Published:Updated:

தென்காசி: மது விருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

கொலை செய்யப்பட்ட சிவன்ராஜ்
கொலை செய்யப்பட்ட சிவன்ராஜ்

நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்து நடைபெற்றபோது, ஏற்கெனவே நடந்த கொலைச் சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் வகையில், இளைஞரை அவரின் நண்பரின் உதவியுடன் தனியாக அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகேயுள்ள கடங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் - சேர்மன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில வருடங்களாகவே யார் பெரியவர் என்ற போட்டி நிலவிவந்திருக்கிறது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வன்மத்துடன் சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.

கொலை
கொலை

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், இரு தரப்பினரும் தனித்தனிக் கோஷ்டிகளாகச் சேர்ந்துகொண்டு எதிரணியினரைத் தாக்கிவந்திருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம், முருகேசன் கோஷ்டியைச் சேர்ந்த சமுத்திரக்கனி என்பவரை சேர்மன், தன் கூட்டாளியான சிவன்ராஜ் என்பருடன் சேர்ந்து வெட்டியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பகை நீடித்ததால் ஒருவருக்கொருவர் எதிராளியை வெட்டிக் கொல்வதற்கான சமயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இந்தநிலையில், சமுத்திரக்கனியை வெட்டிய வழக்கில் தொடர்புடைய சிவன்ராஜ் மீது எதிர்க் கோஷ்டியினருக்கு கோபம் இருந்திருக்கிறது.

நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! - உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்

அதனால், அவரின் நண்பர்கள் மூலம், அவரைத் தனியாக அழைத்து வந்து வெட்டிக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி சிவன்ராஜை ஒரு நண்பர் மூலம், மது குடிப்பதற்காக ஊருக்கு வெளியே தனியாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சிவன்ராஜூக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றியிருக்கிறார்கள். அவர் நிலைகொள்ளாமல் இருந்த சமயத்தில், முருகேசன் தன்னுடைய கோஷ்டியைச் சேர்ந்த இன்பராஜா, செல்வகுமார், பாண்டி, செல்வம் ஆகியோருடன் சேர்ந்து சிவன்ராஜை சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

கொலையான சிவன்ராஜ்
கொலையான சிவன்ராஜ்

உயிர் தப்புவதற்காக சிவன்ராஜ் அங்கிருந்து எழுந்து ஓட முயன்றிருக்கிறார். ஆனால், போதையில் இருந்த அவரால் ஓட முடியவில்லை. அதனால், அவரைச் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் கூட்டாளிகளைத் தேடிவருகின்றனர்.

கொலையான சிவன்ராஜ் மீது இரு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரைக் கொலை செய்த கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட முருகேசன் மீது இரு கொலை வழக்குகள் உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சம்பவம் நடந்த கடங்கநேரி கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு