Published:Updated:

கதறிய குழந்தைகள்; மருமகளுக்கு `பைத்திய' பட்டம்! - வீடியோவால் சிக்கிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராமமோகன ராவ் தன் மருமகளைத் தாக்கியதாக வெளியாகும் வீடியோவால் அவரது குடும்பம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

cctv footage
cctv footage

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை மொத்தக் குடும்பமும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்ணை, அடிப்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமமோகன ராவும் அவரது குடும்பமும் என்பது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

cctv
cctv

இந்த வீடியோ ஏப்ரல் மாதம் 20-ம் தேதி எடுக்கப்பட்டது. இரவு 11 மணிக்கு மேல் ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் அவரின் மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் வசிஸ்டா அவரின் மனைவி சிந்து சர்மாவை சோபாவில் தள்ளுகிறார். அவரைத்தொடர்ந்து ராமமோகன ராவும் தன் மருமகளை அடித்துத் துன்புறுத்துகிறார். தொடர்ந்து கடுமையாக அவரிடம் பேசுகிறார்.

`ரூ.11 லட்சம், 75 சவரன்  வரதட்சணை; போதையில் உளறிய மாமா!' - திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு, சிந்து சர்மா வீட்டைவிட்டு வெளியேற நினைத்து கதவின் அருகில் செல்கிறார். ஆனால், அவரை வெளியில் செல்லவிடாமல் மீண்டும் மொத்த குடும்பமும் அவரை இழுத்து ஷோபா மீது தள்ளுகிறது. ராமமோகன ராவ் அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் மகன் வசிஸ்டா தன் மனைவியை சரமாரியாகத் தாக்குகிறார்.

இதற்கிடையில் வெளியிலிருந்து ஒரு பெண் வீட்டுக்குள் நுழைகிறார். மீண்டும் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிந்து சர்மாவின் குழந்தை தன் தாயின் கால்களைக் கட்டியணைத்தபடி அழுகிறது. இதைப் பொருட்படுத்தாமல் நீதிபதி தன் மருமகளைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டே இருக்கிறார். இறுதியில் தந்தையும் மகனும் சேர்ந்து சிந்துவை தரதரவென இழுக்கின்றனர். நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் சிந்துவின் குழந்தைகள் இருவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் நீதிபதி ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் சிந்து சர்மாவுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, வசிஸ்டா தன்னை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்தார் என சிந்து ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வீடியோ வெளியாகியுள்ளது.

ramamohana rao
ramamohana rao

வீடியோவுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை விவரித்த சிந்து, ``அன்றைய தினம் என் கணவர், அவரின் அப்பா, அம்மா என அனைவரும் வரதட்சணை கேட்டு என்னை அடித்துத் துன்புறுத்தினர். இறுதியில் வீட்டில் வேலை செய்பவரும் இணைந்துகொண்டார். அவர்கள் என்னை உடல்ரீதியாகவும் வார்த்தைகளாலும் கடுமையாகத் தாக்கினர். இறுதியில் வலி தாங்க முடியாமல் நான் கீழே விழுந்துவிட்டேன். அங்கிருந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

என்னால் நிற்கவும் முடியவில்லை. ஸ்ட்ரெக்சரில் வைத்துதான் அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றதும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது, உடனடியாக மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என மாமியார் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். ஆனால் அவரின் வார்த்தைகளைக் கேட்காத மருத்துவர்கள் எனக்கு முறையான சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையிலிருந்து என்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன், மறுநாள் என்னைத் தாக்கியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.

 Sindhu Sharma
Sindhu Sharma

இதையடுத்து என் இரு பிள்ளைகளையும் என்னிடம் ஒப்படைக்கும்படி அவர்களின் வீட்டுக்கு முன் தர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால், ஒரு குழந்தையை மட்டுமே என்னிடம் ஒப்படைத்தனர். இன்னொரு குழந்தையைச் சிறை வைத்துள்ளனர். அந்தக் குழந்தையையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சிந்து கொடுத்த புகாரின் மீதான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. தற்போது வசிஸ்டா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வீடியோ ஏப்ரல் மாதமே தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் நேரம் பார்த்து வெளியிடவே காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சிந்து. தான் தாக்கப்பட்டது தொடர்பாக சிந்து பதிவு செய்த வழக்கு நாளை மறுநாள் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Video
Video

ஓய்வு பெற்ற நீதிபதி ராமமோகன ராவ் 2016-ம் ஆண்டு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர், 2017-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அவர் சிறிது காலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.