Published:Updated:

முன்விரோதம்; சுற்றிவளைத்த 10-க்கும் மேற்பட்டோர்! தஞ்சை அருகே ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூரில் கொலை வழக்கில் ஒன்றில் கைதாகி ஜாமீனில் வந்த ரவுடி ஒருவர் இன்னும் இரண்டு நாள்களில் சிறை செல்ல இருந்த நிலையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

சுளுக்கி மணிகண்டன்
சுளுக்கி மணிகண்டன்

தஞ்சாவூர் அருகே உள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் ரவுடி சுளுக்கி என்கிற மணிகண்டன். இவர் மீது சில வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் நடந்த கிடா வெட்டு திருவிழாவில் சிவக்குமார் என்பவர் தரப்பிற்கும், டாக்டர் என்கிற டாக்டர் ராஜா தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன. இந்த பிரச்னையில் ரவுடி மணிகண்டன் சிவக்குமாருக்கு ஆதரவாக டாக்டர் ராஜா தரப்பினர் சிலரை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை
கொலை

இந்தநிலையில் திருச்சி சிறையில் இருந்து ஒரு மாதம் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் மணிகண்டன். இவரது மனைவி மலேசியாவில் பணிபுரிந்து வருவதால், சிறையில் இருந்து வந்த மணிகண்டன் வீட்டில் இருந்த ஆடு, மாடுகளை கவனித்து வந்திருக்கிறார். ஜாமீன் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்ல இன்னும் இரண்டு நாள்களே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று ஆடுகளுக்கு புல் வெட்டி வருவதற்காக கூத்தஞ்சேரி பகுதிக்கு சென்றுள்ளார் மணிகண்டன். அப்போது 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மணிகண்டனை தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

`ஸ்டார்ஹோட்டல்; பாலியல் வன்கொடுமை; எம்.எல்.ஏ மகன் வேடம்!' - பெங்களூர் போலீஸை அதிரவைத்த தமிழக இளைஞர்

இந்த தகவல் பரவ ஊர் மக்கள் அந்த இடத்தில் குவிய ஆரம்பித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுளுக்கி மணிகண்டன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மலேசியாவில் உள்ள மணிகண்டன் மனைவி வந்த பிறகே உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.