Published:Updated:

``இங்கிருந்து சென்றுவிடுங்கள்!” - திருட்டைத் தடுக்க முயன்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு நடந்த சோகம்!

பிரேம் குமார் எஸ்.கே.

தன் வீட்டின் அருகே நடந்த திருட்டை கவனித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், அதைத் தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருட வந்த கும்பல், அவரை கொடூரமாகத் தாக்கியது.

முன்னாள் ராணுவ வீரர் கொலை
முன்னாள் ராணுவ வீரர் கொலை ( Representational Image )

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியின் கொடியான் கா பூர்வா என்னும் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு திருடுவதற்காக ஒரு கும்பல் வந்துள்ளது. ஒரு கடையில் தங்களின் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது அக்கும்பல்.

திருட்டு
திருட்டு
Representational Image

அந்தக் கடைக்கு அருகில் வசித்துவந்த ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அமனுல்லாஹ், சத்தம் கேட்டு எழுந்து பார்த்திருக்கிறார். அங்கு ஒரு கும்பல் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பார்த்த அவர், மற்றவர்களின் உதவியை நாடாமல் தனியாக வீட்டுக்கு வெளியே சென்று, `இங்கிருந்து சென்றுவிடுங்கள். இல்லையென்றால், போலீஸ் மற்றும் அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் கொடுப்பேன்’ என எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், 64 வயதான அமனுல்லாஹ்வை கொடூரமாகத் தாக்கியது. மேலும், கட்டி வைத்து தடிகளைக்கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் தலையில் பலத்த காயம்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அதைத் தொடர்ந்து, அந்தக் கும்பல் திருட்டை முடித்துக்கொண்டு கிளம்பியது.

திருட்டு
திருட்டு
Representational Image

இந்தச் சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி தயாராம், ``திருட்டைத் தடுக்கும் முயற்சியில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் மனைவியிடம் விசாரித்தோம். அவர், ''அவர்கள் எங்கள் வீட்டுக்குள் வந்து என் கணவரை இழுத்துச்சென்று தாக்கினர். கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றனர்'’ என்றிருக்கிறார். உடற்கூறாய்வு முடிந்து, அவரின் உடல் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

Vikatan

இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, ``இந்தச் சம்பவம் எனது வீட்டில் நடந்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு ஆளும் பா.ஜ.க அரசு தீர்வு காணுமா அல்லது மூடி மறைக்குமா? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கத் தொடங்கும்போது, மாநில அரசு அதை மூடி மறைக்கும் பணிகளில் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

அமேதி மக்களவைத் தொகுதி, பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. இந்த முறைதான் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை வீழ்த்தி பா.ஜ.க வசம் கொண்டு வந்தார்.