Published:Updated:

கடலூர் டு வேலூர்... 5 வழக்குகளில் ஆஜர்! - நீதிமன்றத்துக்கு ஆம்புலன்ஸில் வந்த ரௌடி ஜானி

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

துப்பாக்கிமுனையில் கைதுசெய்யப்பட்ட பிரபல ரௌடி ஜானி ஐந்து வழக்குகளின் விசாரணை தொடர்பாக, வேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜானி மீது ஆறு கொலை, ஏழு கொலை முயற்சி, 15 வழிப்பறி, நான்கு ஆள்கடத்தல் உட்பட 51 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில், இன்னும் ஒன்பது வழக்குகளில் கைதுசெய்யப்படாத ஜானி மீது 11 முறை வாரன்ட்டும் பிறக்கப்பட்டிருக்கிறது. ``புகார் பதியப்படாத குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும்’’ என்று பட்டியல் நீட்டுகிறது, வேலூர் காவல்துறை. `என்கவுன்ட்டர்’ லிஸ்ட்டிலுள்ள ஜானி, `இன்டர்நெட்’ போன் காலில் தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி, லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

எஸ்.பி செல்வகுமார்
எஸ்.பி செல்வகுமார்

இந்தநிலையில், வேலூரின் புதிய எஸ்.பி செல்வகுமார் ஜானியைப் பிடிக்கத் திட்டம் வகுத்தார். துடிப்பாக இருக்கும் 30 காவலர்களை மூன்று படைகளாகப் பிரித்து தேடுதல் வேட்டையில் களமிறக்கினார். தமிழக-ஆந்திர வனப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய தனிப்படை போலீஸார் ஜானியின் உறவினர்கள், கூட்டாளிகள் எனப் பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. பின்னரே ரௌடி ஜானி பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

காவல்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளிடமிருந்து ஜானிக்குக் கிடைக்கும் தகவலை திசைதிருப்புவதற்காக ஒரு தனிப்படையை சித்தூர் பக்கம் திருப்பிவிட்டார், எஸ்.பி செல்வகுமார்.

சித்தூரில் தேடுதல் வேட்டையை நடத்துவதுபோல் போக்குக்காட்டி... மற்றொரு தனிப்படை பெங்களூரு வளத்தூர் காலனியில் ஐந்து மாடி கட்டடத்தின் மேல்தளத்தில் பதுங்கியிருந்த ஜானியை நவம்பர் 12-ம் தேதி, துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்தது. பதிலுக்கு ஜானியும் துப்பாக்கியைத் தூக்கியிருக்கிறார். போலீஸுக்கும், ரௌடி கும்பலுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கி வெடிச் சத்தம் அந்த ஊரையே அலறவைத்திருக்கிறது. இதையடுத்து, வேலூர் போலீஸாருக்கு பெங்களூரு போலீஸாரின் உதவியும் கிடைத்ததால், ரௌடி கும்பல் தலைதெறிக்க தப்பி ஓடியது. ``ஜானியை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும்’’’ என்ற முயற்சியில் வேலூர் போலீஸார் விடாமல் `தம்’ கட்டி பின்தொடர்ந்தனர்.

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

கட்டடத்தின் மேல் தளத்தில் பதுங்கியிருந்த ஜானி, `கெரில்லா’ ஸ்டைலில் மாடிக்கு மாடித் தாவி ஓடியிருக்கிறார். தன்னை நெருங்கி வந்த போலீஸார்மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார். பின்னரே, நெற்றிப்பொட்டில் துப்பாக்கியைவைத்து ஜானியையும், அவரது மைத்துனரையும் மண்டியிடவைத்தது போலீஸ். இருவரையும் கைதுசெய்து வேலூருக்கு அழைத்து வரும்போது, `சிறுநீர் கழிக்க வேண்டும்’ என்றார் ஜானி. ஓரிடத்தில் போலீஸார் வண்டியை நிறுத்தினராம். சிறுநீர் கழிக்க இறங்கிய ஜானியும், அவரது மைத்துனரும் தப்பி ஓடியபோது அங்கிருந்த ஓர் பள்ளத்தில் தவறி விழுந்து கை, கால்களை முறித்துக்கொண்டனர்.

பலத்த காயமடைந்த இருவரையும் மாவுக்கட்டுப் போட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் படுக்கவைத்தது போலீஸ். சிகிச்சைக்குப் பின்னர், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். வேலூர் சிறையில் ஜானியின் கூட்டாளிகள் பலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜாமீனில் வெளிவரும் நிலையிலுள்ள கூட்டாளிகள் மூலம் சிறையிலிருந்தே ஜானி மீண்டும் குற்றம்புரியலாம். அதேசமயம், ஜானியைச் சந்திப்பதற்காக அவரின் மனைவி, உறவினர்கள், கூட்டாளிகள் என ஏராளமானோர் சிறைக்கு வருகிறார்கள். உறவினர்கள் மூலமாகவும் ஜானியின் ஆட்டம் தொடரலாம் என்று கருதிய போலீஸார், நவம்பர் 20-ம் தேதி அவரை கடலூர் சிறைக்கு மாற்றினர்.

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

இந்தநிலையில், வேலூர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களில் பதியப்பட்டிருக்கும் கொலை, கொலை முயற்சி உட்பட ஐந்து வழக்குகளின் விசாரணை தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் (ஜே.எம்.1 மற்றும் ஜே.எம்.4) ரௌடி ஜானி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கடலூர் சிறையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார், ஆம்புலன்ஸ் மூலம் ஜானியை அழைத்துவந்தனர். கை, கால்களில் கட்டுப்போடப்பட்டிருந்ததால், போலீஸார் கைத்தாங்கலாக கீழே இறக்கி சக்கர நாற்காலியில் அமரவைத்து நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

ஜானியிடம் விரல் ரேகைப் பதிவுப் பெறப்பட்டபோது, `வேலூர் சிறைக்கே மீண்டும் மாற்ற வேண்டும்’ என்கிற கோரிக்கை அவரது வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 5 மற்றும் 8-ம் தேதியன்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால், ஜானி மீண்டும் கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு