Published:Updated:

`திருடன் பையில் கொள்ளாத பணம்; சிதறிய லட்சங்கள்!’ -நாகர்கோவில் பழக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பணம் கொள்ளையடிக்கும் சி.சி.டி.வி காட்சி
பணம் கொள்ளையடிக்கும் சி.சி.டி.வி காட்சி

தலையில் பாலித்தீன் கவர் அணிந்து, முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், பணத்தைக் கொள்ளையடிப்பது பதிவாகி இருந்தது. மேசையைக் கம்பியால் நெம்பி உடைத்து, பணத்தை அங்கிருந்த துணியை எடுத்து கட்டியிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல சூரங்குடியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், நாகர்கோவிலில் மொத்த வியாபார பழக்கடை நடத்திவருகிறார். வெளியூரிலிருந்து பழங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, அதை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்துவருகிறார். நேற்று இரவு பணி முடிந்த பின்னர் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இன்று காலை கடைக்கு வந்தபோது, அவரது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 23 லட்ச ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

பழக்கடையில் ஆய்வு செய்யும் தடவியல் நிபுணர்
பழக்கடையில் ஆய்வு செய்யும் தடவியல் நிபுணர்

அப்போது, அப்பகுதியில் சில 500 ரூபாய் கட்டுகள் கிடந்துள்ளன. அவற்றை எடுத்தபோது, சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. பணத்தை கொள்ளையடிக்கும்போது சிதறி விழுந்ததால் ஐந்துலட்சம் ரூபாய் மிஞ்சியதாகத் தெரிகிறது. ஆனால், 17 லட்ச ரூபாய் கொள்ளைபோய்விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சிவகுமார். வடசேரி போலீஸார், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தலையில் பாலித்தீன் கவர் அணிந்து, முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் பணத்தைக் கொள்ளையடிப்பது பதிவாகியிருந்தது. மேசையைக் கம்பியால் நெம்பி உடைத்து, பணத்தை அங்கிருந்த துணியை எடுத்து கட்டியிருக்கிறார்.

அடுத்ததாக, அங்கிருந்த ஒரு பையை எடுத்து அதில் பணத்தை நிரப்பியுள்ளார். பை நிறைந்த பின்னரும் பணம் மீதம் இருந்துள்ளது. அந்தப் பணத்தை அங்கேயே விட்டுவிட்டு, மீதி பணத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவானவர் பெரிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர் அல்ல எனவும், பழக்கடையில் இவ்வளவு பணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் பை எதுவும் எடுத்து வரவில்லை. மது குடிப்பதற்காக திருடுபவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொள்ளை நடந்த பழக்கடை
கொள்ளை நடந்த பழக்கடை

மேலும் சில தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அதை வைத்து விசாரணை நடத்தி, கொள்ளையனைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பழக்கடையில் 17 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு