Published:Updated:

`10 லட்சம் பணம் வரலைன்னா, கொன்னே போட்ருவோம்!’- ரவுடி ஜானியால் மிரளும் வேலூர் தொழிலதிபர்கள்

ரவுடி ஜானி
ரவுடி ஜானி

தொழிலதிபர்களைக் கடத்தி பணம் பறிக்கும் காட்பாடியைச் சேர்ந்த ரவுடி ஜானியின் செயலால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி ஜானி. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறிப்பது உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்கவுன்டர் லிஸ்ட்டில் உள்ள ஜானி தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வேலூர், காட்பாடி பகுதிகளில் தன் கூட்டாளிகளுடன் காரில் வலம் வரும் ஜானியைப் பொதுமக்கள் பலர் அடிக்கடி பார்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் எஸ்.பி அலுவலகம்
வேலூர் எஸ்.பி அலுவலகம்

ஓராண்டுக்கு முன்பு காவல்துறையினரை எச்சரிக்கும் வகையில், ஜானியின் கூட்டாளி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ‘அண்ணன் ஜானியிடம் மாமூல் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் சிலர், இப்போது அண்ணனைப் பிடிக்க திட்டம் போடுகிறீர்களா... துண்டு துண்டாக வெட்டிவிடுவோம்’ என்று அந்த நபர் ஆயுதங்களைக் காட்டி பகிரங்கமாக மிரட்டியிருந்தார். காவல்துறை வட்டாரத்தை உலுக்கிய அந்த வீடியோ, பொதுமக்களை அச்சமடையச் செய்தது.

`மனசுல என்ன சிங்கம் பட சூர்யான்னு நினைப்பா?!' - மிரட்டிய ரவுடி; பதிலடி கொடுத்த எஸ்.ஐ

அதையடுத்து, வீடியோ வெளியிட்ட ஜானியின் கூட்டாளியை போலீஸார் தேடிப்பிடித்துக் கைதுசெய்தனர். காட்பாடியில் உள்ள மலைப் பகுதியிலும் தமிழக-ஆந்திர வனப்பகுதியிலும் ஜானி பதுங்கி இருப்பதாக தகவல் மட்டுமே வருகிறது. ஆனால், அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். காவல்துறையினரும் அவரைப் பிடிப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி ஜானி தன்னை கடத்திச் சென்று பணம் பறிக்க முயன்றதாகத் தொழிலதிபர் ஒருவர் திடுக்கிடும் புகாரைக் கூறியிருக்கிறார்.

ஜானியின் புதிய கெட்டப்
ஜானியின் புதிய கெட்டப்

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன் (42) என்ற அந்தத் தொழிலதிபரின் செல் நம்பருக்குக் கடந்த 3-ம் தேதி, ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘நான் ரவுடி ஜானி பேசறேன். 10 லட்ச ரூபாயை நாங்க சொல்ற இடத்துக்குக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போ.. இல்லைன்னா, கடத்தி கொன்னு போட்ருவோம்’ என்று மிரட்டியுள்ளார்.

இதற்கு அலட்டிக் கொள்ளாத அந்தத் தொழிலதிபரை, கடந்த 9-ம் தேதி மீண்டும் போன் செய்து அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார் ஜானி.

இதன் தொடர்ச்சியாக, விருதம்பட்டு பகுதியில் இருந்த தொழிலதிபர் கிரிதரனை கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜானி கடத்தியுள்ளார். அவரின் பாக்கெட்டிலிருந்த 5 ஆயிரம் ரூபாயைப் பறித்துக்கொண்டு சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். பின்னர், `வீட்டுக்கு போன் செய்து 10 லட்ச ரூபாயை எடுத்துட்டு வரச் சொல்' எனக் கூறி அடித்து உதைத்திருக்கிறார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த விருதம்பட்டு பகுதியில் காரிலிருந்து கீழே குதித்த தொழிலதிபர் நேராக அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குள் ஓடினார். இதை எதிர்பார்க்காத ஜானி மற்றும் அவரின் கூட்டாளிகள் காரில் தப்பிச் சென்றனர்.

ரவுடி ஜானி
ரவுடி ஜானி

விருதம்பட்டு போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார் அந்தத் தொழிலதிபர். உடனே, போலீஸார் பாலாற்றுப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு ஜானி இல்லை. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜானியின் நெருங்கிய கூட்டாளியான காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்த சீனிவாசனைக் கைது செய்தனர்.

வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம் பகுதியில் உள்ள மேலும் சில தொழிலதிபர்களிடமும் பணம் கேட்டு ஜானியிடமிருந்து போன் வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜானியைப் பிடிப்பதற்குப் போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு