Published:Updated:

திருவிழா தகராறு... பைக் ரேஸ்... பன்றிக்கறி ஏற்றுமதி... பழிக்குப் பழி கொலைகளால் பதறும் திருச்சி!

திருச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி!

மூன்று பழிக்குப் பழியாக நடந்த கொலைகள் என்பதால், கொலைகள் தொடருமா என்று திருச்சி மக்கள் திகிலில் இருக்கிறார்கள்.

திருச்சியில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் மாநகர மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளன. அவற்றிலும் மூன்று பழிக்குப் பழியாக நடந்த கொலைகள் என்பதால், கொலைகள் தொடருமா என்று திருச்சி மக்கள் திகிலில் இருக்கிறார்கள்.
திருவிழா தகராறு... பைக் ரேஸ்... பன்றிக்கறி ஏற்றுமதி... பழிக்குப் பழி கொலைகளால் பதறும் திருச்சி!

சம்பவம் 1

திருச்சி, பாலக்கரை கீழக்கொல்லையைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் கோபி கண்ணன். மே 9-ம் தேதி மாலை, தன் வீட்டின் அருகே தன் நான்கு வயது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த போது, ஆறு பேர் கொண்ட கும்பல் கோபி கண்ணனைச் சுற்றிவளைத்தது. சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் தன் அப்பா துடிதுடிப்பதைப் பார்த்ததும், ‘‘அண்ணே... எங்க அப்பாவை அடிக்கா தீங்கண்ணே... வெட்டாதீங் கண்ணே...’’ என்று அவரின் மகள் கதறியதைக் கொலைகாரக் கும்பல் கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றம், கண்டோன்மென்ட் காவல் நிலையம் என எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் அந்தப் பகுதியில், நான்கு பேர் ஒருவரை அரிவாளால் சாவகாசமாக வெட்டுகிறார்கள். இரண்டு பேர் பைக்கில் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார்கள். வேலை முடிந்ததும், எந்தச் சலனமும் இல்லாமல் கிளம்பிச் செல்கிறார்கள். சிசிடிவி-யில் பதிவான இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கிறது.

கோபி கண்ணன்
கோபி கண்ணன்
திருவிழா தகராறு... பைக் ரேஸ்... பன்றிக்கறி ஏற்றுமதி... பழிக்குப் பழி கொலைகளால் பதறும் திருச்சி!

கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தோம்... ‘‘கடந்த 2018-ம் ஆண்டு கோபி கண்ணன், ஹேமந்த்குமார் ஆகியோருக் கிடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், ஆறு பேர்கொண்ட கும்பல் ஹேமந்த்குமாரை அரியமங்கலம் பகுதியில் வெட்டிச் சாய்த்துள்ளது. இந்தக் கொலையில் கோபி கண்ணன்தான் முதல் குற்றவாளி. அந்த வழக்கு கோபி கண்ணனுக்குச் சாதகமாக மாறும் நிலையிலிருந்ததால், ஹேமந்த்குமாரின் தம்பி பிரிஜேஷ் பிரசாந்த், உள்ளூர் நண்பர்கள் மற்றும் கோவை கூலிப்படை மூலம் கொலை செய்திருக்கிறார்’’ என்றார்கள்.

சம்பவம் 2

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் மணிவாசகம். மே 4-ம் தேதி இரவு ஆலத்தூர் பாலத்தின் அருகே மணிவாசகம் நடந்து சென்றபோது, திடீரென சுற்றி வளைத்த பத்துப் பேர் கொண்ட கும்பல், அவரின் முகம், கால், மார்புப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியும் எந்த பயமுமின்றி வேலையை முடித்துவிட்டு, சில மீட்டர் தூரம் சாவகாசமாக நடந்து சென்றிருக்கிறார்கள்.

திருவிழா தகராறு... பைக் ரேஸ்... பன்றிக்கறி ஏற்றுமதி... பழிக்குப் பழி கொலைகளால் பதறும் திருச்சி!
மணிவாசகம்
மணிவாசகம்
சிலம்பரசன்
சிலம்பரசன்
திருவிழா தகராறு... பைக் ரேஸ்... பன்றிக்கறி ஏற்றுமதி... பழிக்குப் பழி கொலைகளால் பதறும் திருச்சி!

கொலைக்கான காரணம் என்ன? ‘‘மேலகல்கண்டார் பகுதியில் அடிக்கடி பைக் ரேஸ் நடப்பது வழக்கம். ஒருமுறை பைக் ரேஸ் நடக்கு ம்போது மணிவாசகத்துக்கும் ஸ்ரீநாத் என்பவனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்துள்ளது. அதை மனதில் வைத்திருந்த ஸ்ரீநாத், அடிக்கடி மணிவாசகத்திடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளான். ஒருநாள் பிரச்னை பெரிதாக வெடித்தபோது, மணிவாசகம் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், ஸ்ரீநாத்தின் விரலை வெட்டிவிட, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்பு ஸ்ரீநாத்தின் குடும்பத்தாரிடம் மணிவாசகம் மன்னிப்பும் கேட்டான். ஆனாலும், அதை மனதில் வைத்துக்கொண்ட ஸ்ரீநாத், போதைப்பழக்கம் கொண்ட சிறுவர் மற்றும் இளைஞர்களை வைத்துக்கொண்டு, கொடூரமான முறையில் மணிவாசகத்தை கொலை செய்திருக்கிறார்கள்’’ என்றார்கள்.

சம்பவம் 3

மார்ச் 15-ம் தேதி இரவு... திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள புதரில் முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுவும் பழிக்குப் பழியாக நடந்த கொலைதான்.

கொலைக்குப் பின்னணி இதுதான்... ‘‘திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரும், இவரின் தம்பி சேகரும் பன்றிக்கறி ஏற்றுமதி தொழில் செய்துவந்தார்கள். ஏற்றுமதி வருமானத்தைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், இருவரும் பிரிந்து தொழில் செய்துவந்தார்கள். ஆனாலும், தொழில் போட்டி கடுமையாக இருந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி உடல்நலக்குறைவால் இறந்துவிட, அவரின் மனைவி பார்வதியும் மகன் சிலம்பரசனும் தொழிலைத் தொடர்ந்திருக் கிறார்கள். சிலம்பரசன், ரௌடியாகவும் அவதாரம் எடுந்தான்.

திருவிழா தகராறு... பைக் ரேஸ்... பன்றிக்கறி ஏற்றுமதி... பழிக்குப் பழி கொலைகளால் பதறும் திருச்சி!
மார்ட்டின் ஜெயராஜ் - அருண்
மார்ட்டின் ஜெயராஜ் - அருண்

பன்றிக்கறி ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டிப் பறந்த சேகர், அ.தி.மு.க-வில் சேர்ந்து அரசியல்வாதி ஆனார். உள்ளூரில் பணம் வட்டிக்கு விடுவது, கேபிள் டி.வி கான்ட்ராக்ட் என ‘கேபிள்’ சேகராக வளர்ச்சி அடைந்தார். அதேநேரத்தில், பன்றிக்கறி ஏற்றுமதி தொழிலில் சிலம்பரசனுக்கும் ‘கேபிள்’ சேகருக்கும் இடையேயான போட்டி பகையாக வளர்ந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு தன் சித்தப்பா கேபிள் சேகரை வெட்டிக் கொலை செய்தான் சிலம்பரசன். இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீஸார் கைதுசெய்தார்கள். இந்தக் கொலையும் கூலிப்படையால் நிகழ்த்தப்பட்டதுதான்.

கேபிள் சேகரின் கொலைக்குப் பிறகு அவரின் மகன் முத்துக்குமார் தந்தையின் தொழில்களை நடத்திவந்ததோடு, ரௌடியாகவும் வலம்வந்தான். இந்தநிலையில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சிலம்பரசன், மீண்டும் கந்துவட்டி, பன்றிக்கறி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தான். இந்தநிலையில்தான், அவன் தன் வீட்டருகே கொலை செய்யப்பட்டுள்ளான்’’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

இவை தவிர, மார்ச் 27-ம் தேதி ரௌடி பிரவீன்குமார் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது, நகைக்கடை கொள்முதல் மேலாளர் மார்ட்டின் ஜெயராஜ் கொல்லப்பட்டது ஆகியவையும் திருச்சி மக்களைத் திடுக்கிடவைத்திருக்கிறது.

இந்தக் கொலைகள் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ‘‘திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. அதில், பழிக்குப் பழி தீர்க்கும் கொடூரக் கொலைகள் மூன்று; கூலிப்படைகளைக் கொண்டு நடந்தவை இரண்டு. சினிமா ஹீரோ போன்ற கெத்து, தன்னைக் கண்டு மற்றவர்கள் பயந்து செல்வது, கைமேல் காசு என நினைத்தது கிடைக்கும் என்ற ஆசையில், மீசைகூட முளைக்காத சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சின்னச் சின்ன வழக்குகளில் சிறைக்குச் செல்கிறார்கள். அங்கே உள்ள ரௌடிகளின் சகவாசத்தால், பெரிய ரௌடியாக மாற வேண்டும் என நினைத்துக்கொண்டு, அந்த ரௌடிகளுக்காகச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யத் தொடங்குகிறார்கள். இவர்கள்தான் கூலிப்படைகளாகவும் உருமாறுகிறார்கள்.

மக்கள் நடமாடும் சாலையில் எவ்வித பயமும் இன்றி பத்துப் பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டுகிறது என்றால், காவல்துறை மீது பயமில்லை என்றுதானே அர்த்தம்? இதற்கு முன்பு டெல்டாவைக் கலக்கிய தாதாக்களான முட்டை ரவி, பிச்சைமுத்து, மணல்மேடு சங்கர் ஆகிய மூவருக்கும் என்கவுன்ட்டர் மூலம் போலீஸ் முடிவுகட்டிய பிறகு, டெல்டா மாவட்டங்களில் ரௌடியிசம் கட்டுக்குள் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக மீண்டும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் சில தாதாக்கள், அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகி, கட்சியின் பின்னணியில் செயல்படுகிறார்கள். கூலிப்படைகளுக்குத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். கொலை செய்பவர்களை மட்டுமே போலீஸார் கைதுசெய்கிறார்கள். திட்டம் போட்டுக்கொடுக்கும் நபர்களை விட்டுவிடுவதால், அடுத்தடுத்த கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவர்கள் யாரென்று கண்டுபிடித்து, அவர்களையும் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்த்தால் மட்டுமே, தொடர் கொலைகளைத் தடுக்க முடியும்’’ என்றார்கள்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருணிடம் பேசினோம். ‘‘நான் இப்போதுதான் பதவியேற்றிருக்கிறேன். இப்படிப்பட்ட கொலைகள் நடப்பதை அனுமதிக்க மாட்டேன். ரௌடிகளுடன் தொடர்பில் இருப்பது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது உறுதி’’ என்றார்.

கீழ்மட்டத்தில் ரௌடிகளுடன் தொடர் பிலுள்ள அதிகாரிகளைக் களையெடுத்தால் மட்டுமே ரெளடியிசத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.