Published:Updated:

‘கைமாறிய துப்பாக்கி; விரட்டிச்சென்ற போலீஸ்!’ -ஆற்காட்டை அதிரவைத்த ரவுடிகளின் டீலிங்

பிரபல ரௌடி தேவா
பிரபல ரௌடி தேவா

துப்பாக்கியைக் கைமாற்றிய விவகாரத்தில், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி தேவா உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.எஸ்.எஸ். கல்லூரி அருகில், பயங்கரமான குற்றவாளிகள் சிலர் துப்பாக்கிகளைக் கைமாற்ற உள்ளதாக நுண்ணறிவு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான போலீஸார், குறிப்பிட்ட அந்த இடத்தில் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

அப்போது, சென்னை மார்க்கமாக இருந்து காரில் வந்த இரண்டு பேரிடம், வேலூர் மார்க்கத்திலிருந்து பைக்கில் வந்த இரண்டு பேர் பார்சல் ஒன்றைக் கொடுத்தனர். இதைக் கவனித்த போலீஸார் அவர்களை நெருங்கினர். சுதாரித்துக்கொண்ட அந்தக் கும்பல், வாகனங்களை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றது. பார்சல் இருந்த காரை போலீஸார் விரட்டிச்சென்றனர். வாலாஜாபேட்டை நகருக்குள் கார் வேகமாகச் சென்றது.

சினிமாவில் வரும் த்ரில்லர் காட்சிகளைப் போன்று போலீஸாரும் துரத்திச்சென்று காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்த பார்சலை வாங்கி பிரித்துப் பார்த்தனர். அதில், 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட இரண்டு பேரையும் கைதுசெய்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்ட 2 பேர்
கைதுசெய்யப்பட்ட 2 பேர்

விசாரணையில், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் (20), ராமு (29) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், வேலூர் காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி தேவாவுடன் ‘டீலிங்’ நடந்ததாக அவர்கள் கூறினர். சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக தேவா மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, தேவாவையும் போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்தனர். மேலும், இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு