மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 9

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

பகைவர்களுக்கு பதிலடி கொடுத்து விட்டதோடு, நிரந்தரமான பயத்தையும் காட்டிவிட்ட நிறைவில் கருப்பு ஆறுதலாக இருந்தான்.

அம்சவல்லியின் கொலை, மதுரைக்குள்ளிருந்த அத்தனை பெரிய தலைகளையும் உலுக்கியிருந்தது. பகையின் நெருப்பு நாலா புறமும் பற்றி எரிந்த நாள்களில்கூட இப்படியொரு பயங்கரத்தை எவரும் செய்யத் துணிந்ததில்லை. “என்னதான் ஆத்திரம்ண்டாலும் பொம்பளப் புள்ள மேலயா கையவெப்பாய்ங்க?” என கோட்டைச்சாமியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களே வெறுப்போடு பேசிக்கொண்டார்கள். திண்டுக்கல்லிலிருந்து தப்பித்த கருப்பும் முனுசும் கமுதியில் பதுங்கியிருக்க, மற்றவர்கள் தஞ்சாவூர், தூத்துக்குடி என வெவ்வேறு ஊர்களில் ஒளிந்திருந்தார்கள். நடந்தது பெரிய சம்பவம் என்பதோடு, மொத்த திண்டுக்கல்லும் சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறது என்பதால் முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை கருப்புவின் ஆட்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எரிந்துகொண்டிருக்கும் நெருப்புச் சுவாலைகள் கொஞ்சமேனும் அணைவதற்கு முன்னால் கோர்ட்டில் சரண்டராவதும், ஊர்ப்பக்கம் திரும்புவதும் பாதுகாப்பானதில்லை என்பதை வக்கீல் சொல்லியிருந்தார்.

பகைவர்களுக்கு பதிலடி கொடுத்து விட்டதோடு, நிரந்தரமான பயத்தையும் காட்டிவிட்ட நிறைவில் கருப்பு ஆறுதலாக இருந்தான். சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்த கமுதியின் காடுகளுக்குள் கிடந்தது அவர்களின் பூர்வீக வீடு. வீட்டுக்குப் பின்னால் நிறைய ஆடுகள் வளர்க்கப் பட்டதால், எப்போதும் ஆட்டுப் புழுக்கை மணமும், மூத்திர வாடையும் சூழ்ந்திருக்கும். நடந்துபோகும் தூரத்தில்தான் வழிவிட்டான் கோயில். கோட்டைச்சாமி எல்லா நல்ல காரியத்தையும் இந்தக் கோயிலிலிருந்துதான் தொடங்குவான் என்பதால், கருப்புவுக்கு அண்ணனது அருகாமையை உணர்வது போலிருந்தது. அவனைத் தவிர வேறு நினைப்புகளே இருக்கக் கூடாதென உறுதி எடுத்துக்கொண்டதைப்போல் பகல் இரவென இடைவெளியில்லாமல் குடித்தான்.

முனுசுக்கு இந்தத் தலைமறைவு நாள்கள் வேறுவிதமான அச்சத்தை உருவாக்கியிருந்தன. கோட்டைச்சாமியின் கட்டுப்பாட்டிலிருந்த ஏரியாக்களுக்குள் மற்றவர்கள் இனி எளிதாக ஊடுருவக்கூடும். இந்த நிலைமையில், தொழிலைச் சரியாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக் கூடிய ஆள் செல்வம் மட்டும்தான். “செல்வத்தோட பகைய வளக்கறதுக்கு இது நேரமில்ல கருப்பு. நம்மளவிட அண்ணனப் பத்தியும், அவர் செஞ்ச தொழிலப் பத்தியும் அவனுக்குத்தான் முழுசாத் தெரியும், அவென் இருந்தாதான் தொழில் கையவிட்டுப் போகாம இருக்கும்” என்று முனுசு தயக்கத்தோடு சொல்ல, கருப்பு முறைத்தான். “அண்ணனுக்கு அவென் மேல இல்லாத உரிமையாண்ணே. அவர்மேலதான் கோவம், நம்மகூட எப்பயும்போலப் பேசப் பழகன்னு இருந்திருக்கலாம்ல... சரக்கத் தூக்கியிருக்கான். ஒரு கோடி ரூவா சரக்கு” என்று கருப்பு எகிறினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 9

“யேய்... உண்ம என்னன்னு தெரியாம அவசரப்படாதடா. அதான் முத்தையாவும் சேகரும் இல்லையின்னு சொல்றாய்ங்கள்ல...”

“சரி அவென் சரக்க எடுக்கலன்னா என்ன வெண்ணெய்க்கி அண்ணன் செத்ததுக்குக்கூட வராம இருந்தானாம்? அவந்தாண்ணே உருத்தா நின்னு எல்லாத்தையும் செஞ்சிருக்கணும். செய்யலையே” கருப்பு சொன்னதிலும் நியாயம் இருப்பதாகப்பட்டதால் முனுசு என்ன சமாதானம் சொல்வதெனத் தெரியாமல் தயங்கினான்.

விரகனூருக்கு வெளியே தென்னந்தோப்பில் தனசேகர் சரக்கோடு பாதுகாப்பாகப் பதுங்கி இருந்தான். இத்தனை வயதுக்குப் பிறகு, எதுவாக விரும்பினோமோ அதுவாக ஆகிறோமென்கிற பூரிப்பு அவனுக்கு. ஊரிலிருக்கும் ஓராயிரம் ஏழரைகளைப்போல் இவனும் தெனாவெட்டாகத் தான் திரிவான். புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு ‘யார்றா இவென் பெரிய தாட்டியக்காரனா இருப்பாம்போலயே...’ என்று தோன்றும். அவனோடு பழகியவர்களுக்கு மட்டும்தான் அவன் வெறும் ஊளை என்பது தெரியும். முத்தையாவுக்கு மூத்த மகனாகப் பிறந்து அவனால் சாதிக்க முடிந்ததெல்லாம் ஓசி டீ மட்டும்தான். ஏதாவது சின்ன கேஸ்களில் ஆஜராக ஆட்கள் இல்லாதபோது, அவர்களுக்காக ஆஜராவதைச் சாகசமாக நினைப்பான். நீண்டகாலமாக முத்தையாவும் அதைத்தான் செய்துகொண்டிருந்தார். அவரின் உண்மையான வாரிசாக சேகரும் அதையே தொடர்ந்தான். ‘அப்பந்தான் ஊளன்னா மவனும் ஊளையாவே இருக்கான்’ எனக் காதுபடவே பேசியவர்களுக் கெல்லாம் ‘ஒக்காலி நான் ஊளையில்லடா, தாட்டியக்காரந்தாண்டா’ என இப்போது சொல்ல வேண்டுமெனத் தோன்றியது. தோப்புக்கு வந்த நாள் முதல், ஈஸ்வரிதான் அவனோடு துணைக்குத் துணையாக இருக்கிறாள். பல ஜென்மங்களாகப் பெண்ணுடலையே பார்க்காத வனைப்போல் அவளோடு கூடினான். அந்தத் தோப்பில் அவர்களைத் தேடிவந்து தொந்தரவு செய்யக்கூடியவர்கள் ஒருவருமில்லை என்பதோடு, செல்வம் சொல்லும்வரை செய்வதற்கு அவனுக்கு வேறு வேலைகளும் இருக்கவில்லை.

சரக்கை வெளியேற்ற சரியான நேரம் வந்துவிட்டிருப்பதைப் புரிந்துகொண்ட செல்வம், மதுரைக்குத் திரும்பினான். இருபத்தாறு வருடங்களில் பார்க்காத ஊராகத் தெரிந்தது. இனி இங்கிருந்து எங்கும் ஓடத் தேவையில்லை. கோட்டைச்சாமியின் பங்காளிகள், தங்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்னைகளையெல்லாம் தீர்த்துவிட்டுத் திரும்புவதற்கு முன்னால் மொத்த மதுரையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியுமென்பது அவனுக்குத் தெரியும். வழக்கமாக சரக்குகளை யாவாரத்துக்கு எடுக்கும் எல்லா ஆட்களையும் ஜெகதி ஒருங்கிணைத்திருந்தாள். லாபத்தில் இருபத்தைந்து சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக்கொள்ளலாம் என்று அவள் வாக்குக் கொடுத்திருந்ததால், செல்வத்தை முதலாளியாக ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கங்களும் இருந்திருக்க வில்லை. அந்த வெள்ளிக்கிழமை காலை விரகனூர் தோப்புக்கு செல்வம் திரும்பியபோது, சரக்குகளை எடுத்துச்செல்ல வியாபாரிகளும் வந்திருந்தனர். இப்படி எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்து, சரக்குளைக் கொடுப்பது வழக்கமில்லை என்பதால் தனசேகர் பயந்தான். “சேகரு… எல்லாரையும் ஒரே இடத்துல வரச் சொன்னது இனிமே நான்தான்னு அவய்ங்களுக்குப் புரியணுங்கறதுக்காகத்தான். சரக்க ஓட்றதெல்லாம் மதுரைல ஒரு மேட்ரே இல்ல. வெறும் சரக்க ஓட்றதுக்கா இவ்ளோ செஞ்சோம்னு நெனைக்கிற? இன்னும் நெறைய இருக்கு” என்று செல்வம் மர்மமாகச் சிரித்தான்.

காலை நேரத்தின் மெல்லிய வெளிச்சம் தென்னமரங்களை ஊடுருவி விழுந்து கொண்டிருந்தது. செல்வம் அழைத்திருந்த பத்து யாவாரிகளும் வந்துவிட்டிருந்தனர். இத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்த செல்வமில்லை இவன் என்பதை, பார்த்ததும் தெரிந்து கொண்டனர். ஆளுக்குப் பத்து கிலோ என்று சரியாகப் பிரித்துவைத்திருந்தவன் “இதுக்கு முன்ன வாரா வாரம் கலெக்‌ஷன குடுத்துட்டு இருந்தீங்க, இனிமே தெனமும் குடுக்கணும். சரக்கு வேணும்னா சோணைய கேக்கணும், காசு வெவகாரம்னா ஜெகதியக் கேக்கணும். வேற யார்கிட்டயும் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்கக் கூடாது” என அவன் சொல்ல, எல்லோரும் சரியெனத் தலையாட்டிக் கொண்டனர். செல்வத்தின் பின்னால் நின்றிருந்த சேகருக்குச் சுருக்கென்றது. சோணையும் ஜெகதியும்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பென்றால் எனக்கென்ன வேலை? இவனும் தன்னையொரு ஊளையாகத்தான் நினைக்கிறானோ என சேகருக்கு ஆத்திரம் எழுந்தது. காட்டிக்கொள்ளாமல் நின்றிருந்தான். வந்திருந்த வியாபாரிகள் கிளம்பிச் செல்ல, சேகரின் முகத்தைவைத்தே அவன் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட செல்வம், “டேய் கிறுக்குத் தாயோலி... நாந்தான் உங்கிட்ட முன்னயே சொன்னன்ல... சரக்கு ஓட்றதெல்லாம் ஒரு மேட்ரே இல்லடான்னு. நீ இதுக்குள்ள வராத. எல்லாத் தொழிலையும் சிக்கல் இல்லாம நாம செய்யணும்னா அரசியல் சப்போர்ட் வேணும். எவனோ ஒருத்தன நம்பில்லாம் பிரயோஜனமில்ல. அதனால நீதான் கட்சில சேரணும்” சேகருக்குத் தன் காதுகளையே நம்ப முடியாமல், “எலேய் செல்வம் இதெல்லாம் நடக்கற காரியமாடா?” எனக் கேட்டான். “நடக்கும்டா... பாத்துட்டே இரு” எனச் சிரித்தபடியே செல்வம் கிளம்பினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 9

ஜெகதியும் செல்வமும் வண்டியில் ஏறிக்கொள்ள, சோணை காரை ஓட்டினான். செல்வம் கண்ணாடி வழியாகச் சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கோட்டைச்சாமியின் சாவுக்காக ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் இன்னும் நிறைய சுவர்களில் அப்படியே இருந்தன. “ஜீவாநகர் புது வீட்டுக்குப் போயிரு சோண” என்ற ஜெகதி, திரும்பி செல்வத்திடம், “நாளைக்கி கருப்பும் அவன் ஆளுகளும் சரண்டராகறாய்ங்க போல” எனப் பொதுவாகச் சொன்னாள். வெறுமனே ‘ம்ம்ம்’ என பதில் சொன்ன சோணைக்கு அம்சவல்லியை நினைத்துப் பாவமாயிருந்தது. “இந்தப் புள்ள ஏண்டி அவசரப்பட்டு இப்பப் போயி போஸ்டர ஒட்டுச்சு. சும்மா இருந்திருக்கலாம்ல...” எனக் கவலையோடு சொல்ல, ஜெகதி அமைதியாக இருந்தாள். “அந்தப் புள்ள செத்ததுமில்லாம பச்சப்புள்ளைய வேற சாகக் குடுத்திருச்சு. ச்ச...’’ புலம்பலாகப் பேசியபடியே இருக்க, ஜெகதி அவன் கையைப் பற்றினாள். “செல்வம்…” அவன் திரும்பி என்ன வென்பதைப்போலப் பார்த்தான். “போஸ்டர் அவ ஒட்டலடா...” செல்வம் குழப்பத்தோடு அவளைப் பார்க்க, “நாந்தான் அந்த போஸ்டர ஒட்டச் சொன்னேன். ஆனா, இந்த முட்டாத் தாயோலிங்க இப்பிடிச் செய்வாய்ங்கன்னு தெரியாதுடா…” குரலில் எந்தக் கலக்கமும் இல்லாமல் அவள் சொல்லி முடிக்க, ஆத்திரத்தில் கையை உருவிக்கொண்ட செல்வம் அவளை ஓங்கி அறைந்தான். சோணைக்குப் பதற்றத்தில் கை கால்களெல்லாம் உதறலெடுக்க, அவசரமாக பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான்.

(ஆட்டம் தொடரும்)