Published:Updated:

`தலைதூக்கிய கேங் வார்; நெருக்கடி தந்த டி.ஜி.பி!’- காஞ்சி போலீஸ் களமிறங்கிய பின்னணி

நேற்றிரவு நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்த தினேஷ், தியாகு ஆகியோரைப் போலீஸார் பிடித்தனர்.

தினேஷ்
தினேஷ்

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தற்கொலைக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ரவுடிகளுக்கிடையே நடக்கும் ‘கேங் வார்’ பற்றி ஜூனியர் விகடனில் எழுதி இருந்தோம். இதைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் காரணமாக ரவுடி தினேஷ் மற்றும் தியாகு ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் கேங் வார்
ரவுடிகள் கேங் வார்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர், கடந்த 2017ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் சிலமாதங்கள் அமைதி நிலவியது. கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளுக்கிடையே, `ஸ்ரீதர் போல நாமும் காஞ்சிபுரத்தை ஆள வேண்டும்' என்ற எண்ணம் துளிர்விடத் தொடங்கியது.

`யார் அடுத்த ஸ்ரீதர்?'- அதிகாரப் பகையில் காஞ்சிபுரத்தைப் பதற வைக்கும் அடுத்தடுத்த கொலைகள்!

ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் ஆக்ரோஷமாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள வெளிப்படும்போது, அவர்களுக்குள் பகை பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக ஸ்ரீதர் ஆதரவாளரான தினேஷ் மற்றும் தணிகா ஆகிய இருவரும் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டனர். இதனால் கடந்த சில மாதங்களில் இருதரப்பிலும் நடைபெற்ற கொலைகள் காஞ்சிபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்தன. மேலும் பொதுமக்களும் இவர்களால் மிரட்டப்படுவதால் காஞ்சிபுரம் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

தினேஷ்
தினேஷ்

இவர்களுக்குள் நடக்கும் மோதல் பற்றி 06.11.2019 ஜூனியர் விகடனில் கட்டுரை எழுதியிருந்தோம். மேலும், டிஜிபி அலுவலகத்திலிருந்து ரவுடிகளை உடனடியாக கைது செய்யும்படி காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இதன் காரணமாக காவல்துறையினர் நேற்று இரவு நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த தினேஷ், தியாகு ஆகியோரைப் பிடித்துள்ளனர். இதில், தினேஷ் தன் குடும்பத்தினரோடு தங்கியிருந்துள்ளார்.

தியாகு
தியாகு

``டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து காஞ்சிபுரம் காவல்துறைக்கு நெருக்கடி வந்தது. இதனால் தனிப்பிரிவில் இருக்கும் காவலர் ஒருவரே தினேஷ் மற்றும் தியாகுவிடம் பேசி அவர்களை அழைத்து வந்திருக்கிறார்” எனக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

`` பொதுவாக சிறையில் இருந்து கொண்டே ரவுடிகள் தங்கள் நெட்வொர்க் மூலம் வெளியில் தீவிரமாகச் செயல்படுவது வழக்கம். காஞ்சிபுரம் ரவுடிகள் அதில் கைதேர்ந்தவர்கள். சிறைவாசம், அவர்களின் தொழிலைப் பலப்படுத்தாமல் இருந்தால்தான் மக்களும் நிம்மதியடைவார்கள்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.