Published:Updated:

`அன்று பட்டாக்கத்தியுடன் வீரவசனம்; இன்று மன்னிப்பு!' - சி.சி.டி.வி-யால் சிக்கிய ரவுடிக் கும்பல்

ரவுடிக் கும்பல்
ரவுடிக் கும்பல்

சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் சாலையில் சென்றவர்களைப் பட்டாக்கத்தியைக் கொண்டு மிரட்டிய ரவுடிக் கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் சில தினங்களுக்குமுன் போரூர் சமயபுரம் 5-வது தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. நிர்வாணக் கோலத்தில் சுற்றித் திரியும் வாலிபர் ஒருவர், ஜன்னல் வழியாக டார்ச் லைட்டை அடிப்பது, தன்னுடைய முகம் சிசிடிவியில் தெரியாமலிருக்க கேமராவைத் திருப்பி வைப்பது என சேட்டைகளைச் செய்துள்ளார்.

கேமராவில் பதிவான அந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்துவரும் வேளையில், சென்னை விருகம்பாக்கம் காந்திநகரில் பட்டாக்கத்தியுடன் ஒரு கும்பல் அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஜன்னல் வழியே டார்ச் வெளிச்சம்... திசை மாறும் கேமரா!- சென்னைவாசிகளை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்
கத்தியோடு வலம் வந்த ரவுடிக்கும்பல்
கத்தியோடு வலம் வந்த ரவுடிக்கும்பல்

விருகம்பாக்கம் காந்திநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த வீடியோவில் நள்ளிரவு நேரம் என்பதால் சாலை வெறிச்சோடிக் காணப்படுகிறது. அப்போது பைக்கில் ஒருவர் அவ்வழியாக வருகிறார். பட்டாக்கத்தியுடன் நிற்கும் நபர், அந்த பைக்கின் பின்பக்க சீட்டில் வீரவசனம் பேசியபடியே ஓங்கி அடிக்கிறார். இதனால் வாகனத்தில் வந்தவர் பதற்றத்துடன் அங்கிருந்து வேகமாகச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

அடுத்து கத்தியோடு இன்னொரு நபர் வருகிறார். இருவரும் சேர்ந்து பட்டாக்கத்தி, அரிவாளை கைகளில் சுழற்றியபடி சாலையில் நடந்து செல்கின்றனர். பிறகு சினிமாவில் வரும் காட்சிபோல சாலையில் கத்தியால் இருவரும் கோடு போடுகின்றனர். அதன்பிறகு அந்தச் சாலையிலேயே கத்தியோடு அவர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

`நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்தினார்!' - சாப்பிடும்போது கொல்லப்பட்ட சென்னை ரவுடி

கத்தியோடு இருக்கும் நபர்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால், எதிர்பார்த்த நபர் வரவில்லை என்பதால் ஆத்திரத்தில் அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய அந்தக் கும்பல் அங்கிருந்து பைக்கில் செல்கிறது.

இந்தச் சம்பவம் நடந்தபோது ஒரு பெண் வெளியில் வந்து எட்டிப்பார்ப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

சேதமடைந்த ஆட்டோ
சேதமடைந்த ஆட்டோ

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காந்திநகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் கத்தியோடு வந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு செல்வதற்குள் கத்தியோடு வந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இதனால் அந்தப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். இதற்கிடையில், பட்டாக்கத்தி கும்பலால் சேதமடைந்த ஆட்டோ டிரைவர் ஷேக் ஹமீது எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, கே.கே.நகரைச் சேர்ந்த ஆதித்யா ஆகியோரை கைது செய்துள்ளோம்.

`10 லட்சம் பணம் வரலைன்னா, கொன்னே போட்ருவோம்!’- ரவுடி ஜானியால் மிரளும் வேலூர் தொழிலதிபர்கள்

அவர்களிடம் விசாரித்தபோது `மதுபோதையில் அப்படி செய்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் இனிமேல் இப்படிச் செய்ய மாட்டோம்' என்று கூறினர். இதனையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அவர்களிடமிருந்து கத்திகளையும் பறிமுதல் செய்துள்ளாம்" என்றனர்.

 கைதான ரவுடி
கைதான ரவுடி

காந்திநகர் பகுதி மக்களிடம் பேசினோம். ``விருகம்பாக்கம் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நள்ளிரவில் ஒருவித அச்சத்தோடு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்குகூட வெளியில் செல்ல முடியவில்லை. சம்பவத்தன்று இரவு 4 பேர் கையில் பட்டாக்கத்தி, அரிவாள் ஆகியவற்றுடன் அரைமணி நேரம் அந்தப்பகுதியில் செல்பவர்களை மிரட்டிவந்தனர்.

போதையில் இருந்த அவர்களின் செயலால், வீட்டைவிட்டு வெளியில் வர முடியவில்லை. திடீரென அந்தக் கும்பல் சாலையில் நிறுத்தியிருந்த பைக், ஆட்டோ ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். அதைப்பார்த்தும் அவர்களைத் தட்டிக் கேட்க முடியவில்லை. போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் கஞ்சா போதை தான். ஆனால், அதைப் போலீஸார் மறைக்கின்றனர்"என்கின்றனர் அச்சத்துடன்.

பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் செயல்படுவது வாடிக்கையாகி வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு