Published:Updated:

ஏடிஎம் மெஷினை வெடிவைத்து தகர்த்து 28 லட்சம் கொள்ளை; புனேயில் பயங்கரம்!

கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்
கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்

புனேயில் கொள்ளையர்கள் ஏடிஎம் மெஷினில் வெடிகுண்டுவைத்து தகர்த்து, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

சமீபகாலமாக ஏடிஎம் மெஷின்களில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துவருகின்றன. சிலர் மெஷினை அப்படியே எடுத்துச் சென்றுவிடும் சம்பவமும் நடைபெறுகின்றன. இது போன்ற காரியங்களில் ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்பக்கூடிய சில ஊழியர்களும் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநிலம், புனே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியிலுள்ள சகான் எம்.ஐ.டி.சி-யிலுள்ள ஏடிஎம் சென்டருக்கு அதிகாலை 2 மணிக்கு இரண்டு கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்
கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்

அவர்கள் ஏடிஎம் மெஷினை உடைக்க முடியாது என்பதை முதலிலேயே தெரிந்துகொண்டு, வெடிகுண்டு ஒன்றைக் கையோடு எடுத்துவந்திருந்தனர். அவர்கள் அந்த வெடிகுண்டை ஏடிஎம் மெஷினில் பொருத்தி வெடிக்கச்செய்தனர். பின்னர் உள்ளேயிருந்த ரூ.28 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். ஏடிஎம் மெஷின் வெடித்துச் சிதறியதில் பணம் அருகில் சிதறிக்கிடந்தது. அதோடு ஏடிஎம் சென்டர் கண்ணாடிக் கதவும் உடைந்துவிட்டது. கொள்ளையர்கள் இருட்டில் தெரியாமல் சிதறிக்கிடந்த பணத்தை எடுக்காமல் சென்று இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஏடிஎம் மெஷினில் 40 லட்சம் பணம் இருந்ததாகச் சம்பந்தப்பட்ட ஏடிஎம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் 28 முதல் 30 லட்சம் பணத்தைக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று துணை கமிஷனர் மஞ்சக் அப்பர் தெரிவித்துள்ளார். கொள்ளையர்களைப் பிடிக்கப் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு புனே ரஞ்சன்காவ் என்ற இடத்திலும் இதே போன்று ஏடிஎம் மெஷினை உடைத்து, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

அடுத்த கட்டுரைக்கு