Published:Updated:

திருடப்பட்ட 687 பவுன்; கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 559 பவுன்! - நகைகள் சிக்கியது எப்படி?

மீட்கப்பட்ட நகைகள்
News
மீட்கப்பட்ட நகைகள்

தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜகுபர் சாதிக்கின் வீட்டுக்கு அருகே இருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து நகைகள் போலீஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (45). இவர் தென் கிழக்கு ஆசிய நாடான புரூனேவில் கடந்த சில வருடங்களாகக் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அங்கு சுமார் 10 இடங்களில் முட்டை விற்பனைக் கடைகளையும், பல்பொருள் அங்காடிகளையும் அவர் நடத்திவருகிறார். கோபாலப்பட்டினம் நடுத்தெருவில் இவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்துவரும், ஜகுபர் சாதிக் அவ்வப்போது, சொந்த ஊருக்கும் வந்து சென்றிருக்கிறார்.

கொரோனா பரவல் பிரச்னைக்குப் பிறகு நீண்ட நாள்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் சிலர், கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஜகுபர் சாதிக் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மேல்மாடியில் உள்ள ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்த வளையல், சங்கிலிகள், காசு எனச் சுமார் 687 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர்.

திருட்டு நடைபெற்ற வீடு
திருட்டு நடைபெற்ற வீடு

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த 687 பவுன் நகைகள் காணாமல்போனதாக ஜகுபர் சாதிக்கின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், மீமிசல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மாவட்டக் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரடியாகச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடித்து நகைகளை மீட்க அறந்தாங்கி டி.எஸ்.பி தினேஷ்குமாரின் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ஜகுபர் சாதிக்கின் வீட்டுக்கு அருகே இருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து 559 பவுன் நகைகள் போலீஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றன. புகார் கொடுக்கப்பட்டவரின் தகவல் அடிப்படையில் சுமார் 128 பவுன் நகை காணாமல் போயிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுபற்றி தனிப்படை போலீஸாரிடம் கேட்டபோது, ``வீட்டுக்கு அருகிலேயேதான் இந்தக் கிணறு இருக்கிறது. வழக்கமாக நடக்கும் க்ரைம்களில் குற்றவாளிகள் ஏதாவது ஒரு தடயத்தை இது போன்ற கிணறுகள் உள்ளிட்டவற்றில் விட்டுச் செல்வார்கள். அந்த வகையில் இந்தப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கிணறுகள் உள்ளிட்ட காலி இடங்களையும் ஆய்வு செய்தோம். அப்படி ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் இந்தக் கிணற்றைச் சோதனை செய்தோம்.

தற்போது பெய்த மழையால் தேங்கியிருந்த மழைநீரை மோட்டார்வைத்து அகற்றிவிட்டு உள்ளே இறங்கிப் பார்த்தபோதுதான், கிணற்றுக்குள் திருட்டுப்போன நகைகள் கிடைப்பது தெரியவந்தது. திருடிய நகைகளை மொத்தமாகக் கட்டி, கிணற்றுக்குள் மேலிருந்தே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அனைத்து நகைகளையும் மீட்டிருக்கிறோம்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

இது சம்பந்தமாக குற்றவாளிகள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. தடயங்கள் சிலவற்றைச் சேகரித்து விசாரணை நடத்திவருகிறோம். உறவினர்கள் உள்ளிட்ட பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். விரைவிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்" என்றார்.

இது பற்றி அவரின் உறவினர்களிடம் கேட்டபோது, ``பூர்வீகமாகவே ரொம்ப வசதியான குடும்பம். புதுப்பணக்கார வீடு என்றுதான் இந்தக் குடும்பத்தை அழைப்பார்கள். ஜகுபர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், இன்னும் கொஞ்சம் வசதி பெருகியிருக்கிறது. வெளி நாட்டில் இருந்தாலும், பள்ளிவாசல் கட்டுவதற்கு, ஊர் பொதுக்காரியங்களுக்கு, இல்லாதவர்களுக்கு உதவுவது எனத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்வார். குறிப்பாக, காணாமல்போன நகைகளில் பெரும்பாலும், பூர்வீக நகைகள்தான். எனவே, திரும்பக் கிடைத்ததில் எங்க எல்லாருக்குமே ரொம்ப மகிழ்ச்சி" என்றனர்.