Published:Updated:

`ரவுடிதான் கெத்து!'- காவலரை வெட்டிய ரஞ்சித் கொலையில் திடீர் திருப்பம்

எஸ்.மகேஷ்

ரவுடிகளுக்குள் கெத்து காட்டிய மோதலில் காவலரை வெட்டிய ரவுடி ரஞ்சித், கூட்டாளிகள், நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரவுடி ரஞ்சித்
ரவுடி ரஞ்சித்

சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (23). ரவுடியான இவர் மீது பூந்தமல்லி, மதுரவாயல் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறிப்பு வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பூந்தமல்லியில் தலைமைக் காவலர் அன்பழகனை அரிவாளால் ரவுடி ரஞ்சித் வெட்டினார். அந்த வழக்கில் ரஞ்சித் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட ரவுடி ரஞ்சித்
கொலை செய்யப்பட்ட ரவுடி ரஞ்சித்

இந்தநிலையில், நெற்குன்றம் ஏ.வி.கே.நகரில் செயல்படும் அட்டை கம்பெனி அருகே ரவுடி ரஞ்சித் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரவுடி ரஞ்சித்துக்கும் அவரின் கூட்டாளிகளுக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்ற மோதல் நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று ரவுடி ரஞ்சித்தும் அவரின் கூட்டாளிகளும் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் ரவுடி ரஞ்சித், நான்தான் பெரிய ரவுடி, காவலரையே தைரியமாக தனிஆளாக வெட்டியவன், ரவுடிதான் கெத்து, நீங்கள் எல்லாம் வேஸ்ட் என்று உளறியுள்ளார். இதனால் போதையில் இருந்த ரஞ்சித்தின் கூட்டாளிகள் ஆத்திரமடைந்தனர்.

Representational image
Representational image

இதையடுத்து அவர்கள் பீர் பாட்டிலை எடுத்து ரஞ்சித்தின் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரஞ்சித்தின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரஞ்சித்தின் நண்பர்களான மண்ட தினேஷ், ஆகாஷ் என இருவரைப் பிடித்துள்ளோம். இவர்களிடம் நடத்திய விசாரணையில் `ரவுடிதான் கெத்து' என்று ரஞ்சித் அடிக்கடி சொல்வதுண்டு. தன்னை பெரிய ரவுடி என்றுகூறி எங்களை வெறுப்பு ஏற்றுவார். இதனால்தான் ரஞ்சித்தை நாங்கள் பீர்பாட்டிலால் அடித்தும் கல்லை தலையில் தூக்கிப் போட்டும் கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இந்தக் கொலையில் மேலும் 4 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று மது, கஞ்சா போதையில் இருந்துள்ளார் ரஞ்சித். அதைப் பயன்படுத்திய அவரின் நண்பர்கள் ரஞ்சித்தை கொலை செய்துள்ளனர்" என்றார்.

நான்தான் பெரிய ரவுடி, காவலரையே தைரியமாக தனிஆளாக வெட்டியவன், ரவுடிதான் கெத்து, நீங்கள் எல்லாம் வேஸ்ட் என்று ரஞ்சித் உளறியுள்ளார்.
போலீஸ்

`திமிரு பிடிச்சவன்' படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் தம்பி ரவுடி. அவர், `ரவுடிதான் கெத்து' என்று விஜய் ஆண்டனியிடம் சொல்லும் காட்சி இடம்பிடித்திருக்கும். ரவுடி ரஞ்சித் கொலையிலும் அவர், `ரவுடிதான் கெத்து என்று தன்னுடைய கூட்டாளிகளுடன் கூறியதோடு தன்னை பெரிய ரவுடி' என்று கூறி பெருமைப்பட்டுள்ளார். இந்த மோதலில்தான் ரவுடி ரஞ்சித் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.