Published:Updated:

4 வெட்டு; கொலையைக் காட்டிக்கொடுத்த தடயம்! - நாள் முழுவதும் சுடுகாட்டில் சடலமாகக் கிடந்த ரவுடி

எஸ்.மகேஷ்

சென்னை காவல் நிலைய சரித்திர குற்றப்பதிவேடு ரவுடியான வசந்தகுமாரை சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று கொலை செய்துள்ளனர். பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

Vasantha kumar
Vasantha kumar

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பெரிய கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (21). போரூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. கடந்த 20-ம் தேதி காலையில் வீட்டைவிட்டு வெளியில் சென்ற வசந்தகுமார், பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்சியடைந்த அவரின் மனைவி வனிதா, கணவரைப் பல இடங்களில் தேடினார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை.

21-ம் தேதி பிற்பகலில் வசந்தகுமார், வழக்கமாக மதுஅருந்தும் வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு வனிதா மற்றும் அவரின் உறவினர்கள் சென்றனர். தகனமேடையின் அருகில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் வசந்தகுமார் இறந்துகிடந்தார். அதைப்பார்த்த வனிதா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

burial ground
burial ground

இதையடுத்து, மாங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணைக் கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சம்பத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த வசந்தகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், ``கடந்த மார்ச் 31-ம் தேதி போரூர் ஏரியில் ரவுடியும் லாரி டிரைவருமான ராகேஷ் (35) என்பவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கில் வசந்தகுமார் மற்றும் அவரின் கூட்டாளிகளை போரூர் போலீஸார் கைதுசெய்தனர். ஒரு மாதத்துக்கு முன்பு ஜாமீனில் வந்துள்ளார் வசந்தகுமார். இந்தச் சமயத்தில்தான் சுடுகாட்டுப் பகுதியில் வசந்தகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றவர்,

Representational image
Representational image

தொடர்ந்து பேசும்போது, ``வசந்தகுமார் மீது கொலை வழக்கு, வழிப்பறி என 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போரூர் ஏரியில் ராகேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் வசந்தகுமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஜாமீனில் வெளியில் வந்த வசந்தகுமாரை `ஸ்கெட்ச்' போட்டு ஒரு கும்பல் கொலை செய்துள்ளது.

வழக்கமாக வசந்தகுமார் மதுஅருந்தும் சுடுகாட்டுக்கு அந்தக் கொலைக் கும்பல் சென்றுள்ளது. பிறகு நடந்த தகராறில் வசந்தகுமாரின் கழுத்தை அறுத்ததோடு தலையில் இரண்டு இடங்களில் வெட்டியுள்ளனர். பிறகு, வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுதவிர வசந்தகுமாரின் உடலில் ஆங்காங்கே கத்திக்குத்துக் காயங்கள் உள்ளன. வசந்தகுமார் போதையில் இருக்கும்போதுதான் இந்தக் கொலை நடந்துள்ளது. மேலும், கடந்த 21-ம் தேதி மது அருந்துவதற்காக நண்பருடன் வசந்தகுமார் சென்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மதுவிருந்துக்கு அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

Vasanthakumar
Vasanthakumar

கொலை நடந்த இடத்தில் 24 மணி நேரத்துக்கு மேல் அதாவது ஒரு நாளுக்கு மேல் சடலமாகக் கிடந்துள்ளார் வசந்தகுமார். சுடுகாடு பகுதி என்பதால் ஆள்நடமாட்டம் இல்லாததால் அவர் கொலை செய்யப்பட்ட தகவல் உடனடியாக வெளியில் தெரியவில்லை. அவரைத் தேடி அவரின் உறவினர்கள் சுடுகாட்டுக்குச் சென்றபோதுதான் கொலை நடந்தது வெளியில் தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாகவே இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது" என்றனர் விரிவாக.

வசந்தகுமாரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், கொலையாளிகளைப் பிடிக்க மோப்பநாய் டைசனை கொலை நடந்த இடத்துக்கு அழைத்துவந்தனர். வசந்தகுமாரின் சடலம் கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது டைசன். ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனால், டைசன் சென்ற இடத்திலிருந்து கொலையாளிகள் பைக் அல்லது காரில் சென்றிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளில் கொலையாளிகள் சிக்கியுள்ளார்களா என்றும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

Burial ground
Burial ground

இதற்கிடையில் இந்தக் கொலையில் சுடுகாட்டுப் பகுதியிலிருந்து போலீஸாருக்கு சில முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளன. அதனடிப்படையில் ராகேஷ் கூட்டாளிகள் உட்பட 5 பேரைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தியோடு சுற்றித்திரிந்த வசந்தகுமார், கத்தியாலேயே வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.