Published:Updated:

`வீட்டைப் பூட்டிட்டுப் போங்க; ஆனால்...!' - திருடன் வைத்த கோரிக்கையால் அதிர்ந்த வீட்டு உரிமையாளர்

கலிலுல்லா.ச

திருடியது மட்டுமல்லாமல் அந்த உரிமையாளரிடம் சொல்ல அவரிடம் சில கோரிக்கைகளும் இருந்தன.

திருடன்
திருடன்

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் `மொட்ட’ ஜோஸ். இவர், பூஞ்சிரக்குளம் பகுதியில் உள்ள`அனுக்ரஹா’ என்ற வீட்டை உடைத்து, 50 சவரன் நகை மற்றும் 50,000 பணத்தை திருடியுள்ளார். அவர் சுவர் ஏறிக் குதிக்கும்போது, அங்கிருக்கும் இளைஞர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட காவல்துறையினர் முன்பகுதி கேட் வழியாக உள்ளே நுழைந்து விசாரணை நடத்தினர். ஆனால், ஜோஸ் பின்பகுதி வழியாக சுவர் ஏறிக் குதித்துச் தப்பிச்சென்றுள்ளார்.

மொட்ட ஜோஸ்
மொட்ட ஜோஸ்
mathrubhumi

காவல்துறையினரும், அக்கப்பக்கத்தினரும் அவரைத் துரத்தியும் பிடிக்கமுடியவில்லை. திருட்டை வைத்து, அது `மொட்ட' ஜோஸ்தான் என்பதை காவல்துறையினர் அடையாளம் கண்டுகொண்டனர். பின்னர் இரவு முழுவதும் தேடியும் ஜோஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த வீடு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஸ்ரீகுமார் என்பவருடையது என்று தெரியவந்தது. ஸ்ரீகுமார் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.

காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, மதுபாட்டில்கள், உணவுக் கழிவுகள், சிறுநீர் என அறை முழுவதும் அசுத்தமாகக் காட்சியளித்துள்ளது. `நிச்சயமாக ஒரு வாரமாவது ஜோஸ் வீட்டுக்குள் தங்கியிருந்திருக்கலாம்’ என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். தகவலறிந்து வந்த ஸ்ரீகுமார், திங்கட்கிழமை அன்று, வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உரிமையாளருக்குச் சொல்ல தன் கோரிக்கை ஒன்றை `ஜோஸ்’ வீட்டின் சுவரில் ஒட்டியிருந்தார். ``நகை மற்றும் பணத்தை வீட்டுக்குள் வைத்திருங்கள். அப்போது தான் அடுத்த முறை வரும்போது எடுத்துச்செல்வதற்கு உபயோகமாக இருக்கும்” என்று எழுதியது மட்டுமல்லாமல், ``வெளியே செல்லும்போது மறக்காமல் வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லுங்கள்’ என்று அக்கறையுடன் கூறியிருப்பதுதான் வேதனை. அங்கிருக்கும் கைரேகைகளைக்கொண்டு ஜோஸ்தான் என்பதை உறுதிசெய்த காவல்துறையினர்,

கைது
கைது

அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் சிலர், ஜோஸைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடமிருந்து 50 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. ஐ.பி.சி 457, 461, 380 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருடன் `மொட்ட’ ஜோஸைப்பற்றி இப்படியும் குறிப்பிடுகின்றனர். அவர் ஒருமுறை ஒரு வீட்டுக்குள் நுழைந்து திருடிவிட்டுச் செல்லும்போது, அங்கிருந்த குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். இதைக்கண்ட ஜோஸ் அவர்களைத் தடுத்து, பண உதவியும் செய்துள்ளார்.