Published:Updated:

கடலூர்: துண்டிக்கப்பட்ட தலை; பழிக்குப் பழி கொலை; போலீஸ் என்கவுன்ட்டர்! - என்ன நடந்தது?

கொலை செய்யப்பட்ட ரௌடி வீரா
கொலை செய்யப்பட்ட ரௌடி வீரா

கடலூரில் பிரபல ரௌடிகளில் ஒருவரை வெட்டிக் கொலை செய்ததுடன், அவரது தலையையும் தூக்கிச் சென்ற கிருஷ்ணா என்பவரை அடுத்த சில மணி நேரத்தில் இரவோடு இரவாக என்கவுன்ட்டர் செய்திருக்கிறது கடலூர் மாவட்டக் காவல்துறை.

கடலூர், சுப்புராயலு நகர் குப்பம்குளத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் வீரவேங்கையன் (எ) வீரா. தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவராக இருக்கும் இவர், கடலூர் சிதம்பரம் சாலையிலுள்ள திரையரங்குக்கு அருகில் பழக்கடையும் வைத்து, நடத்திவருகிறார். இவர்மீது கடலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நேற்று இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை மூடிக்கொண்டு தனது புல்லட் வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். வீட்டுக்கு வெளியில் தனது புல்லட்டை நிறுத்திவிட்டு அதன்மீது அமர்ந்திருந்திருக்கிறார்.

போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட கிருஷ்ணா
போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட கிருஷ்ணா

அப்போது அவரைச் சுற்றி வளைத்த ஐந்து பேர்கொண்ட மர்மக் கும்பல் ஒன்று கட்டையால் தாக்கியிருக்கிறது. அதில் மயக்கமாகி கீழே விழுந்த வீராவின் தலையைத் துடிக்கத் துடிக்கக் கொடூரமாக அறுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியது அந்தக் கும்பல். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், தலையில்லாத வீராவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து குற்றவாளிகளைக் கைதுசெய்ய தனிப்படையும் அமைத்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ், அனைத்துக் காவல் நிலையங்களையும் அலர்ட் செய்தார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வீராவை முன்பகை காரணமாக கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாவும், அவரது நண்பர் விக்கி என்ற விக்னேஷ்வரன் என்பதும் தெரியவந்தது. குற்றவாளிகள் தப்பிச் சென்றது குறித்து அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தலை துண்டிக்கப்பட்ட வீராவில் உடல்
தலை துண்டிக்கப்பட்ட வீராவில் உடல்

அதன் அடிப்படையில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை குடுமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணா உள்ளிட்ட ஆறு பேரைச் சுற்றி வளைத்ததாகக் கூறும் காவல்துறை, அப்போது உதவி ஆய்வாளர் தீபனை கிருஷ்ணா அரிவாளால் தாக்க முயன்றபோது, அவரை என்கவுன்ட்டர் செய்ததாகவும் சொல்கிறது . கிருஷ்ணாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கும் காவல்துறை, மற்றவர்களைக் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து வீராவின் தலையையும் கைப்பற்றியிருக்கிறது.

மாவோயிஸ்ட் என்கவுண்டர்; வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலை; உபா வழக்கு... சர்ச்சையில் பினராயி விஜயன்!

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``என்கவுன்ட்டர் செய்யப்பட்ட கிருஷ்ணாவும், அவரால் கொலை செய்யப்பட்ட வீராவும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏரியாவில் யார் பெரிய ரௌடி என்ற விவகாரத்தில் இருவருக்கும் இடையே அவ்வப்போது போட்டியும் மோதலும் நிலவிவந்திருக்கிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரௌடி சதீஷ் என்பவர் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்திருக்கிறார். சதீஷ் தன் பக்கம் வந்தால் தனது பலம் கூடிவிடும் என்று நினைத்த வீரா, அதற்காகத் தன்னுடன் இணைந்துவிடும்படி அடிக்கடி சதீஷை வற்புறுத்தியிருக்கிறார்.

கிருஷ்ணாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் எஸ்.ஐ திலீபன்
கிருஷ்ணாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் எஸ்.ஐ திலீபன்

அதற்கு ஒப்புக்கொள்ளாத சதீஷ், தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவந்திருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த வீரா கடந்த 2015-ம் ஆண்டு சதீஷை வெட்டிப் படுகொலை செய்தார். தன்னுடைய நண்பனைக் கொலை செய்த வீராவின் தலையை வெட்டி சதீஷின் வீட்டில்வைத்து பழிக்குப் பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு தக்க தருணத்துக்காகக் காத்திருந்தார் கிருஷ்ணா என்கிறார்கள்.

எப்போதும் தன்னைச் சுற்றி 10 பேருடன் வலம் வரும் வீரா, நேற்றிரவு தனியாக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதைப் பயன்படுத்திக்கொண்ட கிருஷ்ணா தலைமையிலான கும்பல் முதலில் அவரைக் கட்டையால் தாக்கியிருக்கிறது. அதில் மயங்கிக் கீழே விழுந்த வீராவின் தலையைக் கத்தியால் அறுத்து எடுத்த கிருஷ்ணா, அதை சதீஷின் வீட்டு வாசலில் வீசிச் சென்று சபதத்தை நிறைவேற்றியிருக்கிறது” என்கின்றனர்.

பழிக்குப் பழி; பட்டாக்கத்தி; அதிரவைத்த 3 பேர்! - பட்டுக்கோட்டையைப் பதறவைத்த கொலை

ஒரே இரவில் நடைபெற்ற ரௌடியின் கொலை; அடுத்த சில மணி நேரங்களில் அதற்குக் காரணமானவர் மீது என்கவுன்ட்டர் நிகழ்த்தப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தற்போது கிருஷ்ணாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் எஸ்.ஐ தீபன், கடந்த 2019-ம் ஆண்டு வியாசர்பாடியில் ரௌடி வல்லரசுவை என்கவுன்ட்டர் செய்த டீமில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு