Published:Updated:

நிஜமாகிப்போன `விரைவில்' போஸ்டர் முதல் திண்டுக்கல் இரட்டைப் படுகொலை வரை! - கொலைகள் 2021 Rewind

2021 Rewind
News
2021 Rewind

இந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சில கொலைச் சம்பவங்களின் தொகுப்பு..!

திருவள்ளூர் கல்லூரி மாணவன் கொலை!

கும்மிடிப்பூண்டி அருகிலிருக்கும் பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு பகுதியில் டிசம்பர் 18-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற கல்லூரி மாணவரின் சடலத்தை ஆரம்பாக்கம் போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அவர்கள் நடத்திய விசாரணையில், பிரேம்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேம்குமாரைக் கொலை செய்த வழக்கில் அசோக், லெவின், ஞானசேகர் ஆகிய மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். கொலைசெய்யப்பட்ட கல்லூரி மாணவன் பிரேம்குமாருக்கும், தாம்பரம் அருகிலிருக்கும் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இரண்டு மாணவிகளும் பிரேம்குமாரும் போனில் ஆபாசமாகப் பேசிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட பிரேம்குமார்
கொலைசெய்யப்பட்ட பிரேம்குமார்

அந்த உரையாடலைப் பதிவு செய்த பிரேம்குமார், அதைவைத்து மாணவிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் சமூக வலைதளம் மூலம் மாணவிகளுக்கு அறிமுகமான அசோக் என்ற இளைஞரிடம் அந்த மாணவிகள் உதவி கேட்டிருக்கின்றனர். உடனே பிரேம்குமாரை கண்டிப்பதாக அசோக் கூறியிருக்கிறார். இதையடுத்து எளாவூர் சோதனைச்சாவடிக்கு பிரேம்குமாரை வரவழைக்க மாணவிகள் மூலம் அசோக் திட்டமிட்டார். சம்பவத்தன்று எளாவூர் சோதனைச்சாவடி பகுதியில் தனியாக நிற்பதாக இரண்டு மாணவிகளும் போன் மூலம் பிரேம்குமாரிடம் கூறியிருக்கின்றனர். அப்போது தங்களை அழைத்துச் செல்லும்படி பிரேம்குமாரிடம் மாணவிகள் தெரிவித்திருக்கின்றனர். அதை உண்மையென நம்பிய பிரேம்குமார் பைக்கில் எளாவூர் சோதனைச்சாவடிக்கு வந்திருக்கிறார். அங்கு அசோக், அவரின் நண்பர்களுடன் காத்திருந்து , பிரேம்குமாருடன் தகராறில் ஈடுபட்டார். அசோக்கும் அவர் நண்பர்களும் கஞ்சா போதையில் பிரேம்குமாரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து, ஏரிக்கரைப் பகுதியில் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சியில் நிஜமாகிப்போன, 'விரைவில்' போஸ்டர்!

செப்டம்பர் 15-ம் தேதி மாலை, திருச்சி பொன்மலைப்பட்டி டாஸ்மாக்கிலிருந்து மது வாங்கிவிட்டு வெளியே வந்த சின்ராஜ் என்ற 22 வயது இளைஞர் மர்மக் கும்பல் ஒன்றால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். விசாரணையில் கொலைக்கு முன்பகையே காரணம் என்று தெரியவந்தது . சின்ராஜின் இறப்பைத் தாங்க முடியாத அவருடைய நண்பர்கள், சின்ராஜின் இறப்புக்கு அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் மரணமடைந்த சின்ராஜின் இறுதி ஊர்வலம் குறித்த தகவல்களுடன் `விரைவில்...’ என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருந்தது. இது பழிவாங்கும் நோக்குடன் அச்சடிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் போஸ்டர் அடித்த ஐந்து பேரைக் காவலர்கள் விசாரித்தனர்.

சர்ச்சையைக் கிளப்பிய 
`விரைவில்’ போஸ்டர்
சர்ச்சையைக் கிளப்பிய `விரைவில்’ போஸ்டர்

இந்த நிலையில், போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததைப்போலவே சின்ராஜின் இறப்புக்குப் பழிவாங்கும் வகையில், கடந்த டிசம்பர் 12-ம் தேதி இரவு, சுமார் 8:30 மணியளவில் பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் ஏ.கே.அவென்யூ பகுதியில் வைத்து சின்ராஜைக் கொலை செய்த அலெக்ஸின் தம்பி பெலிக்ஸை, 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. சின்ராஜைக் கொலை செய்த வழக்கில் அலெக்ஸ் திருச்சி மத்தியச் சிறையிலிருக்கும் நிலையில், அவரைப் பழிவாங்குவதற்காக அவர் தம்பி பெலிக்ஸை வெட்டிக் கொலை செய்தனர் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளி மாணவி எரித்துக் கொலை!

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், பாச்சலூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் 5-ம் வகுப்பு படிக்கும் மகள் 14 டிசம்பர் அன்று உயிரிழந்தார். காலை 11 மணியளவில் வகுப்பறையைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வகுப்பறைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து பள்ளி அருகே புதர்ப் பகுதியில் சிறுமி பாதி உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்திருக்கிறார். அதைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக அந்தச் சிறுமியின் பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

 எரிக்கப்பட்ட இடம்
எரிக்கப்பட்ட இடம்

அதையடுத்து, சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதைச் சந்தேக மரணமாகக் காவலர்கள் பதிவுசெய்து , விசாரணை நடத்தினர். இதற்குப் பின் உள்ள உண்மை என்ன என்று விசாரித்துவருகின்றனர்.

தந்தையைக் கொன்ற மகள்!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் சங்கர் (52). குமார் பிளம்பிங் வேலை செய்துவந்தார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பெயர் தீபாவதி (26). கடந்த டிசம்பர் மாதம், 6-ம் தேதி இரவு குமார் வீட்டிலிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்து, பிளாக்கில் மது கிடைக்குமா என்றபடி பேச்சுக்கொடுத்து அவரை ரோட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அதனால், குமார் அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். பதிலுக்கு அந்த நபரும் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் குமாரின் முகம், கழுத்துப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தினார். அதில் ரத்த வெள்ளத்தில் குமார் சரிந்து விழுந்தார்.

தந்தையை கூலிப்படை மூலம் கொலை செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட தீபாவதி
தந்தையை கூலிப்படை மூலம் கொலை செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட தீபாவதி

அதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த வழக்கை போலீஸார் விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இறந்த குமார் சங்கரின் மூத்த மகள் தீபாவதிக்கு கோபு என்ற மாணவருடன் தொடர்பு இருப்பதாகவும் , இதைக் கண்டித்த காரணத்தால் தந்தையைத் திட்டமிட்டே கொலை செய்ததாகவும் தெரியவந்தது. கோபு தனக்குத் தெரிந்த ஸ்ரீமுகுந்தன் என்பவரிடம் 60,000 ரூபாய்க்கு தீபாவதி தந்தையைக் கொல்லச் சொன்னதாகத் தெரிகிறது. ஆண் நண்பரிடம் பேசத் தடையாக இருந்த தந்தையை, பெற்ற மகளே கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் படுகொலை!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் நடேச தமிழார்வன் நவம்பர் 10, மாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஐந்து பேரைக் கைதுசெய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் பகுதியின் ஒன்றியச் செயலாளராகவும், திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துவந்தார் நடேச தமிழார்வன். நீடாமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்குத் தனது காரில் வந்து இறங்கியிருக்கிறார்.

நடேச தமிழார்வன்
நடேச தமிழார்வன்

அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள், அரிவாளால் நடேச தமிழார்வனைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிக்கிறார்கள். நவம்பர் 11, காலை 7 மணியளவில் நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜ்குமார், மாதவன், மனோஜ், சேனா என்கிற சேனாதிபதி, எழிலரசன் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்தனர். நீடாமங்கலம் அக்ரஹார பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும், நடேச தமிழார்வனுக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று விசாரணையில் தெரியவந்தது.

மகளைக் கொன்ற தந்தை!

சென்னை வில்லிவாக்கம், தாமோதர பெருமாள் காலனியைச் சேர்ந்தவர் லாவண்யா (28). இவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் 30.10.2021 அன்று, தான் வீட்டில் இல்லாத நேரத்தில், மகள் வதனஸ்ரீயை, அவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் கொன்றுவிட்டதாகப் புகாரளித்தார் . இது குறித்து விசாரித்த போலீஸார், ராதாகிருஷ்ணனும் லாவண்யாவும் தகராறால் எக்கெனவே பிரிந்து வாழ்ந்தனர் என்றும், குழந்தைகளை ஒற்றைத் தாயாக லாவண்யா வளர்த்துவந்ததும் தெரியவந்தது. லாவண்யா வேலைக்குச் சென்ற நேரத்தில், அவள் நடத்தையில் சந்தேகப்படும் ராதாகிருஷ்ணன், வீட்டிலிருந்த 4-வது வகுப்பு படிக்கும் வதனஸ்ரீயிடம் தன் மனைவி குறித்துக் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.

கொலை வழக்கில் கைதான ராதாகிருஷ்ணன்
கொலை வழக்கில் கைதான ராதாகிருஷ்ணன்

அந்த கேள்விகளுக்குப் பதில் கூற மறுத்ததால் சிறுமியின் மார்பு, வயிறு, கழுத்து எனக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். அப்போது அவரின் மனவளர்ச்சி குன்றிய மகன், டி.வி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். இதையடுத்து மகனை, லாவண்யாவின் தங்கை சரண்யாவின் வீட்டில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். அதன் பிறகுதான் அவரைக் கைதுசெய்து, கொலை செய்த கத்தியையும் பறிமுதல் செய்தனர் காவல்துறையினர் .

ஒரே நாளில் இரட்டைப் படுகொலை சம்பவங்கள்!

திண்டுக்கல்லில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் பல்வேறு கொலை, கொலை முயற்சி குற்றங்கள் நடந்தேறின. குறிப்பாக, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர், தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர் நிர்மலா (70). 22-ம் தேதி காலை செட்டிநாயக்கன்பட்டி அருகே நான்கு பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் நிர்மலா சரிய, அவரின் தலையைத் தனியாக வெட்டி எடுத்துச் சென்று நந்தவனப்பட்டியில் வீசிவிட்டுச் சென்றனர்.

நிர்மலா கொலை செய்யப்பட்ட இடம்
நிர்மலா கொலை செய்யப்பட்ட இடம்

அனுமந்தராயன் கோட்டை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்துவருபவர் ஸ்டீபன். இவர் அந்த தினத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தார். அந்த இடத்துக்கு வந்த மர்மக் கும்பல், அவரை அரிவாளால் வெட்டியது. பின்னர் ஸ்டீபனின் தலையை வெட்டிய அந்தக் கும்பல் சிறிது தூரம் தள்ளி வீசிவிட்டுச் சென்றது. ஸ்டிபன் மீது பாலியல் தொழில் செய்தது உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையிலிருந்தன. அந்தப் பகுதியில் போலி மதுபானம் விற்பது தொடர்பாக எழுந்த சண்டையில் இந்தக் கொலைச் சம்பவம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஆறு பேரைக் கைதுசெய்தது காவல் துறை. தொடர் கொலைச் சம்பவங்கள் காரணமாக, திண்டுக்கல் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்தனர்.

புதுச்சேரியை உலுக்கிய இரட்டைக் கொலை!

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரெளடி `பாம்’ ரவி. இவர்மீது ஏற்கெனவே 36 வழக்குகள் நிலுவையிலிருந்த நிலையில் , சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். புதுச்சேரியில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம், மாலை 3:30 மணியளவில் அந்தோணி (எ) பரேட் உள்ளிட்ட தன் இரு நண்பர்களுடன் அலேன் வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் `பாம்’ ரவி. அப்போது திடீரென அவர்களை வழிமறித்த ஐந்து பேர்கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம் ரவியின் தலையைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால், அது அந்தோணியின் தலையில் விழுந்ததால் அவர் படுகாயங்களுடன் கீழே விழுந்தார்.

பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ்
பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ்

ரவியைக் குறிவைத்துத் தாக்க, அவரும் நிலைதடுமாறி விழுந்தார். பின்னர், அந்தக் கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டியதில் உயிரிழந்தார். படுகாயங்களுடன் இருந்த அந்தோணியும் உயிரிழந்தார். ஒட்டுமொத்த புதுச்சேரியையும் உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மற்றொரு வழக்கில் கைதாகி, காலாப்பட்டு மத்தியச் சிறையில் இருக்கும் வினோத், தீனு என்ற தீனதயாளன் இருவரும் சிறையிலிருந்தே கூலிப்படைவைத்து இந்த இரட்டைக் கொலையை நடத்தியிருப்பது தெரியவந்தது. அவர்கள்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கூலிப்படையினர் தங்குவதற்காக இடம் கொடுத்த வினோத்தின் அம்மா உட்பட ஒன்பது பேரைக் கைதுசெய்தனர்.

வெட்டிக் கொல்லப்பட்ட பார் உரிமையாளர்!

நெல்லை மயிலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (54). இவர் திருப்பணிக்கரிசல்குளம் பகுதியில் பார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவரின் உறவினர் முருகன் ஆடு வளர்த்து வருகிறார். கடந்த மே மாதம் முருகனின் ஆடுகள் காணாமல் போக, அவருடன் சென்ற கணேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாகத் தகவல் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அவர்களை அழைத்து விசாரித்தனர் காவல்துறையினர். இதனால் கலக்கம் அடைந்த அந்த தரப்பினர் முருகன் மற்றும் கணேசனிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கணேசன் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கும்பல், கணேசன் பாரில் தனியாக இருந்த சமயத்தில் உள்ளே சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிடு தப்பித்துச் சென்றது. கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கொல்லப்பட்ட பார் உரிமையாளர்
கொல்லப்பட்ட பார் உரிமையாளர்

மனைவியுடன் நட்பு, கணவர் கொலை!

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள முருகாத்தம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் ராமு (32). இவருக்கு ரேணுகா (31) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் ராமு வேலைபார்த்து வந்துள்ளார். வேலைக்குச் சென்ற இடத்தில் மகா என்ற பெண்ணுடன் ராமுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ரேணுகா கண்டித்தும் ராமு கேட்காமல் தொடர்ந்து பழகிவந்துள்ளார். இந்த சூழலில்தான் மகாவுக்கு, தினேஷ்(21) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தெரிந்துகொண்ட ராமு மகாவைக் கண்டித்துள்ளார். தினேஷ் ராமுவை கொலை செய்யத்திட்டமிட்டார். கடந்த 4.7.2021-ம் தேதி ராமுவை மது அருந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுடன் மகாவின் கணவர் மணியும் சேர்ந்துள்ளார். போதை அதிகமான ராமுவை நண்பர்களின் உதவியோடு கொலை செய்து கிணற்றில் வீசினார் தினேஷ். ரேணுகா கணவரைக் காணவில்லை என்று மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், மகாவின் கணவரை விசாரித்தனர். அப்போது தான் ராமுவை கொலை செய்தது தினேஷ் என்று தெரியவந்துள்ளது. பின்னர் மணி, தினேஷ் உட்பட ஆறு பேரைக் கைதுசெய்தது காவல்துறை.

மனைவி மீது சந்தேகம்; ஆத்திரத்தில் நடந்த கொலை!

சென்னையை அடுத்த கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம், பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் ஆலோன் (51). இவருக்கு லட்சுமி(45) என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் தனித் தனியாக வசித்து வருகிறார்கள். ஆலோன் தண்ணீர் கேன் போடும் வேலையும், லட்சுமி பூ வியாபாரமும் செய்து வந்தனர். ஏப்ரல் 27-ம் தேதி கோயம்பேடு காவல்நிலையம் சென்ற ஆலோன், தன் மனைவி பாலியல் தொழில் செய்துவந்தார். எவ்வளவு கண்டித்தும் கேட்கவில்லை. அதனால், தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டேன் என்று மதுபோதையில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் காவல்துறையினர். வழக்கை விசாரித்தபோது, கடந்த 20 ஆண்டுகளாக மனைவிமீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார் ஆலோன். சம்பவம் நடந்த அன்றும் சண்டை அதிகரிக்க ஆத்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலைமீது அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

ஆலோன்
ஆலோன்

கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டி!

கோவை, துடியலூர் பன்னீர்மடைப் பகுதியில் 71 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணமான நிலையில், மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கொலை செய்து வீட்டிலிருந்த நகை செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். விசாரணையில் புதுக்கோட்டைச் சேர்ந்த வினோத் என்ற கருப்பையா (25) தான் இந்த குற்றத்தைச் செய்ததாகத் தகவல் கிடைத்தது. தலைமறைவாக இருந்த வினோத்தைத் தனிப்படை வைத்துத் தேடிப் பிடித்தனர் காவல்துறையினர். முதலில் திருட்டு மற்றும் கொலைக் குற்றம் என்று கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. விசாரணையில் வினோத் மூதாட்டி தனியாக இருப்பதாய் தெரிந்துகொண்டு திருடியதும், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை.

பழிக்குப் பழி - ரவுடி கொடூர கொலை!

சென்னை அசோக் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார், ஜஸ்டினுக்கு 10 லட்சம் ரூபாய்க் கடனாகக் கொடுத்திருந்தார். கொடுத்த பணத்தை வாங்க சிவக்குமார் மார்ச் 4-ம் தேதி அசோக் நகருக்குச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கொலை குறித்த காரணத்தை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிவக்குமார் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சென்னை மாநகர காவல்துறையின் ரௌடிகள் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவிலிருந்துள்ளார் சிவக்குமார். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த சிவகுமார், கொலை செய்யப்பட்ட சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளியில் வந்த சில தினங்களிலேயே சிவக்குமார் மீது கொலை முயற்சி நடந்துள்ளது. அவருக்கும் எதிர்க்கோஷ்டிக்கும் நீண்ட நாள்களாக இருந்த விரோதத்தின் காரணமாகப் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது.

சிவக்குமார்
சிவக்குமார்

மனைவி கழுத்தை அறுத்து, கார் ஏற்றிக் கொலை செய்த கணவர்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் முரஹரி. இவரின் மகள் கீர்த்தனா (35). இவருக்கும் கோவையைச் சேர்ந்த மருத்துவர் கோகுல் குமாருக்கும் திருமணம் ஆனது. இந்த தம்பதியினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவரைப் பிரிந்து பெற்றோர்களுடன் வசிக்கத் தொடங்கினார் கீர்த்தனா. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சமாதானம் பேச சென்ற கோகுல் குமார், பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்து வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவின் கழுத்தில் வெட்டினர்.

சடலமாக கீர்த்தனா
சடலமாக கீர்த்தனா

அவரின் சத்தம் கேட்டு வந்த கீர்த்தனாவின் பெற்றோர்களையும் கத்தியால் தாக்கினார் கோகுல். பின்னர் கீர்த்தனாவின் முடியைப் பிடித்து தெருவுக்கு இழுத்து வந்த கோகுல் காரை ஏற்றிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார். சம்பவம் அறிந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் கீர்த்தனாவின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த அவரின் பெற்றோரைச் சிகிச்சைக்காகவும் அனுமதித்தனர். காரில் தப்பிச் சென்ற கோகுலின் கார் அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே விபத்தில் சிக்க அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை விரைந்த மதுராந்தகம் காவல்துறையினர் கோகுலைக் கைது செய்தனர்.

காதலியின் ஆசைக்காகக் கொலை செய்த காதலன்!

சென்னை செங்குன்றம் பகுதியில் ரைஸ்மில் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒடிசாவைச் சேர்ந்த கிருஷ்ணா (23) என்பவர் கடந்த ஜனவரி 13-ம் தேதி கொலை செய்யப்பட்டதாக, ரைஸ்மில் காவலாளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது செங்குன்றம் காவல்துறை. விசாரணையில் ஒடிசாவைச் சேர்ந்த பன்விமால் என்கிற ராகுல் (25) மற்றும் அவரின் 16 வயது காதலிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவுக்கும், சிறுமிக்கும் தொடர்பு இருந்ததாகவும் அதனால் ராகுல் கிருஷ்ணாவைக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தொடர் விசாரணையில், சம்பவம் நடந்த அன்று இரவு 10.30 மணியளவில், ராகுல் இல்லாத நேரத்தில் கிருஷ்ணா அந்த சிறுமியை ஊருக்குச் செல்லும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த சிறுமி அதை கேட்கவில்லை. அதனால் கோபத்தில் கிருஷ்ணா அந்த சிறுமியை அடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ராகுல் வந்ததும் அழுதுகொண்டே நடந்ததைக் கூறியுள்ளார் சிறுமி. மேலும், கிருஷ்ணாவைக் கொலை செய் அதுவே என் ஆசை என்றும் தெரிவித்துள்ளார். காதலியின் ஆசையை நிறைவேற்ற ராகுலும், கிருஷ்ணாவைக் கொலை செய்துவிட்டு இருவருமாகத் தப்பித்துச் சென்றுவிட்டனர். தப்பியவர்களைக் கைதுசெய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராகுலைச் சிறையிலும், சிறுமியை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் சேர்த்தனர்.

ஏரல் காவல் நிலையம் | எஸ்.ஐ பாலு
ஏரல் காவல் நிலையம் | எஸ்.ஐ பாலு

லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பாலு என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஜனவரி 31-ம் தேதி, காவலர் பொன்சுப்பையாவுடன் இணைந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாழவள்ளானைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக்கான முருகவேல் மதுபோதையில் அங்கிருந்த உணவகத்தில் தகராறில் ஈடுபட்டார். அவரை எஸ்.ஐ பாலு கண்டித்ததுடன், அவர் ஓட்டிவந்த மினிலாரியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றார். காவல்நிலையம் வந்து தனது வாகனத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு எஸ்.ஐ பாலு, போதையில் இருப்பதால் காலையில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்லி அனுப்பியிருக்கிறார். அன்று இரவு நேரத்தில், முருகவேல் மீண்டும் வாழவள்ளான் பகுதியில் உள்ள உணவகத்தில் பிரச்னையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த எஸ்.ஐ பாலு கடுமையாகத் திட்டி, வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளனர். கோபத்தில் சென்ற முருகவேல், அங்கிருந்து சென்று தனது நண்பரின் மினிலாரியைப் வாங்கி வந்து எஸ்.ஐ பாலுவை பின் தொடர்ந்துள்ளார். கொற்கை விலக்குப் பகுதியில் அதிவேகமாக வந்து பைக்கில் மோதிவிட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டார். பைக்கில் பின்னர் உட்கார்ந்திருந்த எஸ்.ஐ பாலு உயிரிழந்த நிலையில், காவலர் பொன்சுப்பையா பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் முருகவேல் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.