Published:Updated:

மலைப்பகுதி... நள்ளிரவு நேரம்!- தேனி வியாபாரிகளைப் பதறவைத்த தார்ப்பாய் கொள்ளையர்கள்

தேனியில் ஓடும் லாரியில் ஏலக்காய் மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரிகள்
லாரிகள்

ஓடும் லாரியில் லாகவமாக ஏறி, பொருள்களைத் திருடும் தார்ப்பாய் முருகனை அறியாதவர்கள் இல்லை எனலாம். தார்ப்பாய் முருகனின் கொள்ளை போல, தேனியில் ஓடும் லாரியில் ஏலக்காய் மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி
லாரி

கேரள மாநிலம், குமுளியில் உள்ள சி.பி.எம்.சி.எஸ் சொசைட்டியில் நடக்கும் ஏலக்காய் ஏலத்தில் கலந்துகொள்ளும் வியாபாரிகள், ஏலக்காயை ஏலம் எடுத்து, குமுளியிலிருந்து தேனி மாவட்டம் போடிக்கு சாலை மார்க்கமாக லாரிகளில் ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 31-ம் தேதி குமுளியிலிருந்து ஏலக்காய் மூட்டைகளுடன் 4 லாரிகள் லோயர்கேம்ப், கம்பம், பாளையம் வழியாக போடி செல்ல திட்டமிட்டு, குமுளியிலிருந்து மலைச் சாலை வழியாக வந்துகொண்டிருந்தது.

நள்ளிரவு நேரம் என்பதாலும் மலைச்சாலை என்பதாலும் மெதுவாகவே லாரிகள் பயணிக்கும். அதைப் பயன்படுத்தி 2 லாரியில் ஏறிய கொள்ளையர்கள், தார்ப்பாயைக் கிழித்து 11 ஏலக்காய் மூட்டைகளைத் திருடியுள்ளனர். லாரிகள் போடி சென்று சேர்ந்த பின்னரே ஏலக்காய் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. பதறிப்போன வியாபாரிகள் போடி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, குற்றம் நடந்த பகுதி எது எனத் தெரியாததால் புகார் வாங்க மறுத்துள்ளனர். பின்னர், குமுளி மலைச்சாலையில் கொள்ளை நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில், கூடலூர் தெற்குக் காவல்நிலையத்தில் வியாபாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

போடி காவல்நிலையம்
போடி காவல்நிலையம்

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ”குமுளி மலைச்சாலையில்தான் கொள்ளை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஏனென்றால், மலைச்சாலை என்பதால் லாரிகள் மெதுவாக வரும். மேலும், மரத்திலிருந்து எளிமையாக லாரியில் குதித்துவிடலாம். வரிசையாகச் சென்ற 4 லாரிகளில், முதல் மற்றும் கடைசி லாரிகளிலிருந்து மொத்தம் 11 ஏலக்காய் மூட்டைகள் திருடப்பட்டிருக்கின்றன. ஒரு மூட்டை 55 கிலோ. திருடப்பட்ட மூட்டைகளின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கலாம். இவ்வளவு பெரிய மூட்டைகளை எப்படி கொண்டு சென்றார்கள் என்ற கோணத்தில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை செய்துவருகிறோம். கேரள எல்லைக்குள் சென்றிருக்கிறார்களா என்ற கோணத்தில் அம்மாநில போலீஸாரின் உதவியையும் கேட்டிருக்கிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்” என்றனர்.

நான்காண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கு! - பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன்