Election bannerElection banner
Published:Updated:

குமரி: மூதாட்டியை மிரட்ட கூலிப்படை; ஏற்பாடு செய்தவரையே கடத்திய ரெளடிகள்! - நடந்தது என்ன?

கைதுசெய்யப்பட்ட ரெளடிகள்
கைதுசெய்யப்பட்ட ரெளடிகள்

தங்களை ஏற்பாடு செய்தவரையே கூலிப்படையினர் கடத்திய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சேது பார்வதிபாய் என்ற பெண்மணிக்குச் சொந்தமான இடத்தில் கடைகள் இருக்கின்றன. நாகர்கோவிலைச் சேர்ந்த வயதான பெண்மணியான சேது பார்வதிபாய்க்கு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அடிக்கடி உதவிவந்தார். அந்தச் சமயத்தில் ராஜ்குமார் தன்னை நல்லவர்போல் காட்டியிருக்கிறார். இதனால் சேது பார்வதிபாய் தனக்குச் சொந்தமான கடைகளை ராஜ்குமாருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திக்குக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் ராஜ்குமாரின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு ஒத்திக்குக் கொடுத்த கடைகளை 50 ரூபாய் பத்திரம் மூலம் பத்து வருடங்களுக்கு ஒத்திக்குக் கொடுத்ததுபோல் போலி பத்திரம் தயாரித்திருக்கிறார். அதை சேது பார்வதிபாய்க்குத் தெரியாமல் பதிவும் செய்திருக்கிறார்.

கைது
கைது

மேலும், அந்தக் கடைகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் சில மாதங்கள் கொடுக்காமல், சேது பார்பதிபாயை ஏமாற்றியிருக்கிறார். தொடர்ந்து வாடகை கிடைக்காததால், சேது பார்வதிபாய் வாடகை கேட்டு ராஜ்குமாரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். ஆனால் ராஜ்குமார் வாடகை கொடுக்காமல் தெனாவெட்டாகப் பேசியதுடன், பத்து வருடங்களுக்கு ஒத்திக்குக் கொடுத்திருப்பதாகக் கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தனது கடைகளை அபகரிக்க ராஜ்குமார் திட்டம் தீட்டுவதை உணர்ந்துகொண்ட சேது பார்வதிபாய் அவரிடம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் சேது பார்வதிபாய் புகார் அளித்திருக்கிறார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ராஜ்குமார் திருநெல்வேலியிலிருந்து ரெளடி ரஞ்சித் என்பவர் மூலம் கடை உரிமையாளர் சேது பார்வதிபாயிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அந்தப் பேச்சுவார்த்தையில் 12 லட்சம் ரூபாய் கொடுத்தால், கடையைக் காலிசெய்து கொடுப்பதாக ரெளடி மூலம் டீல் பேசியிருக்கிறார்கள். அதற்கு சேது பார்வதிபாய் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த ரஞ்சித், தனவு, சதன், விஷ்ணு மற்றும் சில ரெளடிகள் உடன் செல்ல ராஜ்குமார் நேற்று முன் தினம் இரவு சேது பார்வதிபாய் வீட்டுக்குச் சென்று 12 லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறார். பணத்தை வாங்கிய ராஜ்குமார் கூலிப்படையினருக்கு ஏற்கனவே பேசிய இரண்டு லட்சம் ரூபாயைக் கொடுக்காமல், ஒரு லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட ரெளடிகள்
கைதுசெய்யப்பட்ட ரெளடிகள்

இதனால் ஆத்திரமடைந்த கூலிப்படையினர் ராஜ்குமாரை மிரட்டிக் காரில் ஏற்றி, நாகர்கோவிலிலிருந்து நெல்லை நோக்கிச் சென்றுள்ளனர். கார் நாகர்கோவிலைத் தாண்டி வெள்ளமடம் பகுதியில் செல்லும்போது ராஜ்குமார், பேசிய தொகையில் பாக்கியைத் தருவதாகக் கூறியிருக்கிறார். இதனால் காரை வெள்ளமடத்தில் நிறுத்தியிருக்கிறார்கள் ரௌடிகள். ராஜ்குமார் தன் நண்பரிடம் பணம் கொண்டுவரும்படி கூறியிருக்கிறார். பணத்தைக் கொண்டுவந்த அவர் நண்பர் கூடவே போலீஸையும் அழைத்து வந்திருக்கிறார். போலீஸார் அங்கு சென்று ரஞ்சித், சதன், விஷ்ணு, தனவு ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், ராஜ்குமார் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியிருக்கிறார். இது குறித்து கோட்டாறு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கூலிப்படையை ஏற்பாடு செய்தவரையே கூலிப்படையினர் கடத்திய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு