Published:Updated:

`சரக்கு விக்கற இடம் தெரியும்..எங்களோடு வாங்க.!' -கேரள இளைஞர்களைப் பதறவைத்த தேனி கும்பல்

வழிப்பறி செய்து கைதானவர்கள்
வழிப்பறி செய்து கைதானவர்கள்

கேரள இளைஞர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் நான்காயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்திருந்த கேரள இளைஞர்களிடம், `மதுபானம் வாங்கித்தருகிறோம்' என்று கூறி, வழிப்பறியில் ஈடுபட்ட கம்பம் இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஜோசப். இவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன் மற்றும் நந்து ஆகியோருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காகக் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடைக்குச் சென்றுள்ளனர்.

கம்பம்
கம்பம்

இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் கடை மூடப்பட்டிருந்தது. இதனால், அங்கேயே நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அதைக் கவனித்துக்கொண்டிருந்த கம்பத்தைச் சேர்ந்த அகமது ரஃபிக் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர், கேரள இளைஞர்களிடம், `சரக்கு வாங்கும் இடம் எங்களுக்குத் தெரியும். நாங்கள் வாங்கிக் கொடுக்கலாமா?’ எனக் கேட்டுள்ளனர்.

`இந்த ரோடு யாருடைய கட்டுப்பாட்டில்?!' - தேனி காவலர்களைப் பதம்பார்க்கும் 15 வருட பழைய சாலை

அவர்கள் பேச்சை நம்பி, பின்னால் சென்றுள்ளனர் கேரள இளைஞர்கள். கம்பம் மெட்டுச் சாலை சிலுவைக் கோயில் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கேரள இளைஞர்களை அழைத்துச் சென்று, அங்கிருந்து தனது நண்பர்களை போன் மூலம் அழைத்துள்ளார் அகமது ரஃபிக். சிறிது நேரத்தில், இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அஜித்குமார், சுகந்த் பிரேம், நாசர் மற்றும் சையது முகமது ஆகியோர், அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி, கேரள இளைஞர்களிடம் இருந்த செல்போன் மற்றும் நான்காயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

வழிப்பறிக் கும்பலைப் பிடித்த கம்பம்  போலீசார்
வழிப்பறிக் கும்பலைப் பிடித்த கம்பம் போலீசார்
குற்றச்செயல்களின் கூடாரமா தேனி..?! அச்சத்தில் ஓ.பி.எஸ். ஊர் மக்கள் #TamilnaduCrimeDiary

பணத்தை இழந்த ஜோசப் மற்றும் அவரது நண்பர்கள், அந்தப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் விவரத்தைக் கூறியுள்ளனர். உடனே, கம்பம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கம்பம் மெட்டுச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமான ஆறு பேர் இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர். தங்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது அவர்கள்தான் என ஜோசப் மற்றும் அவரது நண்பர்கள் அடையாளம் காட்ட, ஆறு பேரையும் அதிரடியாக மடக்கியுள்ளது போலீஸ்.

இதில், சையது முகமது, நாசர் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள நால்வரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழிப்பறிச் சம்பவம் நடந்து ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த கம்பம் வடக்குக் காவல்துறைக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

பின் செல்ல