ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடையைச் சேர்ந்த பாண்டி என்ற முத்துப்பாண்டி. இவர்மீது மூன்று கொலை வழக்குகளும், பல்வேறு கொள்ளை வழக்குகளும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றன. ரெளடிகள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார்.

நேற்று இரவு வீட்டைவிட்டுச் சென்ற பாண்டி மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை செங்கமடை அருகே வயற்காட்டுப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலைசெய்யப்பட்டு, தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடப்பதாக திருவாடானை போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்பேரில் திருவாடானை டி.எஸ்.பி நிரிஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை மீட்டு விசாரணை நடத்தயுள்ளனர். அதில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பிரபல ரெளடி பாண்டி என்பது தெரியவந்தது. இவர் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமநாதபுரத்தில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல் வேறு, தலை வேறு எனப் பிரித்து வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.