Published:Updated:

`சரணடைந்துவிடுகிறேன்; வீட்டுக்கு வாருங்கள் - எஸ்.ஐயை தாக்கிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

பிரபல ரவுடியான `தாதா மணிகண்டன்’ விழுப்புரம் காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

manikandan
manikandan

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில்லை ஒட்டிய குயிலாப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தாதா மணிகண்டன், வயது 44. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 கொலை வழக்குகள், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி ராஜ்குமார். தொழில் போட்டி காரணமாக இரு தரப்பினருக்குமிடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறில் இதுவரை சுமார் 10 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார் மணிகண்டன்.

SP Jayakumar
SP Jayakumar

சமீபத்தில் தனக்குப் பணம் கொடுக்காமல் தனது பரம எதிரியான ராஜ்குமாருக்கு பணம் கொடுத்ததோடு ஆதரவாக செயல்பட்டதால் ரியல் எஸ்டேட் அதிபர் ரிலையன்ஸ் பாபு மற்றும் காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தாதா மணிகண்டனின் நண்பர் சங்கர் கணேஷ் மூலம் படுகொலை செய்யப்பட்டார் ரிலையன்ஸ் பாபு. இந்தக் கொலையை தாதா மணிகண்டனே நேரில் நிகழ்த்தியாக காவல்துறை தரப்பில் அப்போது கூறப்பட்டது. இந்தக் கொலை நடந்த 10 நாள்களில் காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையிலும் தாதா மணிகண்டன் தலையீடு இருந்தது தெரியவந்தது.

அவர் மீதிருந்த 2 வாரன்ட் மற்றும் ரிலையன்ஸ் பாபு கொலை வழக்கு தொடர்பாக அவரைக் கைது செய்ய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான டீம் மணிகண்டனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியது. சென்னை கொரட்டூரில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்ததும் அவரைச் சுற்றி வளைத்தது காவல்துறை. அப்போது ``நான் சரணைடைந்து விடுகிறேன். வீட்டுக்குள் வாருங்கள். உடைமாற்றிக்கொண்டு வருகிறேன்” என்று ஆரோவில் காவல் நிலைய எஸ்.ஐ பிரபு மற்றும் தனிப்படையைச் சேர்ந்த எஸ்.ஐ பிரகாஷ் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.

`சரணடைந்துவிடுகிறேன்; வீட்டுக்கு வாருங்கள் - எஸ்.ஐயை தாக்கிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

அப்போது திடீரென ஃப்ரிட்ஜுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியால் எஸ்.ஐ பிரபுவின் தலையில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பித்து ஓட முயற்சி செய்தார் மணிகண்டன். அப்போது அருகிலிருந்த எஸ்.ஐ பிரகாஷ் தனது துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் அதே இடத்தில் மணிகண்டன் உயிரிழந்தார். தலையில் பலமாக வெட்டுப்பட்ட எஸ்.ஐ பிரபு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.