Published:Updated:

பிறந்தநாள் கேக் டு கள்ளத்துப்பாக்கி விற்பனை! - மீண்டும் மீண்டும் கைதாகும் ரவுடி பினு

அரிவாளால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி பினு, மீண்டும் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Rowdy binu
Rowdy binu

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ரவுடி பினு. இவரின் சொந்த ஊர் கேரளா. சென்னையிலேயே செட்டிலாகி ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, கள்ளத்துப்பாக்கி விற்பனை, அடிதடி, ஆள்கடத்தல், கஞ்சா கடத்தல் என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான பினு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார். இதனால் காவல்துறையினரும் பினுவை சில ஆண்டுளாகத் தேடி வருவதாகக் கூறினர். ஆனால் பினு, தலைமறைவாக இருந்த இடத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தச் சமயத்தில்தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையை அடுத்த குன்றத்தூர், மலையம்பாக்கத்தில் தன் கூட்டாளிகளுடன் பினு, பிறந்தநாளைக் கொண்டாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறந்தநாளில் கேக்கை அரிவாளால் பினு வெட்டும் புகைப்படங்கள் வெளியாகி காவல்துறையினருக்குத் தலைவலியை ஏற்படுத்தியது.

 binu
binu
Vikatan

இதையடுத்து ரவுடி பினு மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் விடிய விடிய விரட்டிப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் போலீஸிடம் இருந்து தப்பிய பினு, அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர் பேசும் வீடியோவில், `நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. எனக்கு சுகர் உள்படப் பல பிரச்னைகள் உள்ளன' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பினு, நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால், காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தப்பிச் சென்றார். இதனால் பினுவை போலீஸார் தேடிவந்தனர். அவர் அம்பத்தூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, பாடி மேம்பாலத்தில் பினுவைக் கைது செய்தது போலீஸ். இதற்கிடையில் எண்ணூரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பினுவிடமிருந்து கள்ளத்துப்பாக்கி வாங்கப்பட்ட தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதனால் கள்ளத்துப்பாக்கி விற்பனை வழக்கிலும் பினு கைது செய்யப்பட்டார்.

Vikatan

கள்ளத்துப்பாக்கி விற்ற வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த பினு கடந்த ஓராண்டாகத் தலைமறைவாக இருந்தார். அவரை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில் திருவல்லிக்கேணி காந்திநகர் பகுதியில் குடிபோதையில் ஒருவர் தகராறில் ஈடுபடும் தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது ரவுடி பினு என்று போலீஸார் அடையாளம் கண்டனர். பினுவைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அவரை விரட்டிப் பிடித்த போலீஸார் பினுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பினுவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது பினுவின் மனைவியின் சகோதரி லட்சுமியை சந்திக்க அவர் வந்துள்ளார். அப்போதுதான் அங்கு தகராறு நடந்தது தெரியவந்தது.

பினு போலீஸாரிடம் சிக்குவதும் பிறகு தப்பிப்பதும் வாடிக்கையாக உள்ளதாகக் காவல்துறையினர் புலம்புகின்றனர்.