Published:Updated:

பாத்ரூமில் அடைத்துவைத்து கொள்ளையடித்த தம்பதி!

நீயூஸ் ரீடர் வேலை... சீரியலில் துணை நடிகை...

பிரீமியம் ஸ்டோரி
“உங்க போட்டோஸ், வீடியோஸ் பார்த்தேன். நியூஸ் ரீடிங்ல பழைய பாத்திமா பாபு தோத்துடுவாங்க போங்க... உங்களுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு” என்கிறரீதியில் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசும் தம்பதியர், ‘ஆடிஷன் டெஸ்ட், மேக்கப் டெஸ்ட்’ என்று டபாய்த்து, நீயூஸ் ரீடர் வேலை தேடும் பெண்களிடம் நகைகளைக் கொள்ளையடித்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, ‘ஏக் காவ் மே ஏ கிஸான் ரஹதாத்தா...’ பாணியில் தமிழில் ‘ழ’கரத்தையும் `ல’கரத்தையும் உச்சரிக்கச் சொல்லி, அந்தப் பெண்களைப் பாடாகப்படுத்தியதுதான் கொடுமை. ஒருவழியாக அந்தத் தம்பதியரைப் பிடித்து,சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்டம், பரக்காவட்டு வில்லை கிராமத்தைச் சேர்ந்த மினிமோள் என்ற இளம்பெண், இணையதளம் ஒன்றில் செய்தி வாசிப்பாளர் வேலை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, அதிலிருந்த செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டிருக்கிறார். எதிர்முனையில் பேசிய ராவின் பிஸ்ட்ரோ என்பவர், வேலை தொடர்பான விவரங்களை மினிமோளிடம் கூறியதோடு, ‘‘உங்க புகைப்படங்களை என் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்க...’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

மினிமோள் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்த ராவின் பிஸ்ட்ரோ, மீண்டும் அவரைத் தொடர்புகொண்டு, ‘‘உங்க போட்டோஸ் பார்த்தேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஆடிஷன் டெஸ்ட் முடிஞ்சதும் ஜாப் ரெடியாகிடும். இனிமே, இது தொடர்பா என் உதவியாளர் தீபா உங்ககிட்ட பேசுவார்’’ என்று பந்தாவாகச் சொல்லியிருக்கிறார்.

பாத்ரூமில் அடைத்துவைத்து கொள்ளையடித்த தம்பதி!

குளியலறைக்குள் சிறை!

சில தினங்களுக்கு முன்னர் ஒருநாள் மினிமோளிடம் பேசிய தீபா, அவரைப் பெருங்குடியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, ராவின் பிஸ்ட்ரோவிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்போது, ‘‘மேடத்துக்கு மேக்கப் போட்டு ஆடிஷன் டெஸ்ட்டுக்கு ரெடி பண்ணுங்க’’ என்று தீபாவிடம் கூறியிருக்கிறார் ராவின் பிஸ்ட்ரோ. மேக்கப் டெஸ்ட்டுக்கு மினிமோளைத் தயார்ப்படுத்தும் போது, ‘`மேடம்... நீங்க போட்டிருக்குற நகைகளைக் கழற்றி ஹேண்ட் பேக்குல வெச்சிடுங்க. நீயூஸ் ரீடருக்கு இவ்வளவு நகைகள் போட்டா நல்லா இருக்காது’’ என்று கேஷுவலாக தீபா கூற... தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி ஹேண்ட் பேக்கில் வைத்திருக்கிறார் மினிமோள்.

அடுத்து, மினிமோளை முகம் கழுவி வரும்படி தீபா கூறியதும், அவர் குளியலறைக்குச் சென்றிருக்கிறார். உடனே மினிமோளைக் குளியலறைக் குள்ளேயே வைத்துப் பூட்டி, டி.வி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு, நகைகளுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்கள் இருவரும். குளியலறைக்குள் சிக்கிக்கொண்ட மினிமோள், நீண்டநேரமாகக் கதவைத் தட்டியும், அவரின் சத்தம் வெளியில் கேட்கவில்லை. சில மணி நேரத்துக்குப் பிறகே மினிமோளை ஹோட்டல் ஊழியர்கள் மீட்டிருக்கிறார்கள்.

இது குறித்து மினிமோள் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்த போலீஸார், தீபா மற்றும் ராவின் பிஸ்ட்ரோ பேசிய செல்போன் எண்களையும் வாங்கி விசாரித்திருக்கிறார்கள். அதில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், பாலவாக்கத்தில் தீபாவும் ராவினும் தங்கியிருக்கும் தகவலறிந்து இருவரையும் கைதுசெய்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது, மினிமோளைப் போல இன்னும் சிலரை இவர்கள் ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்த தகவல் தெரியவந்திருக்கிறது.

பாத்ரூமில் அடைத்துவைத்து கொள்ளையடித்த தம்பதி!

இன்று போய் நாளை வா!

இது குறித்து தனிப்படை போலீஸார் சிலரிடம் பேசினோம்... ‘‘தீபா என்கிற செண்பகவள்ளி, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்திருக்கிறார். கணவரைப் பிரிந்து வாழ்ந்த அவர், சென்னையில் பிரபல ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்துவந்த ராவின் பிஸ்ட்ரோவைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

குறுகியகாலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட இருவரும், மேன்பவர் ஏஜென்ஸியைத் தொடங்கி சீரியல் நடிகை, துணை நடிகை, ஆங்கர், நீயூஸ் ரீடர் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக நாடக மாடியிருக்கிறார்கள். இதற்காக இளம்பெண்களை ஆடிஷன், மேக்கப் டெஸ்ட் எடுப்பதாகக் கூறி ஹோட்ட லுக்கு வரச் சொல்வார்கள். முதன்முறை வரும்போது பெண்கள் பெரிதாக நகைகளை அணிந்து வர வில்லையென்றால், ‘சீரியல்ல நடிக்குறதுக்குக் கொஞ்சம் கிராண்டா வர வேணாமா... நாளைக்கு இன்னும் நல்ல டிரெஸ்ஸா போட்டுக்கிட்டு, செயின், கம்மல்னு சும்மா ஜம்முனு வரணும்’ என்று ‘இன்று போய் நாளை வா’ பாணியில் அனுப்பிவிடுவார்கள். மறுநாள் அப்படி வருபவர்களிடம், நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக சீரியல் வசனமெல்லாம் பேசச் சொல்லி டிரெய்னிங் கொடுப்பார்கள். இதெல்லாம் போதாதென்று கண்டிப்பான தமிழ் டீச்சராக மாறும் தீபா, அவர்களுக்குத் தமிழில் லகர, ழகர வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது, செய்தியை எப்படி வாசிப்பது என்றெல்லாம் பாடாகப் படுத்தியெடுப்பார்.

சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தன்மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டவுடன், ‘நீயூஸ் ரீடர் வேலைதான் உங்களுக்கு செட்டாகும். அதுக்கு இவ்வளவு நகை தேவையில்லை. நகைங்களைக் கழட்டி பேக்ல வெச்சுட்டு, முகம் கழுவிட்டு வாங்க... மேக்கப் டெஸ்ட் போயிடலாம்...’ என்பார் தீபா. முகம் கழுவ குளியலறைக்குள் செல்பவர்களைப் பூட்டிவிட்டு, நகைகளோடு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இப்படிப் பலரும் இவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.

நியூஸ் ரீடர் பணி வாங்கித் தருவதாக ஏமாற்றியவர்கள், இறுதியில் நியூஸாகிப்போனது தான் இதில் ஹைலைட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு