Published:Updated:

`அரை சதம் வழக்குகள்... 25 கொலைகள்..!'- ரவுடியாக ஆசைப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியின் க்ரைம் ஹிஸ்ட்ரி

காக்கா தோப்பு பாலாஜி
காக்கா தோப்பு பாலாஜி

25 கொலைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் வடசென்னையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காக்கா தோப்பு பாலாஜியின் க்ரைம் ஹிஸ்டரி ரொம்பே த்ரில்லானதுதான்.

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

பள்ளியில் மாணவர்களிடம் நீ வருங்காலத்தில் என்னவாக வர ஆசைப்படுகிறாய் என்று கேட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும். டாக்டர், கலெக்டர், இன்ஜினீயர், ஆசிரியர் என விரும்பும் பதவிகளைச் சொல்வார்கள். ஆனால், பள்ளியில் படிக்கும்போதே டீச்சர் கேட்ட கேள்விக்கு பாலாஜியோ, `டீச்சர் நான் ரவுடியாகுவேன்' என்று கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். அப்படிச் சொன்ன பாலாஜிதான், வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்தார்.

 எம்.கே.பி.நகர் காவல் நிலையம்
எம்.கே.பி.நகர் காவல் நிலையம்

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி (36). 9-ம் வகுப்பு வரை படித்த இவர், ஆரம்ப காலத்தில் அடி, தடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்றார். பாலாஜியின் உறவினரான துரையைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. அந்தப் பயம் தன்னைப்பார்த்தாலும் வர வேண்டும் என்று கருதினார் காக்கா தோப்பு பாலாஜி.

முதல் கொலை

அந்தச் சமயத்தில் காக்கா தோப்பு பகுதியில் யுவராஜ் மற்றும் இன்பராஜ் ஆகியோர் வைப்பதுதான் எழுதப்படாத சட்டம். அவர்களின் நட்பு பாலாஜிக்கு கிடைத்தது. மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவைக் கொலை செய்ய யுவராஜ், இன்பராஜ், பாலாஜி ஆகியோர் ஸ்கெட்ச் போட்டனர். புஷ்பா கொலைதான் பாலாஜியின் முதல் கொலை என்கின்றனர் போலீஸார்.

கொலை
கொலை

காவல் நிலையங்களில் பாலாஜியின் பெயர் பிரபலமாகத் தொடங்கியது. இதனால் யார் பெரியவன் என்ற போட்டி பாலாஜிக்கும் யுவராஜிக்கும் இடையே ஏற்பட்டது. இந்தப்போட்டியில் யுவராஜ் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு பாலாஜியின் பெயரோடு காக்கா தோப்பு அடைமொழியானது.

அடுத்தடுத்த கொலைகள்

சிறையில் காக்கா தோப்பு பாலாஜி இருந்தபோது ரவுடி குற நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்மூலம் மணல் மேடு சங்கரின் நட்பு கிடைத்தது. டெல்டா மாவட்டங்களில் மணல் மேடு சங்கரின் எதிரிகளான ஆத்தூர் கண்ணையா மற்றும் அவரின் உறவினர் ஆதி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். கடந்த 2007-ம் ஆண்டு மணல்மேடு சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டார். இது, அவரின் கூட்டாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை
கொலை

வட சென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கா தோப்பு பாலாஜி திட்டமிட்டார். அதற்குத் தடையாக இருந்தவர்களை அடுத்தடுத்து காக்கா தோப்பு பாலாஜி மற்றும் அவரின் கூட்டாளிகள் கொலை செய்தனர்.

மனைவியின் கண் முன்னால் நடந்த கொலை

யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த தலித் பாலுவுக்கும் காக்கா தோப்பு பாலாஜி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு தலித் பாலுவின் தம்பியான சதீஷ் கொலை செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு நடந்த கொலையை இன்னமும் பரபரப்பாக காவல்துறையினர் பேசுவதுண்டு.

அரிவாள்
அரிவாள்

பில்லா சுரேஷ் என்பவரை வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளிகள், பில்லா சுரேஷின் மனைவி கண் எதிரே தலையை வெட்டிக் கொலை செய்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜி (எ) விஜயகுமாரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த இரட்டைக் கொலைகள் வடசென்னை போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. அதோடு காக்கா தோப்பு பாலாஜியின் பெயரும் பிரபலமானது.

`மனசுல என்ன சிங்கம் பட சூர்யான்னு நினைப்பா?!' - மிரட்டிய ரவுடி; பதிலடி கொடுத்த எஸ்.ஐ

மாறிய லைப் ஸ்டைல்

ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்த காக்கா தோப்பு பாலாஜி, செம்மரக்கடத்தல் தொழிலிலும் ஈடுபடத் தொடங்கினார். செம்மரக்கடத்தலில் மையப் பகுதியான மாதவரத்தில் செம்மர பிசினஸ் செய்பவர்களுடன் காக்கா தோப்பு பாலாஜிக்கு அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு பாலாஜியின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. அவரின் லைஃப் ஸ்டைலே மாறியது.

செம்மரக்கட்டைகள்
செம்மரக்கட்டைகள்

சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, காக்கா தோப்பு போலீஸார், வழக்குகள் நிலுவையில் உள்ள காவல் நிலையங்கள் என அனைத்து போலீஸாரின் பார்வையும் காக்கா தோப்பு பாலாஜி மீது விழுந்தது. சிறைக்குச் செல்வதும் பிறகு வெளியில் வருவதும் காக்கா தோப்பு பாலாஜிக்கு வழக்கமாகிவிட்டது. தமிழகம் முழுவதும் காக்கா தோப்பு பாலாஜி மீது 25 கொலை வழக்குகள், ஆள்கடத்தல், அடிதடி, பணம் கேட்டு மிரட்டல் என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் தேடிவந்தனர். ராயப்பேட்டை பகுதியில் போலீஸார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கினர். எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. காவல்துறையினரிடம் காக்கா தோப்பு பாலாஜி சிக்கிய தகவல் அவரின் கூட்டாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 எம்.கே.பி.நகர் காவல் நிலையம்
எம்.கே.பி.நகர் காவல் நிலையம்

காக்கா தோப்பு பாலாஜி குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியை நீண்ட நாள்களாக தேடிவந்தோம். ராயப்பேட்டை பகுதியில் அவர் வரும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரைப் பிடித்துள்ளோம். அவர் மீது பெரியமேடு, ஏழுகிணறு, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் கொலை உட்பட 22 வழக்குகளும் யானைக்கவுனி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும் உள்ளன. இதுதவிர இன்னும் சில காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் காக்கா தோப்பு பாலாஜி மீது 25 கொலை வழக்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன"என்றார்.

காக்கா தோப்பு பாலாஜி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``பாலாஜியை என்கவுன்டர் செய்யப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவரைப்பிடித்த போலீஸார் முதலில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். தற்போதுதான் அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை போலீஸார் வெளியில் கூறியுள்ளனர்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு