Published:Updated:

100 சவரன் தங்கம்; வைரம் கொள்ளை! -திருவாரூர் முருகனின் வலதுகரமான தினகரன், மனைவியோடு சிக்கியது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருவாரூர் முருகனின் 
 கூட்டாளி தினகரன்
திருவாரூர் முருகனின் கூட்டாளி தினகரன்

சென்னை அண்ணாநகரிலுள்ள டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்த வழக்கில் திருவாரூர் முருகனின் வலதுகரமான தினகரன், அவரின் மனைவி, தினகரனின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகர், 18-வது மெயின் ரோடு, 7-வது தெரு, மேற்கு வள்ளலார் குடியிருப்பில் வசித்துவருபவர் இளங்கோவன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இவர் கடந்த 1-ம் தேதி இரவு வீட்டின் முதல் மாடியில் மனைவி, மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். 2-ம் தேதி காலையில் பால்காரர் சத்தம் கேட்டு கண் விழித்த இளங்கோவன், கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை. உடனடியாக அவர் பால்காரரிடம் விவரத்தைக் கூறினார். அதனால் பால்காரர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இந்தத் தகவலை பால்காரர், இளங்கோவனிடம் கூறினார்.

தினகரனின் உறவினர் லோகேஷ்
தினகரனின் உறவினர் லோகேஷ்

பின்னர், இளங்கோவன், பால்காரர் உதவியோடு அறையிலிருந்து வெளியில் வந்தார். அப்போது மாடியிலும் கீழ்த்தளத்திலும் உள்ள அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன. அறைகளிலிருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 100 சவரன் தங்க நகைகள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருள்கள், 85,000 ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போயிருந்தன. இது குறித்து இளங்கோவன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ஜார்ஜ்மில்லர், சிபுகுமார், எஸ்.ஐ ராஜ்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடிவந்தனர்.

இளங்கோவன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்திருந்ததால் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் எனத் தெரியவந்தது. திருவாரூர் முருகன் இறந்துவிட்ட நிலையில் அவரின் வலதுகரமான தினகரன் தலைமையிலான டீம் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை போலீஸார் சிசிடிவி மூலம் உறுதிப்படுத்தினர். பின்னர் தினகரன், அவரின் கூட்டாளிகளை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தினகரன், அவரின் மனைவி உஷாராணி, மைத்துனர் லோகேஷ், கூட்டாளிகள் சிவக்குமார், மோகன், ராணி என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 2.5 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தினகரனின் மனைவி உஷாராணி
தினகரனின் மனைவி உஷாராணி
`நகைகளை அடகு வைத்த திருவாரூர் முருகன்; மீட்கப்பட்ட ஒரு கிலோ தங்கம்!'- அதிரடி காட்டிய சென்னை போலீஸ்

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``திருவாரூர் முருகனின் வலதுகரமான தினகரன், ஏற்கெனவே அண்ணாநகர் பகுதியில் தொடர்ந்து நடந்த கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். இவர்மீது 17 திருட்டு வழக்குகள் உள்ளன. கொள்ளை வழக்கு ஒன்றில் தினகரனை ஓசூர் போலீஸார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சிறையிலிருந்து தினகரன் வெளியில் வந்திருக்கிறார். அதன் பிறகு மனைவி, மைத்துனர் லோகேஷ் என்பவரோடு தினகரன் சென்னைக்கு வந்திருக்கிறார். டூ வீலரில் அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளை தினகரன், அவரின் மனைவியோடு நோட்டமிட்டிருக்கிறார். அப்போது இளங்கோவனின் வீடு காலையில் பூட்டப்பட்டிருப்பதை தினகரன் கவனித்திருக்கிறார்.

நாள்பட்ட நோய்கள்; ஒருமாத சிகிச்சை! - கொள்ளையன் திருவாரூர் முருகன் உடல்நலக் குறைவால் மரணம்

பின்னர் மாலை நேரத்திலும் கீழ்த்தளத்தில் உள்ள வீடு பூட்டியிருப்பதைப் பார்த்த தினகரன், தன்னுடைய கூட்டாளிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இரவு நேரத்திலும் தினகரன், அந்த வீட்டை நோட்டமிட்டிருக்கிறார். பின்னர் நள்ளிரவில் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். காலை, மாலை, இரவு என மூன்று நேரம் டூ வீலரில் தினகரன் நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்தான் கொள்ளைக் கும்பலை கைதுசெய்திருக்கிறோம். அண்ணாநரில் கொள்ளையடித்துவிட்டு விருகம்பாக்கம் பகுதியில் கடந்த 6-ம் தேதி ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வீட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை இந்தக் கும்பல் கொள்ளையடித்திருக்கிறது. அதனால் போலீஸ் காவலில் எடுத்து தினகரன் உட்பட அவரின் கூட்டாளிகளை விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

திருவாரூர் முருகன் இறந்தாலும், அவரிடம் தொழில் கற்ற தினகரன் தலைமையில் அதே ஸ்டைலில் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு