Published:Updated:

4 ஆண்டுகள்... 50 பெண்கள்... காட்டிக்கொடுத்த சிக்னல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாட்டிக்கொண்ட `மூணு ஆப்ஷன்’ பிச்சைமணி!
மாட்டிக்கொண்ட `மூணு ஆப்ஷன்’ பிச்சைமணி!

மாட்டிக்கொண்ட `மூணு ஆப்ஷன்’ பிச்சைமணி!

பிரீமியம் ஸ்டோரி
‘என் வொயிஃப் மாதவரம் பால்பண்ணைகிட்ட நேத்து நைட் தனியா நடந்து வந்துக்கிட்டிருந்தப்ப, பர்ஸையும் செல்போனையும் ஒரு போலீஸ்காரர் வழிப்பறி பண்ணிட்டார்!’

செப்டம்பர் 16-ம் தேதி, மணலி காவல் நிலையத்தில், ஒரு தனியார் நிறுவன ஊழியர் தன் மனைவியுடன் வந்து இந்தப் புகாரைக் கொடுக்க மொத்த ஸ்டேஷனும் அதிர்ந்துபோனது. ‘ஆமாம்!’ என்று தலையாட்டியபடி, கணவரின் அருகிலேயே அப்பாவியாக நின்றுகொண்டிருந்தார் அவரின் மனைவி.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், துரிதகதியில் அவர்கள் சொன்ன ஏரியாவின் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்திருக்கிறார்கள். ஆனால், அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்ந்தவர்கள், உடனடியாக அது குறித்து இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், மாதவரம் துணை கமிஷனர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். துணை கமிஷனர், அந்தப் பெண் குறித்து விசாரிக்கும்படி ஸ்பெஷல் டீமிலுள்ள எஸ்.ஐ சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

சம்பவத்தின் முதல் புள்ளியிலிருந்து விசாரனையைத் தொடங்கிய எஸ்.ஐ., புகார் கொடுத்த பெண்ணைத் தனியாக அழைத்து விசாரித்திருக்கிறார். திருமணத்துக்கு முன்பிருந்தே வேறொருவருடன் தனக்குப் பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டதோடு, சம்பவத்தன்று நடந்த புதுக்கதையையும் அதாவது, உண்மைக்கதையையும் விவரித்திருக்கிறார். அந்த ‘அப்பாவிப்’ பெண் கொடுத்த அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது ஸ்டேஷனே!

“உங்களுக்கு மூணு ஆப்ஷன் தர்றேன்!”

சம்பவத்தன்று புழல் வெஜிடேரியன் நகரில், ஆள்நடமாட்டம் இல்லாத மைதானம் ஒன்றில், கணவருக்குத் தெரியாமல் இரவில் காதலனைச் சந்தித்திருக்கிறார் அந்தப் பெண். சந்திப்பின் சுவாரஸ்யத்தில் இருந்தவர்களுக்கு, அங்கு வந்து நின்ற ‘யூனிகார்ன்’ பைக்கின் சத்தம் காதில் விழவில்லை.

காக்கிநிற பேன்ட், போலீஸ் அணியும் ஷூ... பார்த்தவுடன் படபடத்திருக்கிறார்கள் இருவரும். “உங்களைப் பார்த்தா புருஷன் பொண்டாட்டி மாதிரி தெரியலை. எனக்குனு ஒரு பாணி இருக்கு... நான் சொல்றபடி கேட்டா, உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. முரண்டு புடிச்சா விபரீதமாகிடும்” என்று மிரட்டியிருக்கிறான் வந்தவன். என்ன செய்வதெனத் தெரியாமல் கைபிசைந்து நின்றவர்களிடம், “உங்களுக்கு மூணு ஆப்ஷன் தர்றேன். ஒண்ணு, உன் ஹஸ்பெண்டுக்கு போன் பண்ணிக் குடு... ரெண்டு, இப்பிடியே என்கூட கிளம்பி ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வாங்க. மூணு, இந்தப் பொண்ணு மட்டும் என்கூட தனியா வரணும். இதுல எந்த ஆப்ஷன் ஓகேனு முடிவு பண்ணிச் சொல்லுங்க” என்று சினிமா பாணியில் கூலாகச் சொல்லியிருக்கிறான். “மன்னிச்சு விட்டுருங்க சார்...” என்று இருவரும் கெஞ்சிக் கதறியிருக்கிறார்கள். எந்த மாற்றமுமில்லை அவனிடம். குரலை மீண்டும் கண்டிப்புடன் உயர்த்தி, “சீக்கிரம் சொல்லுங்க... எந்த ஆப்ஷன்?” என்று கோபமாகக் கேட்க, அந்தப் பெண் மட்டும் அவனுடன் பைக்கில் ஏறிச் சென்றிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்த இருட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பர்ஸையும் செல்போனையும் பிடுங்கிச் சென்றிருக்கிறான் அவன். அழுதபடியே வீடு திரும்பிய அந்தப் பெண், பர்ஸ், செல்போன் பறிக்கப்பட்டதை மட்டும் கணவனிடம் சொல்லியிருக்கிறார்.

4 ஆண்டுகள்... 50 பெண்கள்... காட்டிக்கொடுத்த சிக்னல்...

யார் அந்த போலீஸ்?

‘யார் இது... சினிமா டைப்பில் இப்படி ஒரு கொடூர போலீஸ்?’ என்று ஸ்பெஷல் டீம் விசாரணையில் இறங்கியது. அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் டவரைச் சோதித்தபோது, மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் இருக்கும் ‘புட்டி’ என்ற இடத்தில் ‘லொகேஷன்’ காட்டியிருக்கிறது. போலீஸார் அந்த போனுக்கு அழைக்க, ரிங் போயிருக்கிறது. ஆனால், யாரும் எடுக்கவில்லை. ‘போலீஸ் ஷூ, யூனிகார்ன் பைக்’ என்ற இரண்டு துப்புகளைவைத்து புழல் வெஜிடேரியன் நகர், மாதவரம் பால்பண்ணை புட்டி ஆகிய பகுதிகளின் சிசிடிவி பதிவுகளையும் அலசியது ஸ்பெஷல் டீம். சம்பவத்தன்று அதே பகுதியில், அதே அடையாளங்களுடன் ஒருவர் சென்றது சிசிடிவி பதிவில் தெரியவந்தது. வீடியோ பதிவைப் பார்த்த அந்தப் பெண்ணும் ‘அவரேதான்!’ என உறுதியளித்தார். இதையடுத்து, மாதவரம் காவல் வட்டாரத்தில் பணியாற்றுபவர்களில் யூனிகார்ன் பைக் வைத்திருப்பவர்கள் சந்தேக வளையத்துக்குள் வந்தனர்.

இன்னொருபுறம், ஸ்பெஷல் டீமிலிருந்த காவலர்கள் இரண்டு நாளாக அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் எங்கிருக்கிறதோ அந்தப் பகுதியை நோட்டமிட்டு வந்திருக்கிறார்கள். அவ்வப்போது அந்த எண்ணுக்கு அழைத்தபோது, ரிங் போயிருக்கிறது. ஆனாலும் யாரும் எடுக்கவில்லை. அந்த இடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டாலும், எங்கும் புதர்களாக இருக்கும் அந்தப் பகுதியில் செல்போன் சிக்னல் எங்கிருந்து வருகிறது என்பதைத் துல்லியமாக நெருங்க முடியவில்லை. இதற்கிடையே செல்போனும் ஆஃபாகிவிட்டது.

இரண்டு நாள்கள் கழித்து, அந்த சிக்னல் கிடைத்த ‘புட்டி’ பகுதியில், ஒரு நபர் யூனிகார்ன் பைக்கில் காக்கி நிற பேன்ட்டுடன் மிகச்சரியாக அந்த சிக்னல் கிடைத்த இடத்தின் அருகே அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருப்பதை ஒரு காவலர் நோட்டமிட்டிருக்கிறார். பிற காவலர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. பைக்கை நிறுத்திவிட்டு, புதருக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தவனை போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். சம்பவத்தன்று, பிடுங்கிய செல்போனை அங்கேயே தவறவிட்டுப் போயிருக்கிறான்; அதைத் தேடி எடுக்க வந்தவன் மாட்டிக்கொண்டிருக்கிறான்.

சம்பவக்காரனின் பெயர் பிச்சைமணி, வயது 35. சும்மா அங்கே நின்றுகொண்டிருந்ததாகவும், எந்தப் பெண்ணிடமும் தான் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும் சத்தியம் செய்திருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண், ‘இவர்தான்!’ என்று நேரில் அடையாளம் காட்டிய பிறகும் முரண்டுபிடித்திருக்கிறான். அதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் சிக்னலும், பிச்சைமணியின் செல்போன் சிக்னலும் சம்பவம் நடந்த நேரத்தில் ஒரே இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு, போலீஸார் தங்கள் பாணியில் ‘கவனிக்க’ எல்லா உண்மைகளையும் ஒப்புவித்திருக்கிறான்.

மணமான பெண்கள்தான் டார்கெட்!

பிச்சைமணி, நான்கு டேங்கர் லாரிகளைச் சொந்தமாகவைத்து பிஸினஸ் செய்துவந்திருக் கிறான். திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள். 2016-லேயே செங்குன்றம் காவல் நிலையத்தில், பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்கான ஒரு வழக்கு இவன்மீது இருக்கிறது. கொஞ்சநாள் அடங்கியிருந்தவன், பெண் ஆசை காரணமாக போலீஸ்போல கெட்டப்பை மாற்றிக்கொண்டு இரவு 8 மணிக்கு மேல் யூனிகார்ன் பைக்கில் ரவுண்ட் செல்வதை வழக்கமாகவைத்திருக்கிறான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், தனிமையில் சந்திக்கும் ஜோடிகள்தான் பிச்சைமணியின் டார்கெட். அவர்களிடம் தன்னை போலீஸ் எஸ்.ஐ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, “மூணு ஆப்ஷன் உங்களுக்கு...” என்று மிரட்டி பணம், நகை, செல்போன்களைப் பறிப்பதோடு பெண்களிடமும் தவறாக நடந்துகொள்வானாம். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி, பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காதது பிச்சைமணிக்கு வசதியாக இருந்திருக்கிறது.

“இருட்டில் தனியாகச் சந்தித்துப் பேசுகிறவர்களைக் கூர்ந்து கவனிப்பேன். பெண்ணின் காலில் மெட்டி இருக்கிறதா, கழுத்தில் தாலி இருக்கிறதா எனப் பார்ப்பேன். பக்கத்தில் தோரணையாக நடந்து போகும்போது, அவர்கள் தடுமாறுவதிலேயே அது ரகசியக் காதல் என்பது தெரிந்துவிடும். அதன் பிறகு, போலீஸ்போல மிரட்டி, காரியத்தை முடிப்பேன்” என்று அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் பிச்சை. `கடந்த நான்கு ஆண்டுகளில் பிச்சைமணியால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டும்’ என்கிறார்கள் போலீஸார்.

பிச்சைமணி மீது ஐபிசி 376 (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். நல்ல தொழில் இருந்தும், குடும்பம் இருந்தும் பெண்ணாசையால் போலீஸ் கெட்டப்பில் கெட்ட செயல்கள் செய்த பிச்சைமணி, இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

தன்னிடம் மாட்டிக்கொண்டவர்களுக்கு மூணு ஆப்ஷன் கொடுத்த பிச்சைமணிக்கு இப்போது வேறு ஆப்ஷனே இல்லை. ஒன்லி ஜெயில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு