Published:Updated:

சாப்பிடும்போது வந்து விழுந்த வெடிகுண்டு! - இரட்டை கொலைக்காகப் பழிதீர்க்கப்பட்ட சிதம்பரம் ரவுடி?

ஜி.சதாசிவம்

சிதம்பரத்தில் நேற்று இரவு `கோழி' பாண்டியன் என்ற பிரபல ரவுடி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மர்மக் கும்பலால் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

Kozhi Pandiyan
Kozhi Pandiyan

சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்கிற கோழி பாண்டியன்(40). இவர் மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அடிதடி உட்பட 10 -க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்தநிலையில், நேற்று இரவு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவருடன் அண்ணாமலை நகர் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று, கோழி பாண்டியன் மீது வெடி குண்டை வீசியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தால் ஹோட்டலில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். இதனைத் தொடர்ந்து அரிவாளால் பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது அந்தக் கும்பல்.

Kozhi Pandiyan (Murder spot)
Kozhi Pandiyan (Murder spot)
Vikatan

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாமலை நகர் போலீஸார் ரத்த வெள்ளத்தில் இருந்த பாண்டியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த இடத்தில் கிடந்த வெடிக்காத வெடிகுண்டு, பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட எஸ்.பி. அபிநவ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

Kozhi Pandiyan
Kozhi Pandiyan

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமார், ராஜேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். `இந்த இரட்டைக் கொலை வழக்கில் திட்டம் தீட்டிக் கொடுத்ததே கோழி பாண்டியன்தான்' என எதிர்த்தரப்பினர் கருதிவந்தனர். அதற்குப் பழிதீர்க்கும்விதமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது பெண் விவகாரம் காரணமா எனப் பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.