அவன் எதையோ சொல்லத் துடிக்கிறான் என்பதை அந்தக் கண்கள் ஆவேசமாக வெளிப்படுத்த, செல்வம் அவன் வாயைக் கட்டியிருந்த துணியை எடுத்தான். வாயிலிருந்தும் ரத்தம் கொப்பளித்து வெளியேற, கருப்பு எச்சிலையும் ரத்தத்தையும் செல்வத்தின் மீது துப்பினான். செல்வம் அதைப் பொருட்படுத்தாமல் புன்னகைத்தபோது, குருதி அவன் முகத்தை மறைக்கத் தொடங்கியிருந்தது. “எனக்கு செய்ற எதையும் மறந்துடாத… ஏன்னா உன் சாவு இதைவிடக் கொடூரமா இருக்கும்…” திக்கித் திணறி கருப்பு சொல்லி முடிக்க, செல்வம் அவன் வாயை மீண்டும் துணியால் மூடினான். “உடம்புல இத்தன ஆணிய எறக்கியும் உனக்கு திமிரு அடங்கல… அடக்கறேன்…” என்றபடியே மிச்சமிருந்த ஆணிகளையும் கருப்புவின் உடலில் அடித்து இறக்கத் தொடங்கினார்கள். தொண்ணூற்று ஒன்பது ஆணிகளை அவனது உடலில் அடித்த பின், ஓய்ந்துபோனவர்களாக செல்வமும் அவனது ஆட்களும் ஆற்றிலிருந்து கிளம்ப, சூரியன் மேற்கில் இறங்கியது. கருப்புவின் உடலிலிருந்து மூங்கிலில் வழிந்த குருதி, வைகையாற்றின் தாகத்துக்குப் படையலாகியிருக்க, ரத்த வெறிகொண்ட கழுகுகள் அவனது உடலை நோக்கி தாகத்தோடு பறந்து வரத் தொடங்கின.

(ஆட்டம் முடிந்தது)

****

ரெண்டாம் ஆட்டம்! - காத்திரு பகையே...

`ரெண்டாம் ஆட்ட’த்தின் உலகத்தைத் தற்காலிகமாக என்னிலிருந்து விலக்கிவைக்கிறேன். குருதியும், வன்முறையும், மரண ஓலங்களும் இந்தக் கதையின் வழியாக ஒருபுறம் என் செவிகளில் எதிரொலித்தாலும், இன்னொருபுறம் மதுரை நகரின் நாற்பது வருட வாழ்வை நானும் புரிந்துகொள்வதற்கான அனுபவமாக மாறியிருந்தது. இது கதையா, கற்பனையா என்கிற கேள்விகளை எதிர்கொள்ளும்போதெல்லாம் எந்த பதில்களுமில்லாமல் புன்னகையோடு மட்டும் கடந்துசெல்கிறேன். எல்லாத் தத்துவங்களைவிடவும் வாழ்க்கை மதிப்புமிக்கதென நம்புகிறவன் நான். கோபங்களும் வெறுப்புகளும் மனிதர்களை எத்தனை எளிதாக வன்முறையை நோக்கி நகர்த்திவிடுகின்றன என்பதை பால்யகாலம் தொட்டுப் பார்த்து வளர்ந்தவன். திறமையும் வீரமும் நிரம்பி நான் கண்டு வியந்த பலர் இப்போது உயிருடனில்லை. இருபது வயதில் ஏதோவொரு தருணத்தில் தடம் மாறி வன்முறையின் பாதையில் செல்லவிருந்தவன், எனக்கு முன்னால் சென்றவர்களின் முடிவுகளைக் கண்டு சுதாரித்துத் திரும்பினேன். இந்த வாழ்க்கை எத்தனை பெருமதியானது என்பதைப் புரிந்துகொண்டபடியால், அதனை அர்த்தபூர்வமாக வாழ விரும்பி எழுத்தைத் தேர்வுசெய்தேன். `ரெண்டாம் ஆட்ட’த்தின் உலகத்துக்குள் எனக்குத் தெரிந்தவர்களும், என்னைத் தெரிந்தவர்களும் அடக்கம். எதிர்ப்புகள், விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தபோதும் இந்தத் தொடர்கதை ஏற்படுத்திக்கொடுத்த வாசகப்பரப்பு நான் எதிர்பாராதது. ஒரு நல்ல கதையை, அதன் சுவாரஸ்யம் குறைவதற்கு முன்பாகவே முடித்துக்கொள்வதுதான் அழகு. நான் இங்கு முடிக்கவில்லை, ஓர் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். நட்பு, காதல், தியாகம் இவற்றோடு பழியுணர்ச்சியும்கூடிய `ரெண்டாம் ஆட்ட’த்தின் இன்னொரு தலைமுறைக் கதையை விரைவில் தொடங்குவேன்! - லஷ்மி சரவணகுமார்

****

ரெண்டாம் ஆட்டம்! - 83

பிழைப்புக்காக ஏராளமான வேலைகளைப் பார்க்க நேர்ந்ததும், நாடோடியாக வெவ்வேறு ஊர்களில் அலைந்ததும் இவரின் எழுத்துக்கான விதை. பத்தொன்பது வயதிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் லஷ்மி சரவணகுமார், தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கறியப்பட்டவர், கொண்டாடப்படுபவர். தன்னுடைய தனித்துவமான சிறுகதைகளாலும் நாவல்களாலும் தனக்கென ஏராளமான வாசகர்களைக்கொண்டிருக்கும் இவர் எழுதிய முதல் தொடர், இந்த ‘ரெண்டாம் ஆட்டம்.’ எட்டு சிறுகதை நூல்கள், ஐந்து நாவல்கள், கவிதை நூல், கட்டுரைத் தொகுப்புகள் என பதினேழு நூல்கள் வெளியாகியுள்ளன. சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது, ஆனந்த விகடன் விருது, இலக்கியச் சிந்தனை விருது உட்பட ஏராளமான விருதுகள் இவரது படைப்புகளுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. ‘பொன்மகள் வந்தாள்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட சில படங்களின் வசனகர்த்தா. விரைவில் முழுநீளப் படமொன்றை இயக்கவிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்தத் தொடருக்கான சித்திரங்களைத் தீட்டியது மூலம் என்னை மேலும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளித்த விகடன் குழுமத்திற்கு எனது நன்றியும் வணக்கமும்!” - பாலகிருஷ்ணன், ஓவியர்

பூர்விகம் நாகர்கோவில். சென்னை கவின் கலை கல்லூரியில் பயின்று ஓவியத் துறையில் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism