Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 79

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

“இல்லண்ணே... இந்தத் தொழில், இதால வர்ற லாவ நட்டம்லாம் என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு இதுல்லாம் வேணாம்ணே...”

ரெண்டாம் ஆட்டம்! - 79

“இல்லண்ணே... இந்தத் தொழில், இதால வர்ற லாவ நட்டம்லாம் என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு இதுல்லாம் வேணாம்ணே...”

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

“மேலூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த காரில் காளி இறுக்கமான முகத்தோடிருக்க, சுப்பு கலவரமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டி ஓட்டியபடியே பின்னால் திரும்பி கவனித்த சமயன், “எதுக்கு ரெண்டு பேரும் மூஞ்சியத் தூக்கிவெச்சுட்டு இருக்கீங்க? விசேஷத்துக்குப் போறோம்... செய்முறைய செஞ்சுட்டு போன வழியப் பாத்து திரும்பி வந்துடுறோம்.” ஆறுதல்படுத்துவதைப்போல் சொன்னான்.

“சமயா உனக்கு மூர்த்தி அண்ணனப் பத்தித் தெரியாதுடா… ஒருத்தன தன் பக்கம் இழுக்கணும்னு முடிவு பண்ணிட்டாருன்னா, என்ன திருகல் பண்ணிண்டாலும் செஞ்சு முடிச்சிருவாரு…”

“அப்பிடில்லாம் ஒண்ணும் ஆயிராதுண்ணே. கண்டதையும் நெனச்சு மண்டைய உடைச்சுக்காம இரு…” சமயன் சிரித்தான். காளியின் உடலிலும் முகத்திலும் வெளிப்பட்ட பதற்றம், பல வருடங்களுக்கு முன் பெருமாள் அவனிடம் மார்க்கெட்டில் பவுசு வாங்கச் சொல்லிக் கேட்டபோது கண்ட முகத்தை சுப்புவுக்கு நினைவுபடுத்தியது. “இந்தா மூஞ்சிய இப்பிடி வெக்காத... எப்ப பதட்டமா இருக்கியோ, அப்ப உனக்கே தெரியாம நீ மத்தவங்க பேச்ச கேக்க ஆரம்பிச்சிருவ” எச்சரிக்கும்விதமாக காளியிடம் சொல்ல, தன் மனவோட்டத்தைப் படித்துவிட்டாளென்கிற தடுமாற்றத்தில் காளி வியர்த்திருந்த உள்ளங்கையை காரின் சீட்டில் துடைத்துக்கொண்டான்.

விசேஷ வீடிருந்த வீதியை மறைத்தபடி, மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு, குழாய் ரேடியோவில் சினிமா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. வயதுக்கு வந்த பெண்ணை வாழ்த்தி ஏராளமான போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும், `வாழ்த்துகளுடன் தாய்மாமன் அறிவழகன்...’ என எழுதப்பட்டிருந்தது. இரண்டு வீதிகளுக்கு அப்பாலேயே வண்டியை நிறுத்திவிட்டு காளியும் சுப்புவும் முன்னால் நடக்க, சமயன் அவர்களைத் தொடர்ந்து பின்னால் வந்தான். அறிவழகனின் உதவியாளர்கள் இரண்டு பேர் காளியைத் தூரத்திலேயே கவனித்து ஓடி வந்தனர். “அண்ணே வாங்கண்ணே…” குனிந்து வணக்கம் வைத்து வரவேற்க, காளி உயிர்ப்பில்லாமல் சிரித்தான். ஒருவன் அருகிலிருந்தவனிடம் “எலேய் ஓடிப்போயி ஐயாகிட்ட தகவல் சொல்லு…” என்று துரத்த, இன்னொருவன் விசேஷ வீட்டை நோக்கி ஓடினான். இனம் புரியாத பதற்றத்தில் காளி எப்போதுமில்லாதபடி சுப்புத்தாயின் கையைப் பற்றிக்கொண்டான். திருமணமான புதிதில்கூட அவன் இப்படிச் செய்ததில்லை என்பதைப் புரிந்துகொண்ட சுப்பு அரவணைத்துக் கொள்ளும்விதமாக அவனது விரல்களை தன் விரல்களோடு இறுகப் பற்றிக்கொண்டாள். அவர்கள் வீட்டை நெருங்குவதற்கும், மூர்த்தி வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. மூர்த்தியைக் கண்டதும் காளி சுப்புவின் கைகளைப் பற்றியிருந்த தனது கையை உருவிக்கொண்டான். மூர்த்திக்கும் காளிக்குமான சின்னஞ் சிறிய இடைவெளியைப் பதினெட்டு வருடகால நன்மையும் தீமையும் நிரப்பியிருக்க, மூர்த்தி முதலில் கடந்து வந்தார். “நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம்யா…” நெகிழ்ச்சியோடு அவனது கையைப் பற்றிக்கொள்ள, “என்னண்ணே அப்பிடிச் சொல்லிட்டீங்க… நம்ம வேணியோட மக… நான் வராம யாரு வருவா?” காளி சிரித்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 79

வீட்டின் மாடியில் பந்தல் போடப்பட்டு சடங்கான பெண்ணுக்கான விசேஷம் நடந்துகொண்டிருக்க, வீட்டுக்குப் பின்னால் தோட்டத்தில் பந்தி நடந்துகொண்டிருந்தது. கறிக்குழம்பின் வாசனை அந்த வீதியில் சுழன்ற காற்றில் நிரம்பியிருக்க, செய்முறை செய்ய ஆட்கள் அடித்துக்கொண்டிருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. வேணியின் மகளை வாழ்த்துவதற்காக காளியும் சுப்புவும் மாடிக்குச் சென்றனர். நாற்காலியில் அலங்காரத்தோடு அமர்ந்திருந்த வேணியின் மகளைப் பார்த்து ஒரு நொடி துணுக்குற்றான். அச்சு அசலாக வேணியின் சாயல் அவளுக்கு. மறக்க வேண்டும் என நினைத்த கடந்தகால நினைவுகள் அலையென பெருக்கெடுத்தன. நட்பு, துரோகம், விசுவாசம் என தன்னிலிருந்து விலகிப்போன உணர்ச்சிகள் அவ்வளவையும் அந்தச் சின்னஞ்சிறிய நொடி மீட்டுக் கொடுத்தது. “என்னாச்சுப்பா... ஏன் அப்பிடியே மலச்சுப்போயி நிக்கிற? வா…” என மூர்த்தி கையசைத்துக் கூப்பிட்டார். மூர்த்தியை நெருங்கி “அண்ணே... அப்பிடியே நம்ம வேணி சாயல்ணே…” காளி ஆச்சர்யமாகச் சொல்ல “ஆமாய்யா… தெய்வம் எதையாச்சும் எடுத்துக்கிட்டா பதிலுக்கு இன்னொண்ணை குடுத்துடுது…” மூர்த்தி நெகிழ்ச்சியில் பூத்திருந்த கண்ணீரைத் துடைத்தபடிச் சொன்னார்.

சமயன், கொண்டுவந்த பையிலிருந்து சீர் சாமான்களையெல்லாம் எடுத்து வேணியின் மகளுக்கு முன்னால்வைக்க, சுப்பு திரும்பி காளியைப் பார்த்தாள். சீர் தட்டை காளி கையிலெடுத்து வேணியின் மகளிடம் நீட்டினான். வளையல்கள், பூ, பழம் இவற்றோடு தங்க நெக்லஸ் ஒன்றுமிருந்தது. வேணியின் மகள் மருண்ட கண்களோடு அவர்களைப் பார்க்க, “வாங்கிக்கத்தா... இதுவும் உனக்குத் தாய்மாமன் சீருதான்…” எனப் பின்னாலிருந்து மூர்த்தி சிரித்தார். அவர்கள் புகைப்படத்துக்காகச் சிரிக்க, அந்த நொடி மாபெரும் ஓவியமாக உறைந்தது.

“சுப்பு நீ சமயனக் கூட்டிட்டுப் போயி சாப்டு… நான் வந்துடறேன்” காளி சொல்ல, அவள் தயங்கினாள். “நீயும் கையோட சாப்ட்டுறலாம்ல…” அவனைத் தன் பிடியிலிருந்து விடுவிக்க விரும்பவில்லை. “வரேன் வரேன்… பேச வேண்டிய சமாசாரம் கொஞ்சம் இருக்கு, பேசிட்டு வந்துடுறேன்” என காளி உறுதியான மனநிலையோடு சொன்னான். “சரி அப்ப நீ சமயனக் கூட்டிட்டுப் போ. நான் தனியா போயி சாப்ட்டுக்கறேன்” என்றபடியே சுப்பு விலகிச் சென்றாள். வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்துக்குள் காளியும் சமயனும் இறங்கி நடந்தபோது, காளிக்கு ஆசுவாசமாக இருந்தது. தென்னை மரங்களுக்கு நடுவே பாய்கள் விரிக்கப்பட்டு மூர்த்திக்கு நெருக்கமானவர்கள் அமர்ந்திருந்தனர். சீமைச் சாராயமும், சீட்டு விளையாட்டும் ஓடிக்கொண்டிருந்ததால் அந்த இடம் பேச்சும் சிரிப்புமாயிருந்தது. அவர்களை நெருங்க நெருங்க காளியின் நாவிலும் மதுவின் சுவை ஓடத் தொடங்கியது. இவர்கள் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிய அறிவு, “காளியண்ணே...” எனச் சத்தமாகச் சிரித்தபடியே வந்து கட்டிக்கொண்டான். “வாண்ணே... சரக்கு சாப்டுண்ணே...” என அறிவு பரபரக்க, சுதாரித்துக்கொண்ட காளி, “ஏய் சும்மா இருப்பா... போதாத காலத்துல கொஞ்ச நாள் குடிச்சேன். இனிமேல்லாம் குடிச்சா மரியாதையா இருக்காது…” என்று சாமர்த்தியமாகத் தவிர்த்தான். “நம்ம மருமக விசேஷம், ஆசைக்கு ரெண்டு பெக் அடிச்சாதானண்ணே நல்லாருக்கும்.” அறிவு அருகிலிருந்தவனை மது ஊற்றச் சொல்லி அவசரப்படுத்த, அவன் பித்தளை டம்ளரில் ஊற்றிக்கொடுத்தான். காளி, சுட்டு விரலால் ஒரு சொட்டு மதுவை எடுத்து நாவில் வைத்துக்கொண்டான். “உன் ஆசைக்காகய்யா... ஆனா இதுக்கு மேல வேணாம்” என்று சிரித்தான். வற்புறுத்த விரும்பாதவனாக அறிவு விட்டுவிட, சரியாக மூர்த்தியும் வந்துவிட்டார். “ஏய் அறிவு... வந்திருக்க ஆளுகளயெல்லாம் சாப்பாட்டுக்கு அனுப்பி வெய்யிப்பா…” எனச் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்களைக் காட்டிச் சொல்ல, அறிவு எல்லோரையும் பந்திக்குக் கிளப்பினான். மூர்த்தியின் மீதிருந்த மரியாதை காரணமாக எதையும் பேசாமல் அமைதியாகச் சென்றனர். ஆட்கள் சென்ற பின், பாயில் சிதறிக்கிடந்த பொருள்களையெல்லாம் அருவருப்போடு பார்த்த மூர்த்தி “குடிகாரப்பயக, எப்பிடி வெச்சிருக்காய்ங்க பாரு...” எனப் புலம்பியவாறே தன்னோடு வந்தவனிடம் “எலேய் சுத்தம் பண்ணி விடுடா...” என்று உத்தரவிட்டார். அவன் சடுதியில் பாயை உதறிச் சுத்தம் செய்து விரித்துவிட மூர்த்தி, காளி, அறிவு மூவரும் உட்கார்ந்தனர். மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டனர்.

பெரும் அமைதி சூழ்ந்திருக்க, “நாம எப்பயும்போல ஒண்ணாவே இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்?” அறிவுதான் ஆரம்பித்தான். “எதுக்கு இப்ப பழசையெல்லாம் பேசிக்கிருக்க...” என மூர்த்தி இடைமறித்தார். “இல்லப்பா, எல்லாரும் ஒண்ணா இருந்திருந்தா நம்மளுக்கு மட்டுமில்ல, நம்ம ஊருக்கும் எம்புட்டோ செஞ்சிருக்கலாம்...” என விரக்தியாகச் சொன்னான். “நாம நெனைக்கிறதெல்லாம் நடந்துட்டா அப்பறம் சாமின்னு ஒண்ணு எதுக்குடா? பழைய கதைய விடுவோம். இனி என்ன செய்யப்போறோம்னு பேசுவோம்” என்றபடியே காளியை நோக்கித் திரும்பியவர், “என்னப்பா காளி... பயல வெளியூருக்கு அனுப்பிவிட்டுப்புட்ட... பிள்ளைய பிரிஞ்சு இருக்கறது எம்புட்டு கஷ்டம்னு தெரிஞ்சதால சொல்றேன், உடனே கூப்ட்டு கூடவெச்சுக்க...” என்றார்.

“இல்லண்ணே... இந்தத் தொழில், இதால வர்ற லாவ நட்டம்லாம் என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு இதுல்லாம் வேணாம்ணே...”

ரெண்டாம் ஆட்டம்! - 79

“அட, இந்தத் தொழிலுக்குள்ள இழுக்காதய்யா… அதுகளுக்குப் புடிச்சத செஞ்சுட்டுப் போகட்டும். அதுக்காக அம்புட்டுத் தொலவுலயா விட்றது...”

“கிட்டத்துல இருந்தா நாமளே தடுத்தாலும் அதுகளுக்கு ஆச வந்துரும்ணே. அதுமில்லாம பகைன்னு வந்துட்டா எதிரிக்கு கண்ண மறச்சுடும். நான் கெடைக்காத ஆத்திரத்துல என் புள்ளைய ஏதாச்சும் செஞ்சுட்டா என்னால தாங்க முடியாது…”

காளியின் வார்த்தைகள் சிதற, மூர்த்தி நிதானித்தார். “மருதக்குள்ள உன்னயும் என்னயும் மீறி உன் மகென் மேல கையவெக்க யாருக்குய்யா துணிச்சல் வரும்? எங்க உன் ராஜாங்கம் இருக்கோ, அங்கதான் உன்னோட இளவரசனும் இருக்கணும். அதான் மரியாத…”

அமைதியாக யோசித்த காளி “சரிண்ணே யோசிச்சு செய்றேன்” என்று முடித்துக் கொண்டான். யாரும் கேட்காமலேயே அறிவு மூன்று டம்ளர்களில் மதுவை ஊற்றி மூர்த்தியிடமும் காளியிடமும் நீட்ட தவிர்க்க முடியாமல் காளி இந்தமுறை குடிக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு பெக்குகள் குடித்த பிறகு, உடலில் புகுந்த புதுவிதமான வெப்பம் காளியைத் தளர்வாக்கியது. சிவந்த கண்களோடு சிரிக்கத் தொடங்கியவனின் கையை மூர்த்தி பற்றினார். “காளி, போதும்யா... நம்மளுக்குள்ள இருந்த பகை, போட்டி, சண்ட எல்லாத்தையும் நாம முடிச்சுக்கலாம். இன்னிக்கி நேத்தா நம்ம பழக்கம்... பழைய மாதிரி ஒண்ணா இருப்போம்” எனக் கேட்க, “மணி, மருதுன்னு எங்கூட இருந்தய்வங்கள எழந்துட்டனேண்ணே...” காளி விரக்தியாகப் பார்த்தான். “பூவாட்டம் இருந்த வேணி இல்ல, இந்தா இந்தப் பயலோட கை போச்சு. கழுவுற கையால தின்னுட்டு இருக்கான். எழப்பு எல்லாருக்கும்தான்யா...” மூர்த்தி பரிதாபமாகச் சொல்ல, காளி தடுமாறினான். அவசரமாக இன்னும் இரண்டு பெக்கைக் குடித்தான். தயக்கம், அச்சம், பதற்றம் எல்லாம் விலகி பதினெட்டு வருடங்களுக்கு முன் அவரை முதன்முறையாகப் பார்த்த உணர்வுக்கு வந்துவிட்டிருந்தான். “சரிண்ணே… நீங்க இம்புட்டுச் சொல்றீங்க நான் கேக்காம இருப்பனா? ஆனா ஒண்ணுண்ணே, கத்தி எடுத்தவன் கத்தியாலதான் செத்தான்னு இருக்கக் கூடாது. யார் கத்தியாலயும் நம்ம சாவு நடந்துறக் கூடாது. எனக்கு அதாண்ணே வேணும்.” தன் மனதிலிருந்ததை காளி நாசுக்காகச் சொல்ல, மதுவால் ஈரமான கையோடு மூர்த்தி அவனிடம் சத்தியம் செய்தார். ‘முனியாண்டிச்சாமி மேல ஆணையாச் சொல்றேன். உன் குடும்பத்துலயும் சரி, என் குடும்பத்துலயும் சரி... யாருக்கும் இனிமே கெட்ட சாவு வராது” என்றபடியே அவனை அணைத்துக்கொண்டார்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism