அரசியல்
அலசல்
Published:Updated:

நாடு முழுவதும் கைவரிசை காட்டிய ‘பல்லப்கார்’ நகர் கொள்ளையர்கள்

கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
News
கொள்ளை

லாக்கர் பிரேக்கிங் முதல் ஏ.டி.எம் கொள்ளை வரை...

‘‘எதைக் கொள்ளையடிக்கணும்? எல்லாத்துக்குமே எங்க கிராமத்துல ஆள் இருக்கு. லாக்கர் பிரேக்கிங் முதல் ஏ.டி.எம் கொள்ளை வரை தனித்தனியாக டீம் இருக்குது!’’ - ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த அமீர் அர்ஷ் போலீஸில் கொடுத்த அதிரடி வாக்குமூலம் இது!

எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில், லட்சக்கணக்கில் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மட்டும் 14 இடங்களில் இந்த நூதன கொள்ளைகள் நடந்திருக்கின்றன. இதில் ஈடுபட்ட ஹரியானா மாநிலம், பல்லப்கார் நகரைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவனை சென்னை போலீஸார் கைதுசெய்ததை அடுத்து, இந்தக் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமீர் அர்ஷ்
அமீர் அர்ஷ்

ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், இந்தக் கொள்ளையர்களின் திருட்டு டெக்னிக்கை நம்மிடம் விவரித்தார். ``சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில், ஜூன் மாதம் 15 முதல் 18-ம் தேதி வரை 14 இடங்களில் ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தி டெபாசிட் இயந்திரங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் நூதன முறையில் பணத்தை எடுத்திருக்கிறது. கார்டைச் சொருகி தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். பணம் வெளியே வரும்போது இந்த இயந்திரங்களிலுள்ள சென்சாரையும் ஷட்டரையும் ஒரே நேரத்தில் விரல்களால் தடுத்து, பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சென்சார் பாஸ் ஆகாததால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிலுள்ள பணம் எடுக்கப்பட்டதாக சிக்னல் செல்லாது. இதனால், அந்த வங்கிக் கணக்குக்கு மீண்டும் அதே தொகை டெபாசிட் ஆகிவிடும். இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி, மூன்று நாள்களில் 190 முறை பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், எஸ்.பி.ஐ வங்கிக்கு 70 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பது எங்களது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க, சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது. முதலில் ஏ.டி.எம் மையங்களிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சென்னை, ராயலா நகர் பகுதியிலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தின் முன்பு ஹெல்மெட் அணிந்தபடி ஒருவனும், முகம் தெரியும்படி இன்னொருவனும் நின்றுகொண்டிருந்தார்கள். முகம் தெரியும் நபர், செல்போனில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், அந்தப் பகுதியிலுள்ள செல்போன் டவர் மூலம் சிக்னலை ஆய்வு செய்தோம். அது டெல்லியைக் காட்டியது. தொடர்ந்து அந்த செல்போன் சிக்னலை ஃபாலோ செய்தபோது, சம்பந்தப்பட்ட நபர் ஹரியானா மாநிலம், பல்லப்கார் நகரில் இருப்பது தெரிந்தது. உடனடியாக தி.நகர் துணை கமிஷனர் ஹரிகரன் பிரசாத் தலைமையில் ஒரு டீம், ஹரியானாவுக்கு விமானத்தில் சென்றது.

அங்கு எங்கள் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஹரியானா மாநிலம், பல்லப்கார் நகரில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில குழுவினர் என்பதும், அவர்களுக்குக் குற்றச் செயலில் ஈடுபடுவதுதான் முழுநேரத் தொழில் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வசித்துவருகிறார்கள். இவர்கள் நம்பர் லாக்கர் உள்ளிட்ட லாக்கர்களை உடைப்பது தொடங்கி ஏ.டி.எம் கொள்ளை வரை ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. இவர்கள் கூட்டமாக வசிக்கும் கிராமங்களுக்கு உள்ளூர் போலீஸார் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. கிராமத்தைவிட்டு வெளியில் வரும்போதுதான், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியும்.

நாடு முழுவதும் கைவரிசை காட்டிய ‘பல்லப்கார்’ நகர் கொள்ளையர்கள்

சென்னை ஏ.டி.எம்-மில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு விமானம் மற்றும் ரயில் மூலம் டீம் டீமாகப் பிரிந்து அவர்கள் ஹரியானா, ராஜஸ்தானுக்குச் சென்ற தகவல் கிடைத்ததும், விமானம் மூலம் அங்கு போலீஸார் சென்றார்கள். அப்போதுதான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ் ஹரியானாவில் சிக்கினான். அவனிடம் 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அமீர் அர்ஷிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. தமிழகத்தில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடிக்க ஐந்துக்கும் மேற்பட்ட டீம்கள் வந்துள்ளன. ராயப்பேட்டையில் அறை எடுத்துத் தங்கியவர்கள் சென்னையில் வடபழனி, விருகம்பாக்கம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களிலுள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் கைவரிசையைக் காட்டிவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார்கள்... இன்னும் மூன்று பேர் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார்கள். விரைவில் மொத்தக் கொள்ளையர்களையும் பிடித்துவிடுவோம்’’ என்றார் நம்பிக்கையாக.

விசாரணை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘அமீர் அர்ஷுக்கு சென்சார் மூலம் பணத்தைக் கொள்ளையடிக்கும் டெக்னிக்கை அந்தக் கூட்டத்தின் தலைவனாக இருக்கும் ஒருவன்தான் கற்றுக் கொடுத்திருக்கிறான். கொள்ளையடிப்பதற்காகவே சொந்த ஊர்களிலிருந்து டூர் போலக் கிளம்பும் இந்தக் கும்பல், தங்கள் பாதுகாப்புக்காகத் துப்பாக்கிகளையும் கொண்டுவருவார்கள். ஒருமுறை கொள்ளைக்குச் செல்பவர்கள் பல லட்சங்கள், கோடிகளோடுதான் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். கொள்ளையடித்த பணத்தை ஆடம்பரமாகச் செலவழிப்பவர்கள், பணம் காலியானதும் அடுத்த டூருக்குக் கிளம்புவார்கள். இந்தக் கும்பலில் படிக்காதவர்களும் இருக்கிறார்கள்; கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் படித்த பட்டதாரிகளும் இருக்கிறார்கள். பட்டதாரிகள்தான், கொள்ளையடிக்கும் டெக்னிக்கைக் கற்றுக் கொடுப்பார்கள்’’ என்றார்கள்.

எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட மாடல் டெபாசிட் இயந்திரங்களில் மட்டுமே இந்தக் நூதன கொள்ளை நடந்திருக்கிறது என்கிறார்கள் போலீஸார். யாரும் யூகிக்க முடியாத வகையில் தொழில்நுட்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார்கள். வங்கிகள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!