Published:Updated:

நெல்லை வங்கி அதிகாரி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை! - பூட்டை உடைத்து துணிகரம்

நெல்லையில், வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 61 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர், தமிழ்செல்வன்.  இவர், திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக உள்ளார். அவரது மகன் சுரேஷ்குமார், ராமநாதபுரத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். அவரின் வீடு, வி.எம்.சத்திரத்தில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருக்கிறது.

கொள்ளை
கொள்ளை

தமிழ்ச்செல்வனும் சுரேஷ்குமாரும் வெளியூர்களில் பணியாற்றுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல, கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பணிக்காக இருவரும் சென்றுவிட்டனர். இன்று, இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின்  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 61 சவரன் நகை மற்றும் 5,000 ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். 

Vikatan

நெல்லை மாநகரப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வரை வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், போலீஸாரின் தீவிர நடவடிக்கை காரணமாகக் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், மீண்டும் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்திருப்பதால், போலீஸார் கொள்ளையரைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறார்கள்.