Published:Updated:

`கோயில்களைக் குறிவைக்கும் கொள்ளைக் கும்பல்..!' - அதிர்ச்சியில் அரியலூர் மக்கள்

எங்களுடைய சந்தேகமெல்லாம் வடமாநிலத்தவர்கள்மீதுதான் உள்ளது. அவர்கள்தான் எதையும் யோசிக்காமல், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள்.

கோயில் நகை கொள்ளை
கோயில் நகை கொள்ளை

நகரின் மையப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 40 பவுன் நகை கொள்ளை. தொடர்ந்து, அரியலூரில் கோயில்களைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவம் நடப்பதால், இது வடமாநிலத்தவர்களின் கைவரிசையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கொள்ளை குறித்து விசாரிக்கும் காவல்துறையினர்
கொள்ளை குறித்து விசாரிக்கும் காவல்துறையினர்

அரியலூர் நகரின் மையப் பகுதியான மேலத்தெருவில் அமைந்துள்ளது, மாரியம்மன் கோயில். இக்கோயிலின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவிலிருந்த பெட்டகத்தை உடைத்து, வேண்டுதலுக்காகப் பெண்கள் வைத்திருந்த மாங்கல்யம் மற்றும் சுவாமிக்கு செலுத்தியிருந்த 40 பவுன் அளவிலான மாங்கல்யம், தாலிக் குண்டுகள் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

மேலும், அம்மனுக்கு வைக்கப்படும் வெள்ளியிலான பொருள்கள் மூக்குத்தி ஆகியவற்றையும் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொள்ளை
கொள்ளை

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்துவரும் காவல் துறையினரிடம் பேசினோம். ``நகரின் மையப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், இக்கோயிலுக்கு சிசிடிவி பொருத்தாமல் இருக்கிறார்கள். அதோடு, கடந்த திங்கள்கிழமையன்று நடந்த அன்னாபிஷேகத்தின்போது, அம்மனுக்கு ஏராளமான நகைகள் சாத்தப்பட்டுள்ளன.

கொள்ளை
கொள்ளை

பக்தர் என்ற போர்வையில் யாரேனும் நோட்டமிட்டுக் கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அதோடு, எங்களுக்கு வடமாநிலத்தவர்கள்மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் எதையும் யோசிக்காமல் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்கள்.