Published:Updated:

`250 பவுன் நகைக் கொள்ளை; கேமராவில் பதிவான 2 பேர்!’ - வேகமெடுத்த வேலூர் போலீஸ்

விசாரணை நடத்திய போலீஸார்
விசாரணை நடத்திய போலீஸார்

வேலூரில், ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் 250 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில், சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருக்கும் இருவரை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது.

வேலூர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள பிரபல `அம்மா’ பிரியாணி ஹோட்டலின் உரிமையாளர் மோகன் (60). இவர், வேலூர் கொசப்பேட்டை சி.எம்.சி கண் மருத்துவமனை பின்புறமுள்ள அசோக நடேசன் தெருவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கடந்த வாரம் மோகன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஹோட்டல் அதிபர் வீடு
ஹோட்டல் அதிபர் வீடு

இந்தநிலையில், கடந்த இரண்டு நாள்களாக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள், அவரது குடும்பத்தாரின் செல்போனில் காட்டவில்லை. சந்தேகமடைந்து மோகனின் மகனும், அவரின் உறவினர்கள் சிலரும் நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, வீட்டு காம்பவுண்ட் சுவர்மீது பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வேறு பக்கமாக திசைதிருப்பி வைக்கப்பட்டிருந்தது.

Vikatan

அதிர்ச்சியடைந்த மோகனின் மகன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பெட்ரூம் கப்போர்டுகளில் வைத்திருந்த நகைகளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சுமார் 250 பவுன் தங்க நகைகளும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் களவுபோனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர்.

விசாரணை நடத்திய போலீஸார்
விசாரணை நடத்திய போலீஸார்

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணயும் நடந்துவருகிறது.

இது குறித்து, காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறோம். சந்தேகப்படும்படி இரண்டு பேர் நடமாடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. அவர்கள் யாரென்று தெரியவில்லை. இருவரையும் அடையாளம் காணும் வேலை நடந்துவருகிறது’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு