Election bannerElection banner
Published:Updated:

`குளத்துக்குள் 2 மணிநேர நீச்சல்!' - நெல்லை போலீஸைப் பாடாய்ப்படுத்திய `பேட்டை' பாஸ்கர்

கைது செய்யப்பட்ட பாஸ்கர்
கைது செய்யப்பட்ட பாஸ்கர்

நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பாஸ்கர் மீது நிலுவையில் இருக்கின்றன.

நெல்லை புறநகர்ப் பகுதியான பேட்டை பகுதியில் வசித்து வருபவர், பாஸ்கர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் தன் நண்பருடன் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆற்றில் ஒருவர் குளிப்பது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பாஸ்கர்
பாஸ்கர்

அதனால் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையிலான போலீஸார் அவரைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். போலீஸாரைப் பார்த்ததும் பாஸ்கர் மறுகரையில் ஏறி ஓடிவிட்டார். இதுபற்றி வயர்லெஸ் மூலம் தகவல் அளித்த போலீஸார் அவரை விரட்டிச் சென்றுள்ளனர்.

வயர்லெஸ் தகவல் மூலம் சுத்தமல்லி காவல்நிலைய போலீஸார் எதிர்முனையில் இருந்து வந்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மீண்டும் வந்த வழியாகத் திரும்பி ஓடியிருக்கிறார். வயல்வெளிக்குள் ஓடிய அவர் வழியில் இருந்த சுத்தமல்லி புதுக்குளத்துக்குள் குதித்துவிட்டார். அதனால் போலீஸார் குளத்தைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.

படகு மூலம் குளத்துக்குள் சென்ற போலீஸார்
படகு மூலம் குளத்துக்குள் சென்ற போலீஸார்

குளத்துக்குள் பதுங்கிய பாஸ்கர், உள்ளே இருந்து வெளியேற மறுத்ததுடன் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக் குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று நீச்சல் அடித்தபடியே நின்றுள்ளார். வெளியே வருமாறு போலீஸார் அழைத்தபோது அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தபடியே மறுத்துவிட்டார்.

குளத்துக்குள் இருந்து வெளியே வர மறுத்த பாஸ்கரைப் பிடிப்பதற்காகத் தீயணைப்புத் துறையின் உதவியை போலீஸார் கேட்டார்கள். அதனால் ரப்பர் படகுடன் வந்த தீயணைப்புத் துறையினர் குளத்துக்குள் இறங்கினார்கள். ஆனால் பிடிகொடுக்காத பாஸ்கர் அங்குமிங்கும் நீச்சல் அடித்துச் சென்றார். அதனால் போலீஸார் அவரிடம் `சுட்டு விடுவோம்’ என மிரட்டினார்கள்.

கைது செய்யப்பட்ட பாஸ்கர்
கைது செய்யப்பட்ட பாஸ்கர்

நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அவரைப் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் குளத்துக்குள் இறங்கிய குற்றவாளி, போலீஸாருக்குப் போக்குக் காட்டிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு