Published:Updated:

சென்னை: ரௌடிகளுக்குள் நடக்கும் வார்... மதுரை பாலாவைக் கொல்ல சிறையிலிருந்தே ஸ்கெட்ச்?!

ரௌடி மதுரை பாலா

சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில்வைத்து, ரௌடி மதுரை பாலாவைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டதன் பின்னணியில் இரண்டு ரௌடிகளுக்குள் நடந்துவரும் முன்விரோதமே காரணம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னை: ரௌடிகளுக்குள் நடக்கும் வார்... மதுரை பாலாவைக் கொல்ல சிறையிலிருந்தே ஸ்கெட்ச்?!

சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில்வைத்து, ரௌடி மதுரை பாலாவைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டதன் பின்னணியில் இரண்டு ரௌடிகளுக்குள் நடந்துவரும் முன்விரோதமே காரணம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ரௌடி மதுரை பாலா

சென்னை பல்லாவரம், தென்னேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை பாலா என்கிற பாலமுருகன். பிரபல ரௌடியான இவர்மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்புத் தேடி பாலாவின் குடும்பம், சென்னைக்கு வந்தது. இந்த நிலையில், பாலா, அரும்பாக்கத்திலுள்ள பிரபல ரௌடி ஒருவரின் வலதுகரமாக மாறினார். அதனால் பாலாவின் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. இந்த நிலையில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கடைக்காரர் ஒருவரை அரிவாளால் வெட்டி மாமூல் கேட்ட புகாரில் மதுரை பாலா கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அருண்
அருண்

இதற்கிடையில் கடந்த 4.3.2021-ம் தேதி சென்னை அசோக்நகரில் மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரௌடி சிவக்குமார் கொலைசெய்யப்பட்ட வழக்கிலும் மதுரை பாலா கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணைக்காக வேலூர் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்துக்கு 5.9.2022-ம் தேதி மதுரை பாலா அழைத்துவரப்பட்டார். அன்றைய தினம் மதியம் 3 மணியளவில் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் மதுரை பாலாவும், அவரை அழைத்து வந்த ஆயுதப்படை போலீஸாரும் நின்றுகொண்டிருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் மதுரை பாலா, அவரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸார் மீது பெப்பர் ஸ்பீரே அடித்தனர். அதனால் போலீஸார் நிலைகுலைந்த சமயத்தில் கத்தியை எடுத்து மதுரை பாலாவை அந்தக் கும்பல் தாக்க முயன்றது. அதைப் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் பாரதி தடுத்தார். இதில் அவரின் கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து சக போலீஸார், மதுரை பாலாவைக் காப்பாற்றியதோடு அவரைக் கொலை செய்ய முயன்ற மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். இந்தத் தகவல் கோட்டூரபுரம் காவல் நிலையத்துக்குத் தெரியவந்ததும் மூன்று பேரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்துல் மாலிக்
அப்துல் மாலிக்

விசாரணையில் அவர்களின் பெயர் சென்னை ஷெனாய்நகரைச் சேர்ந்த சக்திவேல், அருள்பிரசாத், குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் மாலிக் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து கத்திகள், பெப்பர் ஸ்பீரே ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மூன்று பேரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், ``மதுரை பாலாவின் தலைவனான அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவருக்கும், அவரின் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த எதிரணியினருக்கும் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்துவருகிறது. இந்த நிலையில் மதுரை பாலா தலைமையில் ஒரு புதிய டீம் உருவானது. அதற்கு அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரௌடியுடன் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர்கள் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த எதிரணியினருடன் கூட்டணி அமைத்தனர்.

இந்த ரகசியத் தகவல் சிறையிலிருக்கும் மதுரை பாலாவுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் தனக்கு எதிராகச் செயல்படுவோரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இந்தத் தகவல் மதுரை பாலாவின் எதிரணியினருக்குத் தெரியவந்தது. அதனால் அவர்களும் மதுரை பாலாவை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். ரௌடி சிவக்குமார் கொலை வழக்கு விசாரணைக்காக மதுரை பாலா சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வரும் தகவல் தெரிந்ததும், அங்கு வைத்து அவரைக் கொலைசெய்ய எதிரணியினர் திட்டம் போட்டனர். அதன்படி நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் காத்திருந்தனர்.

மதுரை பாலா
மதுரை பாலா

நீதிமன்றத்துக்கு வந்த மதுரை பாலாவைச் சுற்றி போலீஸார் இருந்ததால் அவரைத் தனியாக அழைத்து, கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மீது பெப்பர் ஸ்பீரேவை அடித்துவிட்டு மதுரை பாலாவைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. மதுரை பாலாவைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். முக்கியக் குற்றவாளிகளான இரண்டு பேரைத் தேடிவருகிறோம்.

ஆரம்பத்தில் மதுரை பாலாவும் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரும் நட்பாகத்தான் இருந்துள்ளனர். மதுரை பாலாவுக்கு அடுத்து யார் என்ற போட்டியில்தான் மதுரை பாலா தன்னுடைய வலதுகரமாக ஒருவரை வளர்த்துவிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தனியாக ஒரு டீமாக மாறி, மதுரை பாலாவுக்கு எதிரான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுரை பாலாவின் வலதுகரமாக இருப்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் இன்னொருவர் வெளியில் இருக்கிறார். அவர் மூலம் இன்னொரு சம்பவம் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை மூலம் எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. அதனால் அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்" என்றனர்.