Published:Updated:

`ஃபேஸ்புக் லைவ்; ரவுண்ட் கட்டப்பட்ட சென்னை ரௌடி' - ஒரே இரவில் நடந்த 2 அதிர்ச்சி சம்பவங்கள்

கொலை செய்யப்பட்ட ரமேஷ்
கொலை செய்யப்பட்ட ரமேஷ்

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கொலைச் சம்பவத்துக்கும் மதுரவாயலில் நடந்த கொலை முயற்சி சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வடபழனி, குமரன் காலனியைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தியதில், பிரபல ரௌடி ஒருவரின் தம்பி அஜித்தின் மரணத்துக்கு பழிவாங்கவே ரமேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் மதுரவாயல், கந்தசாமி நகரைச் சேர்ந்த சத்யமூர்த்தி (35) என்பவர் நேற்றிரவு மேட்டுக்குப்பம் பிள்ளையார்கோயில் தெருவில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சத்யமூர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

இதற்கிடையில், சத்யமூர்த்தியைத் தாக்கிய சம்பவத்தில் பிரபல ரௌடி தக்காளி பிரபாகரன், பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். அவரை மடக்கிய பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தக்காளி பிரபாகரனிடம் விசாரணை நடத்தியபோதுதான் விருகம்பாக்கத்தில் ரமேஷைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக போலீஸாரின் வாக்கி டாக்கிகள் அலறியுள்ளன. விருகம்பாக்கம் போலீஸார் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதர்மண்டிக் கிடக்கும் இடத்திலிருந்து ஒரு கும்பல் தப்பி ஓடியுள்ளது. அவர்களை போலீஸார் மடக்கிப்பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்துதான் ரமேஷ் கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்று தெரியவந்துள்ளது. தலைமறைவானவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். காயமடைந்த சத்யமூர்த்தி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக கோயம்பேடு, விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம் காவல் நிலையம்
விருகம்பாக்கம் காவல் நிலையம்

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``தக்காளி பிரபாகரன் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் பெயர் விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் உள்ளது. தக்காளி பிரபாகரனுக்கும் பழைய கார்களை வாங்கி விற்கும் சத்யமூர்த்திக்கும் மோதல் இருந்துவந்துள்ளது. சத்யமூர்த்தியிடம் தக்காளி பிரபாகரன் தரப்பு மாமூல் கேட்டதற்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் அவரைக் தக்காளி பிரபாகரன் கும்பல் தாக்கியுள்ளது. அதே சமயத்தில் தக்காளி பிரபாகரன் கும்பலுடன் தொடர்பில் இருந்த ரமேஷ், திருடிய நகைகளை பங்கு கொடுக்காமல் இருந்துள்ளார்.

15 சவரன் நகைகளை பங்கு பிரிக்க அவரை அஜித்தின் அண்ணனும் தக்காளி பிரபாகரனின் கும்பலும் விருகம்பாக்கம் நடேசன் ரோடு பகுதியில் உள்ள புதர்மண்டி கிடக்கும் மைதானத்துக்கு வரச்சொல்லியுள்ளனர். அதை நம்பி அங்கு வந்த ரமேஷை தக்காளி பிரபாகரனின் கூட்டாளிகள் அஜித் மரணத்துக்கு பழிவாங்க கொலை செய்துள்ளனர். சத்யமூர்த்தியைத் தாக்கிய சம்பவத்தில் பொதுமக்களிடம் சிக்கிய தக்காளி பிரபாகரனை சிலர் அடித்து உதைத்துள்ளனர். அதை ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ்வும் செய்துள்ளார். தக்காளி பிரபாகரன் சிக்கிய பிறகுதான் ஒரே இரவில் நடந்த இரட்டை சம்பவங்கள் எங்களுக்குத் தெரியவந்தது" என்றனர்.

``அந்தக் கடமைக்காக நான் உயிரோடு இருக்கிறேன்" -  நடுரோட்டில் தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்
ரமேஷ்
ரமேஷ்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஊரடங்கு தளர்வு காரணமாக மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைமைக்குத் திரும்பி வருகிறது. அதனால் வாகனச் சோதனை, ரோந்து பணி என போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சமயத்தில்தான் கோயம்பேடு காவல் நிலையத்தில் ரௌடி தக்காளி பிரபாகரனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதே சமயத்தில் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸாரிடம் ரமேஷை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் சிக்கினார்.

இருவரிடம் விசாரித்தபோதுதான் ரமேஷ் கொலை, சத்யமூர்த்தி கொலை முயற்சி ஆகிய சம்பவங்கள் தெரியவந்தன. சிறிது நேரத்துக்கு முன் தகவல் கிடைத்திருந்தால் ரமேஷ் கொலையைத் தடுத்திருக்கலாம். தக்காளி பிரபாகரனை பொதுமக்கள் தாக்கியது தொடர்பாக ஃபேஸ் புக் லைவ் வீடியோ இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு