Published:Updated:

`இன்டர்நெட் போன்கால்; வங்கிக் கணக்கில் பணம்!' - வேலூர் தொழிலதிபர்களை மிரட்டும் ரௌடி ஜானி

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

வேலூரில், செம்மரக் கட்டைகளைக் கடத்தி பதுக்கி வைத்திருந்த பிரபல ரௌடி ஜானியின் கூட்டாளியை போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் ஜானி. இவர் மீது கொலை, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உட்பட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்கவுன்டர் லிஸ்ட்டில் உள்ள ஜானி பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடியே தன் அடியாட்கள் மூலம் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாகச் சொல்கின்றனர் போலீஸார். காட்பாடியில் உள்ள மலைப் பகுதியிலும் தமிழக-ஆந்திர வனப்பகுதியிலும் ஜானி பதுங்கியிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ரௌடி ஜானி
ரௌடி ஜானி

இந்த நிலையில், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய பகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு ஜானி போனில் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. மிரட்டலுக்குள்ளான நபர்கள் ஜானி மீது புகார் கொடுக்க பயந்துகொண்டு அவர் சொல்லும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள ஜானியின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதால், வேலூர் தொழிலதிபர்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜானியின் நெருங்கிய கூட்டாளியும் அவரின் உறவினருமான காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24) என்ற இளைஞரைக் கடந்த 16-ம் தேதி கைதுசெய்த போலீஸார், அவரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுபாஷ் மீதும் காட்பாடி, வேலூர் தெற்கு காவல் நிலையம், திருவலம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, ஆள்கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள ஜானிக்குப் பல வழிகளில் சுபாஷ் உதவி செய்துவந்ததாக காவல்துறையினர் கூறினர்.

ஜானியின் உறவினர் சுபாஷ்
ஜானியின் உறவினர் சுபாஷ்

அதேபோல், ஜானியின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான காகிதப்பட்டறையைச் சேர்ந்த ராஜா (35) என்பவரையும் போலீஸார் நேற்று கைதுசெய்தனர். வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் இரவு ராஜாவின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது, விருதம்பட்டு பகுதியில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து ராஜா பூட்டியே வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் கிடைத்தது.

5 பெண்களோடு தங்கியிருந்த பிரபல ரவுடி! - மாவுக்கட்டு போட்ட வேலூர் போலீஸ்

அங்கு சென்று சோதனையிட்டபோது, ஒரு டன் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. காட்பாடி டி.எஸ்.பி துரைப்பாண்டியன் தலைமையிலான போலீஸார் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். ``இந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்து கடத்திவரப்பட்டன. இதன் பின்னணியில் வேறு யார் யாரெல்லாம் இருக்கிறார்கள். ரௌடி ஜானி எங்கு பதுங்கியிருக்கிறார்’’ என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

ஜானியின் கூட்டாளி ராஜா
ஜானியின் கூட்டாளி ராஜா

இதுகுறித்து, காட்பாடி டி.எஸ்.பி துரைப்பாண்டியனிடம் கேட்டபோது, ``ரௌடி ஜானி தன்னுடைய கூட்டாளிகளிடம் `இன்டர்நெட்’ காலில் பேசுகிறான். அதனால்தான் அவன் பதுங்கியுள்ள இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது துப்பு கிடைக்குமா என்று அலசிக்கொண்டுதான் இருக்கிறோம். தலைமறைவாக இருந்தபடியே பணம் கேட்டு பலரை போனில் மிரட்டிக்கொண்டுதான் இருக்கின்றான். அவனை எப்படியும் கைதுசெய்வோம் ’’ என்றார் உறுதியாக.

`10 லட்சம் பணம் வரலைன்னா, கொன்னே போட்ருவோம்!’- ரவுடி ஜானியால் மிரளும் வேலூர் தொழிலதிபர்கள்
அடுத்த கட்டுரைக்கு